Last Updated : 05 Apr, 2022 01:50 PM

8  

Published : 05 Apr 2022 01:50 PM
Last Updated : 05 Apr 2022 01:50 PM

கண்ணைக் காக்கும் ஆசிரியர்கள் - பள்ளிக் கல்வியில் புதிய முன்னெடுப்பு

ஆறாம் வகுப்பு படிக்கும் சுமதியால் சரியாகப் பாடங்களைப் படிக்க முடியவில்லை. ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போடுவதை அவளால் சரியாகப் பார்க்க முடிந்தால்தானே. அதனால் படிப்பில் மந்தமாகவே இருந்தாள். அவளுக்கு இருந்த பார்வை குறைபாடுதான் அதற்குக் காரணம் என்பது அவளுக்குத் தெரியாது. அது தெரியாமல் பெற்றோரும் அவளை 'ஒழுங்கா படி', 'நல்லா படி' என்று எந்நேரமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை அவள் பள்ளிக்கு வந்த மருத்துவ குழுவினர்தான் அவளுடைய பார்வைக் குறைவினை கண்டறிந்தார்கள். கண்ணாடி போட்ட பிறகு அவளுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கண்ணாடி போட்டிருப்பதால் தற்போது அவளால் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப் போடுவதைத் தெளிவாகப் பார்த்து பாடங்களையும் நன்றாகக் கவனிக்க முடியும்.

பல பள்ளிகளில் சுமதி போன்று பலர் உள்ளனர். கரும்பலகையில் எழுதிப் போடுவதைத் தங்களால் தெளிவாகப் பார்க்க முடியாததற்குப் பார்வைக்குறைவுதான் காரணம் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. பிள்ளைகள் பிரச்சினைகளை வீட்டில் ஒருவேளை சொன்னாலும் பெற்றோர்களின் இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. வளரும் இந்த பருவத்தில்தான் குழந்தையின் நடத்தைப் பண்புகள் (Behavioural Characters) நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே இந்த வயதில் ஏற்படும் பார்வைக்குறைவு இந்த பண்புகளின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கின்றன. குழந்தையின் பார்வைக்குறைவினை உரிய நேரத்தில் சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழக அரசின் முன்னெடுப்பு

கண்ணாடி அணிவதன் மூலம் பார்வைக்குறைவு உள்ள மாணவர்களின், நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை, கவனிக்கும் திறன், தொடர்புத் திறன் அனைத்தும் மேம்படும். நன்றாகப் பார்க்கவும் முடியும். இதனால் படிப்பிலும் சிறந்து விளங்க முடியும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டே தமிழக அரசின் 'பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்ட'த்தைக் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு வட்டாரத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பார்வையினையும் பரிசோதனை செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. காரணம் வட்டாரத்துக்கு ஒரு கண்மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) மட்டுமே இருக்கிறார். இந்தக் குறையைக் களையும் விதமாக, இந்தத் திட்டத்தில் மாணவர்களின் பார்வைக்குறைவினை கண்டறியப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

பள்ளி ஆசிரியர்களால் இது எப்படி முடியும் என்று சந்தேகம் நமக்கு எழலாம். ஆனால், நெதர்லாந்தைச் சேர்ந்த பொதுச் சுகாதாரத்துறை நிபுணர் மருத்துவர். ஹான்ஸ்லிம்பர்க், மாணவர்களின் பார்வை பரிசோதனைத் திட்டத்தில் பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்தி வெற்றி அடைந்துள்ளார். சேலம் உட்பட நாட்டில் ஐந்து மாவட்டங்களில் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தியதிலும் அற்புதமான பலனை இத்திட்டம் தந்தது.

இதன்படி பார்வை பரிசோதனை செய்வதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களின் பார்வையைப் பரிசோதித்து (First Level Screening) பார்வைக்குறைவு உள்ள மாணவர்களைக் கண்டறிவார்கள். அப்படி பார்வைக் குறைவு உள்ளதாகக் கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலைய கண்மருத்துவ உதவியாளர்கள் தேவையான கண்ணாடி பரிசோதனை செய்வார்கள். இதனால் குறைவான காலகட்டத்தில் அனைத்து மாணவர்களின் கண்பார்வையையும் பரிசோதனை செய்ய முடியும். இதனை பெரும்பாலான நாடுகள் பின்பற்றிவருகின்றன.

