Last Updated : 07 Aug, 2021 05:00 PM

 

Published : 07 Aug 2021 05:00 PM
Last Updated : 07 Aug 2021 05:00 PM

கரோனா மூன்றாம் அலை: இப்போது பிரச்சினை இல்லையா?

நாவல் கரோனா வைரஸின் இரண்டாம் அலை முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், மூன்றாம் அலை தொடக்கத்தின் அறிகுறிகள் உலகெங்கும் தென்படத் தொடங்கிவிட்டன. நம் நாட்டைப் பொறுத்தவரை, கரோனாவின் மூன்றாம் அலை இந்த மாதத்தின் இறுதியில்தான் தொடங்கக்கூடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) அறிவித்திருக்கிறது.

தற்போது கரோனாவின் தாக்கம் வெகுவாக மட்டுப்பட்டு இருக்கும் சூழலிலும்கூட, உலக அளவில் கரோனாவால் தினசரி அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. மூன்றாம் அலையால் நேரிடப் போகும் ஆபத்தின் வீரியத்தை உணர்த்தும் குறியீடு இது. இருப்பினும், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது என செரோ கணக்கெடுப்பு முடிவுகள் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர் கணித்திருக்கிறது.

செரோ கணக்கெடுப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பால் உருவாகும் எதிரணுக்களைக் கொண்டி ருக்கும் நபர்களைக் கண்டறியும் செரோ கணக்கெடுப்புகளை ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்திவருகிறது. சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட நான்காம் செரோ கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, இந்தியாவில் சராசரியாக 67.6 சதவீதத்தினர் கரோனா பாதிப்பால் உருவாகும் எதிரணுக்களைக் கொண்டுள்ளனர். கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது 24 சதவீதம் என்கிற அளவுக்கே இருந்தது. மேலும், 25 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள், இந்தியா சமூக நோயெதிர்ப்பு நிலையை நெருங்கி வருகிறது எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதுபோல் இருக்கின்றன. உண்மை என்னவென்றால், 21 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் வசிப்பவர்களில் 29,000 பேரிடமும் 7,200-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகள் அவை. இந்தக் கணக்கெடுப்பை நடத்திய ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானிகளும், இந்த முடிவுகள் முழுமையான பிரதிபலிப்பு அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

போக்கை உணர்த்தும் முடிவுகள்

ஐ.சி.எம்.ஆர்.-ன்இந்தக் கணக்கெடுப்புகளின் முடிவுகள், ஒட்டுமொத்த நாட்டின் நிலையைப் பிரதிபலிக்காவிட்டாலும்கூட, அவை குறிப்பிடத்தக்கவையே. அதே மாவட்டங்களில் மீண்டும் மீண்டும் கணக் கெடுப்புகளை நடத்துவதன் மூலம், இந்தக் கணக்கெடுப்புகள் பாதிக்கப்பட்ட நபர்களின் விகிதம் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதைப் புரியவைக்கின்றன. கணக்கெடுப்புகளுக்கு இடையிலான காலத்தில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன என்பதைப் புரிந்துகொள்ளவும் அவை உதவுகின்றன. உதாரணமாக, கேரளத்தில் குறைந்த அளவே செரோபிரெவலன்ஸ் (கரோனாவுக்கு எதிரான எதிரணுக்களை உடலில் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அல்லது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை) உள்ளது. ஏனெனில், கேரளத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பொதுச் சுகாதார உத்திகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டன.

கணக்கெடுப்பின் அவசியம்

நோயெதிர்ப்பாற்றலுடன் இருக்கும் நபர்கள், கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்திலிருக்கும் நபர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவுகள் பெருமளவு உதவுகின்றன. இருப்பினும், அதன் அனுமானங்கள் கேள்விக்குள்ளானதாகவே இருக்கின்றன. நகரமயமாக்கல் நிலைகள், மக்கள் அடர்த்தி, பயண இயல்பு, செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அளவு, அனுமதிக்கப்பட்ட தொற்றுப் பெருங்கடத்துநர் நிகழ்வுகள், பொதுமுடக்கத் தளர்வுகளின் வேகம், தடுப்பூசி விகிதங்கள் போன்ற காரணிகளால் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பதால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிலை நிலவுவதற்குச் சாத்தியமே கிடையாது.

திறன் மதிப்பீடே முக்கியம்

எதிரணு சோதனைகளில் பாசிட்டிவ் ரிசல்ட் பெற்ற அனைவரும் கரோனா எதிர்ப்பாற்றல் கொண்டவர்கள் என்று முடிவுசெய்வதும் தவறானது. கரோனா பெருந்தொற்றின் தொடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உருவாகியிருக்கும் எதிரணுக்கள் காலப்போக்கில் குறைந்துவிடும். இதனால், எதிரணு கணக்கெடுப்பின்போது நெகட்டிவ் முடிவு வரும் சாத்தியம் அதிகம். நோய்த்தொற்று அல்லது தடுப்பூசிக்குப் பிறகு எதிரணுக்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. நோயெதிர்ப்பாற்றலை மீறும் திறன்கொண்ட கரோனாவின் புதிய வேற்றுருக்கள் பரவிவரும் இன்றைய சூழலில், வைரஸைச் செயலிழக்க வைப்பதில் எதிரணுக்களுக்கு இருக்கும் திறனை மதிப்பிடுவது மிகவும் முக்கியம்.

