Published : 23 Apr 2016 02:33 PM
Last Updated : 23 Apr 2016 02:33 PM

அச்சுறுத்தும் மருத்துவக் கழிவு!

தமிழகத்தின் காடுகள் ஆக்கிரமிப்பு, வேட்டை என்று பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. இவற்றுக்கு இடையே புதிய பிரச்சினையாக முளைத்துள்ளது காடுகளில் உயிரி மருத்துவக் கழிவு கொட்டப்படுவது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பேரல்களை ஏற்றிய இரண்டு லாரிகளை லோயர்கேம்ப் - குமுளி மலைச்சாலையில் வனத்துறையினர் பிடித்தனர். ஒரு லாரி தப்பிவிட, ஒன்று மட்டுமே சிக்கியது.

பேரல்களைத் திறந்த வனத்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பேரல்கள் முழுக்க நோய்க் கட்டிகள், சதைப் பிண்டங்கள், வெட்டப்பட்ட மனித உறுப்புகள் எனத் துர்நாற்றம் தூக்கியது. சரியான சட்ட வழிகாட்டுதல் இல்லாததால், அபராதம் மட்டுமே விதித்து லாரியைத் திருப்பி அனுப்பியது வனத்துறை. இன்னொரு லாரி மருத்துவக் கழிவைக் காட்டில் கொட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. காடுகள் மட்டுமில்லை ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளும் உயிரி மருத்துவக் கழிவுகளின் ஆபத்திலிருந்து தப்பவில்லை.

எது மருத்துவக் கழிவு?

சாக்கடை கழிவு மற்றும் ரசாயனக் கழிவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது உயிரி மருத்துவக் கழிவு. நோய்த் தொற்றுள்ள உறைந்த ரத்தம், சதைத் துணுக்குகள், அறுவைசிகிச்சையில் வெட்டி எடுக்கப்பட்ட கட்டிகள், நஞ்சுக்கொடி உள்ளிட்ட மனித உறுப்புகள், நோயாளிகள் பயன்படுத்திய பேண்டேஜ், ஆய்வக நுண்ணுயிரிக் கழிவு, ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தின் ரத்தம் தோய்ந்த கண்ணாடித் துண்டுகள், பயன்படுத்தப்பட்ட சோதனைக் குழாய்கள் மற்றும் ஊசிகள் உள்ளிட்டவையே உயிரி மருத்துவக் கழிவு. மேற்கண்ட கழிவைக் கையாளும்போது ஊசி, கண்ணாடி துண்டுகள் குத்தினால் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட 0.1 % வாய்ப்பும், ஹெப்படைட்டிஸ் - பி தொற்று ஏற்பட 30 % வாய்ப்பும், ஹெப்படைட்டிஸ் - சி தொற்று ஏற்பட 1.8 % வாய்ப்பும் உள்ளன.

நடப்பது என்ன?

இந்தியாவில் 1,68, 869 சுகாதாரப் பராமரிப்பு மையங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 484 டன் உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகிறது. இவற்றில் 447 டன் கழிவு மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக ஒரு நோயாளியின் படுக்கையிலிருந்து 250 கிராம் வீதம் நாள் ஒன்றுக்கு 26 டன் உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அளிக்கும் புள்ளிவிபரங்கள் இவை.

சமூகச் செயல்பாட்டாளரான ஜவஹர் சண்முகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி சென்னையில் 27 அரசு மருத்துவமனைகளில் 8000 படுக்கைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,949 கிலோ உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகிறது. சென்னை நகரிலுள்ள 14 அரசு மருத்துவமனைகளில் இந்தக் கழிவைச் சுத்திகரிப்பதற்கான பதிவேடுகள் மற்றும் முறையான கட்டமைப்புகள் இல்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2,720 படுக்கைகள் மூலம் 238.67 கிலோ உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகிறது. அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 616 படுக்கைகள் மூலம் 308 கிலோ உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகிறது.

ஆனால், இவை முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம் என்கிறார் ஜவஹர் சண்முகம்.

“தற்போதைய புதிய சட்டம் ஒரு நோயாளியின் படுக்கையில் நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோ மருத்துவக் கழிவு சேகரமாகும் என்று கணிக்கிறது. ஆனால், தமிழக மருத்துவமனைகள் படுக்கை ஒன்றுக்கு 200 முதல் 350 கிராம் கழிவையே கணக்கு காட்டுகின்றன. இந்தக் கழிவைச் சுத்திகரிக்க ஒரு கிலோவுக்கு ரூ.39 செலவு செய்ய வேண்டும். அந்தச் செலவைத் தவிர்க்க நான்கில் ஒரு பங்கு கழிவைக் கணக்கு காட்டி, மீதமுள்ள கழிவை நீர்நிலைகளிலும் காடுகளிலும் கொட்டிவிடுகிறார்கள்” என்றார்.

தமிழகம் மற்றும் கேரளத்தின் சுத்திகரிக்கப்படாத உயிரி மருத்துவக் கழிவு திருட்டுத்தனமாகக் கம்பம் - கோம்பை காட்டுப் பகுதி, குப்பிநாயக்கன்பட்டி வனம், கம்பம் மெட்டு, குமுளி, போடி ஆகிய காடுகளில் கொட்டப்பட்டுவருகின்றன. சென்னை நகரத்தின் சுற்றியுள்ள பல்லாவரம், பழவேற்காடு, பள்ளிக்கரணை, ஆந்திர எல்லையான சூலூர்பேட்டை, தடா ஆகிய இடங்களிலும் நீர்நிலைகளில் இரவு நேரங்களில் மருத்துவக் கழிவு கொட்டப்படுவதாகக் கவலை தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவு தமிழகக் காடுகளில் கொட்டப்படுவது 15 ஆண்டுகளாகவே நடக்கிறது. இந்தக் கழிவு மூலம் உடைந்த கண்ணாடி குழாய்கள், ஊசிகள் விலங்குளின் கால்களில் குத்திக் காயமடைகின்றன. நோய்க் கிருமிகள் நிரம்பிய உடல் உறுப்புகளை உண்ணும் ஊனுண்ணிகளும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இவை காடுகளின் மற்ற உயிரினங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவால் மக்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும்” என்றார்.

சட்டம் தீர்வு அளிக்குமா?

மத்தியச் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை 2016 விதிமுறைகளைச் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் 2011-ம் ஆண்டின் சட்டத்தில் கணிசமான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய சட்டத்தில் மருத்துவமனைகளுடன் தற்காலிக, நிரந்தர ரத்த தான முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், அறுவை சிகிச்சை முகாம்கள் உள்ளிட்ட அனைத்துச் சுகாதாரப் பராமரிப்பு மையங்களும் உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகும் இடங்களாகச் சுட்டப்பட்டுள்ளன. மேலும் பொதுச் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே இடம் அளிக்க வேண்டும். ஒரு சுகாதாரப் பராமரிப்பு மையத்திலிருந்து 75 கி.மீட்டருக்குள் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் இருந்தால், தனியாகக் களச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தேவையில்லை என்று வழிகாட்டப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார மையங்களில் ஆய்வு நடத்துவதற்கு மாநிலச் சுகாதாரத் துறை, மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படிச் சட்டங்கள் மேம்படுத்தப்பட்டாலும்கூட, அதை நடைமுறைப்படுத்தும் இடத்தில் உள்ள அதிகாரிகள் மனம் வைத்தால்தான் மேற்கண்ட பிரச்சினைக்குத் தீர்வு காண இயலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x