Last Updated : 19 Mar, 2016 12:04 PM

 

Published : 19 Mar 2016 12:04 PM
Last Updated : 19 Mar 2016 12:04 PM

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை

மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் நாள் என்றாலும், மார்ச் முழுவதுமே பெண்களின் நலன் மீது அக்கறை செலுத்தும் மாதம்தான். இந்தப் பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மீட்க முயற்சிப்போம்.

தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது.

பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்; கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம். பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:

தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது. இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.

ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளைச் சமூகத்தில் பெருக்க இந்த உணவு முறை துணைச் செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை.

மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை

சேர்க்கப்படும் பொருட்கள்: வெள்ளை எள் - ஒரு கப், சர்க்கரை முக்கால் கப், ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை: வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்: பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் phyto oestrogen எள்ளில் உள்ளது.



மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி

சேர்க்கப்படும் பொருட்கள்: சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து - கால் பங்கு, ஏலக்காய் பொடி - சிறிதளவு, கரும்பு வெல்லம் - தேவையான அளவு

செய்முறை: சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.

மருத்துவப் பயன்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.



மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி

சேர்க்கப்படும் பொருட்கள்: வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி - நான்கு பங்கு

செய்முறை: சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்: இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.



- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x