மூன்றாம் அலையின் தாக்கம்

மூன்றாம் அலை பாதிப்பு தீவிரமடைவது, இன்னும் பாதிக்கப்படச் சாத்தியமுள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. நாடு முழுவதும் உறுதியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதன் மூலம், ஆபத்திலிருக்கும் நபர்களைப் பாதுகாக்க முடியும். வேற்றுருக்களைக் கண்டறியும் மரபணு சோதனைகளைத் தீவிரப்படுத்துவது, அதன் தன்மையைப் புரிந்துகொள்ளவும், பரவலைத் தடுக்கவும் நமக்கு உதவும்.

கரோனாவின் மூன்றாம் அலையில், ஒரு புதிய வேற்றுரு உருவாகி மிகுந்த வீரியத்துடனும் அதிவேகமாகப் பரவவில்லை என்றால், மூன்றாம் அலையின் தாக்கமும் அதன் பாதிப்பும் மிதமாகவே இருக்கும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. வீரியமுள்ள புதிய வேற்றுரு உருவாகும் சாத்தியம் இப்போது இல்லையென்றாலும், அது போன்ற நிகழ்வுக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். கரோனாவின் புதிய வேற்றுருவால் தொற்று ஏற்பட்டாலும், தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பாற்றல் தொற்றின் தீவிரத்தை அல்லது இறப்பு அபாயத்தைக் குறைக்கும். அண்மையில் இங்கிலாந்திலும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் ஏற்பட்ட பரவல் இதை உறுதிசெய்கிறது.

தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும், லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கும். பிறருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில் உயிரைப் பணயம் வைத்து உலவுவதைவிட, தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவதே சிறந்தது என்பதைத் தடுப்பூசி போடாதவர்கள் உணர வேண்டும்.

கேரளம் ஏன் முன்மாதிரியாகிறது?

நாட்டின் மக்கள்தொகையில் 2-3 சதவீதத்தையே கொண்டுள்ள கேரளம், தற்போது நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்களைக் கொண்டுள்ளது. கரோனா பாதிப்பால் உடலில் உருவாகும் எதிரணுக்களைக் கொண்டவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் கேரளத்தில் குறைவு என்று நான்காம் தேசிய செரோபிரெவலன்ஸ் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. செரோ பாசிட்டிவிட்டி தேசிய அளவில் 68 சதவீதம், கேரளத்தின் 43 சதவீதம். இதன் பொருள் கேரள மாநிலம் கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைச் சிறப்பாகப் பாதுகாத்துள்ளது. கேரள மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் (மற்ற மாநிலங்களைவிட அதிகம்) கரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்படவில்லை.

ஒரு நாளைக்குச் சராசரியாக 1.4 லட்சம் கரோனா பரிசோதனைகளை கேரள அரசு மேற்கொள்கிறது. அதேவேளை, அதைவிட மூன்று மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், சராசரியாக 50,000 தினசரி சோதனைகளே நடத்தப்படுகின்றன. தொற்று அதிகமாக இருப்பதாக நம்பப்படும் பகுதிகளை இலக்காகக் கொண்டு கேரளத்தில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாசிட்டிவ் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது.
கரோனாவின் டெல்டா வேற்றுரு நாட்டின் பிற பகுதிகளைவிடத் தாமதமாகவே கேரளத்துக்கு வந்தது. நாட்டின் மற்ற பகுதிகளில் பரவிய விகிதத்தில் இப்போது கேரளத்தில் பரவிவருகிறது. கேரளத்தின் இன்றைய அதிக பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்.

தேசிய சராசரியான 7.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கேரள மக்கள்தொகையில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கேரளத்தில் 38 சதவீதத்தினர் தடுப்பூசி முதல் தவணையைப் பெற்றுள்ளனர்.
கரோனாவின் இறப்பு விகிதம் தேசிய அளவில் 1.3 சதவீதமாக இருக்கும்போது, கேரளத்தில் அது 0.5 சதவீதம் என்கிற அளவில்தான் இருக்கிறது. கேரளத்தில் தினசரி பாதிப்புகள் 20,000-க்கு மேல் இருக்கும்போதும்கூட மருத்துவமனை படுக்கைகள், ஐ.சி.யு., வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் பயன்பாடு 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளன. எனவே, கேரளத்தின் தொற்று பாதிப்பு அச்சப்படும் நிலையில் இல்லை.

தொடர்புக்கு:mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x