2009 ஆம் ஆண்டுக்கு முன்புவரை பிள்ளைகளின் பார்வைக்குறைவினை கண்டுபிடித்து கண்ணாடி வழங்குவதில் மாநிலம் தழுவிய ஒருமித்த திட்டம் இல்லாமல் இருந்தது. இவ்விஷயம் பொதுச்சுகாதாரத்துறை இயக்குநர் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தமிழக அரசின் 'பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்' தொடங்கப்பட்டது. அண்மையில்கூட பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் அவர்கள் 'பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்' குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டு மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இத்திட்டத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கி, பார்வைக்குறைவுள்ள மாணவர்களுக்கு விலையில்லா கண்ணாடியையும் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டதை அறிந்த பிற மாநில மருத்துவத் துறையினர் நம் மாநிலத்துக்கு வருகை தந்து இத்திட்ட வரைவினை கேட்டுப் பெற்றுச் சென்றதாக அன்றைய பொதுச்சுகாதாரத்துறை இயக்குநர் ஒருமுறை தெரிவித்தார்கள். இத்திட்டம் இன்றும் தொடர்வதே இத்திட்டத்தின் வெற்றியாகும்.

கண்பாதுகாப்பு மன்றம்.

அனைத்து பள்ளிகளிலும் கண்பாதுகாப்பு மன்றத்தைத் தொடங்குவது நல்ல பலனைத் தரும். வகுப்புக்கு தலா ஒரு மாணவர் வீதம் அனைத்து வகுப்பு மாணவர்களையும் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) இடம்பெறச் செய்யவேண்டும். குறிப்பாகக் கண்ணாடி அணிந்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தொடர்ந்து கண்ணாடி அணியும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகச் சிறப்புப் பரிசு அளித்து காலை வழிபாட்டின்போது பாராட்டலாம். இதன்மூலம் கண்ணாடியைத் தொடர்ந்து அணியவேண்டும் என்ற எண்ணம் பிறருக்கும் ஏற்படும். மாணவர்கள் கண்ணாடியைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. தொடர்ந்து அணிந்தால்தானே பலன் கிடைக்கும்.

இந்த மன்றத்தின் மூலம் கண்பாதுகாப்பின் அவசியத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்லலாம். இனிமேல் பார்வை குறைபாடு வராமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்துப் பேசலாம். முக்கியமாக செல்போன் கட்டுப்பாடு. ஏனெனில் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவதால் பார்வைக்குறைவு ஏற்படுவதாகப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே தேவைக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அடிக்கடி இதுபற்றி பேசிவர வேண்டும்.

பார்வைக்குறைவு இனி ஏற்படாமல் தடுக்கவும் ஏற்கனவே பார்வைக்குறைவு உள்ளவர்களுக்கு லென்சு பவர் அதிகரிக்காமல் இருப்பதற்கும் பிள்ளைகளை அடிக்கடி வீட்டுக்கு வெளியே வெயிலில் விளையாடச் சொல்ல வேண்டும். பிள்ளைகளின் கண்ணில் வெயில் படுவதன் மூலம் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவருவதால் மாணவர்களை வெயிலில் விளையாடச் சொல்ல வேண்டும். பள்ளியிலேயே காலை இரண்டாவது பாட வேளை முடிந்த பிறகு பிள்ளைகளை சுமார் அரை மணிநேரமாவது வகுப்புக்கு வெளியே போய் விளையாடச் சொல்ல வேண்டும். பார்வை குறைபாடு ஏற்பட்ட பிறகு கஷ்டப்படுவதைக் காட்டிலும் வராமல் தடுப்பதற்கு இப்படிப் போய் விளையாடச் செய்வது அவ்வளவு ஒன்றும் கடினமான செயல் அன்று. வரும் கல்வியாண்டிலேயே அரசு இதை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்
.
பிரகாசிக்கும் மாணவர்களின் எதிர்காலம்

பார்வைக்குறைவுக்குத் தொடக்கத்திலேயே கண்ணாடி போடாவிட்டால் நாளடைவில் கண் சோம்பேறிக்கண்ணாகிவிடும். அதற்குப் பின் கண்ணாடி போட்டாலும் பார்வை கிடைக்காது. பார்வை பாதித்துவிட்டால் பிள்ளையால் படிக்க முடியாமல் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுவிடும். எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். எனவே தான் பிள்ளைகளின் பார்வைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது.

நாட்டின் எதிர்காலம் வளரும் இளம் பிள்ளைகளின் கையில்தான் இருக்கிறது. அவர்களுடைய தொலைநோக்கு பார்வை சிறந்து விளங்க அவர்களுக்குத் தெளிவான கண்பார்வை தேவை. அதற்கு இந்த 'பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்' மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. மாணவர்களின் பார்வையை மட்டுமல்லாமல் எதிர்காலத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது முன்னோடித்திட்டமான தமிழக முதல்வரின் 'பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்'.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x