Last Updated : 16 Oct, 2021 06:11 AM

 

Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

விடைபெறத் தொடங்குகிறதா கரோனா?

இந்தியாவில் நாவல் கரோனா வைரஸ் முதல் அலையின் உக்கிரம் 2020 இறுதிக்குள் மட்டுப்படத் தொடங்கியது. அதன் பின்னர் கரோனாவை எதிர்கொள்வதில் மக்கள் காட்டிய அலட்சியமும், எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி அரசாங்கம் காட்டிய மெத்தனமும் கரோனாவின் இரண்டாம் அலைக்கு வித்திட்டன. 2021 மே மாதம் உச்சம் தொட்ட கரோனா இரண்டாம் அலையின் கோரத் தாண்டவம் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களானது.

இந்தச் சூழலில்தான், தடுப்பூசி வழங்குதலில் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கின. மார்ச் 2021இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த கரோனா தடுப்பூசி, இதுவரை 96 கோடி தவணை செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை பெற்றவர்கள் 67 கோடி, இரண்டு தவணைகளும் பெற்றவர்கள் 27 கோடி. தடுப்பூசி குறித்த வதந்திகள், நிர்வாகக் கோளாறுகள், நடைமுறை சிக்கல்கள் போன்றவற்றைத் தாண்டி நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. 20 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக கரோனாவின் பாதிப்பு இறங்குமுகத்தில் உள்ளது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் திமுக ஆட்சிக்கு வந்தபோது 35 ஆயிரத்துக்கும் மேல் இருந்த தினசரி கரோனா பாதிப்பு, இன்று 1,500-க்குக் கீழே உள்ளது. அக்டோபர் மாதம் கரோனா மூன்றாம் அலை உருவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்ட சூழலில், தற்போது கரோனா எண்டமிக் (வட்டாரத் தொற்று) நிலையை அடைந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

வட்டாரத் தொற்றுநிலை என்றால் என்ன?

ஒரு பிராந்தியத்தின் மக்கள் ஒரு வைரஸைச் சமாளித்து வாழக் கற்றுக்கொள்ளும்போது ‘வட்டாரத் தொற்றுநிலை’ ஏற்படுகிறது. ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் ‘பெருந்தொற்று நிலை’யிலிருந்து இது மாறுபட்டது. அதாவது வைரஸின் பரவல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் பரவும் ஒன்றாக மட்டுப்படும். டெங்கு போன்ற காய்ச்சல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கரோனா பாதிப்பு வட்டாரத் தொற்றுநிலையை அடைந்துவிட்டால், அது முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. கரோனா பாதிப்பு தொடரும். அதை எதிர்கொள்ளும் வழிமுறை தெரியும் என்பதால், அதன் பாதிப்பு வீரியமற்று, எளிதில் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.

கரோனா பாதிப்பு எப்போது வட்டாரத் தொற்றுநிலையை அடையும் என்பது கரோனா எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, அது எவ்வளவு வேகமாக உருமாறுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும். அதை அறிவதும் கணிப்பதும் அவ்வளவு எளிதல்ல. இந்தியாவின் 718 மாவட்டங்களில்70 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) நடத்திய கடைசி செரோலாஜிகல் கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்கள் உடலில் கரோனாவுக்கு எதிரான எதிரணுக்களைக் கொண்டுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி பெற்ற காரணத்தால் பலருக்கு எதிரணுக்கள் உருவாகியிருக்கக்கூடும். எதிரணுக்கள் உருவான பின்னரும், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் கரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆனால், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமற்று இருக்கும். அவர்கள் எளிதில் பாதுகாக்கப்படுவர். கரோனாவிலிருந்தும் விரைவில் மீட்கப்படுவர்.

தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தப்படுவதில் கூடுதல் கவனம் வேண்டும். வீரியமுள்ள புதிய வேற்றுரு உருவாகும் சாத்தியம் இப்போது இல்லையென்றாலும், அப்படிப்பட்ட சூழலுக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். கரோனாவின் புதிய வேற்றுருவால் தொற்று ஏற்பட்டாலும், தடுப்பூசிகள் வழங்கும் நோய் எதிர்ப்பாற்றல் தொற்றின் தீவிரத்தையும் இறப்பு அபாயத்தையும் குறைக்கும். கரோனா வைரஸின் புதிய வேற்றுருக்களை எதிர்கொள்ளும் விதமாக நடைமுறையிலிருக்கும் தடுப்பூசிகளை மேம்படுத்துவதிலோ, புதிய வகை தடுப்பூசிகளைக் கண்டறிவதிலோ அறிவியலாளர்களும் அரசாங்கமும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அத்துடன் புதிய வேற்றுருக்களைக் கண்டறியும் திறன்கொண்ட ஆய்வகங்களும் பரிசோதனை நிலையங்களும் நாடெங்கும் நிறுவப்பட வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்

கரோனா தடுப்பூசித் திட்டம் தமிழகத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனாவிலிருந்து மீண்டுவிட்டோம் என்று எண்ணுவதோ அலட்சியமாக இருப்பதோ பேராபத்தில் முடியும். கரோனா இரண்டாம் அலை இதை அழுத்தமாக உணர்த்திச் சென்றுள்ளது. கரோனாவின் மோசமான பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்று முடிவெடுப்பதற்குப் போதுமான தரவுகள் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவிட் போன்ற தீவிர பாதிப்பை ஏற்படுத்தும், புதிய வேற்றுருக்களை உருவாக்கும் வைரஸின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது, கட்டுப்படுத்தவும் முடியாது. எனவே, குறைந்தபட்சம் அடுத்த ஓராண்டுக்காவது கவனமாக இருக்க வேண்டும்.முகக்கவசங்களை அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பண்டிகைகளில் கூடுதல் கவனம் தேவை

இது பண்டிகைகளின் காலம் என்பதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடிய மத வழிபாட்டு நிகழ்வுகளும் மாநிலத் தேர்தல் பரப்புரைகளும் கரோனா இரண்டாம் அலைக்கு வித்திட்டன. அதே போன்ற சூழலுக்கு மீண்டும் நகர்ந்துவிடக் கூடாது. வட்டாரத் தொற்றுநிலையை அடைந்த எந்தத் தொற்றும் மீண்டும் பெருந்தொற்று நிலையை அடையக்கூடும் என்று வரலாறும் அறிவியலும் வலியுறுத்திவருகின்றன. எனவே, அலட்சியம் தவிர்த்து, கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதே நல்லது.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x