Last Updated : 13 Feb, 2016 12:23 PM

 

Published : 13 Feb 2016 12:23 PM
Last Updated : 13 Feb 2016 12:23 PM

பார்வையைப் பறிக்குமா ரெடிமேட் கண்ணாடி?

‘சார், செல்லில் இருக்கும் இந்த நம்பர் என்னன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க?’என்று யாராவது கேட்டால், உடனே அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதோ என்று நினைக்க வேண்டியதில்லை.

வெள்ளெழுத்துப் பிரச்சினையால் அவரால் சரியாகப் பார்க்க முடியாமல் இருக்கலாம். நாற்பது வயதை நெருங்கிக் கொண்டி ருக்கிறோம் என்பதை உடலில் ஏற்படுகிற இரண்டு மாற்றங்கள் உணர்த்தும். ஒன்று முடி நரைப்பது. மற்றொன்று பார்வையில் ஏற்படும் வெள்ளெழுத்துப் பிரச்சினை.

வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் மாலை நேரம், வெளிச்சம் குறைவான இடம், இரவு நேரத்தில் படிப்பதற்குச் சிரமப்படு வார்கள். கண்ணிலிருந்து இயல்பான தொலைவைக் காட்டிலும் சற்றுத் தள்ளி வைத்து நாளிதழைப் படிக்க முயற்சிப்பார்கள்.

இயற்கை வேகத் தடை

முடி நரைப்பதும் வெள்ளெழுத்துப் பிரச்சினையும் இயற்கை நமக்குத் தந்த வேகத் தடை. ஒருவகையில் இது நமக்குத் தேவைதான். 40 வயது என்பது ஒருவருடைய வாழ்வில் திருப்புமுனை. அப்போதுதான் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை எட்டி பார்க்கத் தொடங்கும். பரபரப்பான வாழ்க்கைச் சூழல் இந்த நோய்களை எளிதில் வரவழைக்கக்கூடும் என்பதால், நம் அணுகுமுறையையும் வாழ்க்கை முறையையும் சற்றே மாற்றிக்கொள்வதற்காகத்தான் இந்த வேகத் தடை என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஏன் ஏற்படுகிறது?

கண்ணுடைய ஈடு செய்யும் திறன் பற்றி நினைவிருக்கிறதா? சிறுவயதில் படித்திருப்போம். தூரத்தில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கும், அருகில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கும் ஏற்றதுபோலக் கண்ணில் உள்ள விழி லென்ஸ் சுருங்கி விரியும். நாற்பதை நெருங்கும்போது லென்ஸின் இந்தச் சுருங்கி விரியும் மீட்சித் தன்மையில் சிறிய தளர்ச்சி ஏற்படுகிறது. இதனால் படிப்பதற்குச் சிரமம் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கொஞ்ச நாளைக்கு நாளிதழைக் கண்ணிலிருந்து சற்றுத் தள்ளிவைத்துப் படிக்க முயல்வார்கள். ஆனால், இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்படிக் கண்ணாடியில்லாமல் சிரமப்பட்டுப் படிக்கும்போது கண்ணில் வலி, தலை வலி, கண்ணில் அசௌகரியம், பார்வை மங்கல், கண்ணில் சிவப்பாவது, எரிச்சல், நீர்வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

வெள்ளெழுத்து வந்த பிறகு ஆரம்பத்தில் கண்ணாடி இல்லாமல் படித்துப் பழகிவிட்டால், பின்பு ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. ‘ஐம்பது வயதிலும் சிலர் கண்ணாடியில்லாமலேயே படிக்கிறார்களே?’, ‘என் தாத்தா 80 வயதுவரையிலும் கண்ணாடி இல்லாமல்தானே படித்தார்?’ என்றும் சிலர் கேட்கிறார்கள்.

எப்படிச் சாத்தியம்?

50 வயதிலும் ஒருவர் கண்ணாடியில்லாமல் படிக்கிறார் என்றால், ஒன்று அவருக்கு myopia என்ற கிட்டப்பார்வை குறைபாடு இருக்கலாம். அதற்கு ‘மைனஸ்’பவர் கண்ணாடி தேவை. வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கு ‘பிளஸ்’ பவர் கண்ணாடி போட வேண்டும். இது இரண்டும் சரிசமமாகிக் கண்ணாடி இல்லாமலேயே அவர்களால் படிக்க முடியும்.

அதேபோல ஒருவருக்குக் கண்புரை இருந்தாலும், படிப்பதற்குக் கண்ணாடி தேவைப் படாது. ஏனெனில், ஆரம்ப நிலையில் கண்புரை உள்ள சிலருக்கு ‘மைனஸ்’கண்ணாடி தேவைப்படலாம். இந்த நேரத்தில் வெள்ளெழுத்துக்குரிய பிளஸ் பவர் கண்ணாடி தேவைப்படும்போது, இரண்டும் சமமாகிக் கண்ணாடி இல்லாமலேயே படிக்க முடியும். இதையெல்லாம் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கண்ணாடி இல்லாமல் படிக்கலாம் என்று தவறாக வழிகாட்டப்படுகிறது.

வெள்ளெழுத்துக்குத் தீர்வு

வெள்ளெழுத்துக்குக் கண் பரிசோதனை செய்து, தகுந்த கண்ணாடி அணிந்து நன்றாகப் படிக்கலாம். இருகுவியக் கண்ணாடியாக (Bifocal) அணிவது நல்லது. அப்போது கண்ணாடியின் மேற்பகுதி வழியாகத் தூரத்தில் இருப்பதைப் பார்க்கலாம், கீழ்ப் பகுதி வழியாகப் படிக்கவும் எழுதவும் செய்யலாம். இதில் Kryptok, Executive, ‘D’ bifocal எனப் பல வகைகள் உள்ளன. ஆனால், கண்ணாடியில் வட்டமோ, கோடோ இருப்பதைப் பார்த்து மற்றவர்களுக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடி என்று தெரிந்துவிடும்.

இதனால் வயது தெரிந்துவிடுமே என்று நினைத்து, நடைமுறையில் பலர் கண்ணாடி போடுவது கிடையாது, வாங்கினாலும் பயன்படுத்துவது கிடையாது.

இந்த இருகுவியக் கண்ணாடியில் இருக்கும் இன்னொரு வசதிக் குறைவு இதைப் போட்டுக்கொண்டு கணினியில் வேலை செய்வதற்குக் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். கணினி மானிட்டரைப் பார்த்துவிட்டு, கீழே விசைப் பலகையைப் பார்ப்பதில் தடுமாற்றம் ஏற்படும். கண்ணாடியின் கீழ்ப் பகுதி வழியாக மானிட்டரைத் தெளிவாகப் பார்க்க வேண்டி, ஒவ்வொரு முறையும் தலையை உயர்த்தி உயர்த்திப் பார்க்கவேண்டும். இதனால் கழுத்து வலி, தலை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். Progressive lens என்ற லென்சில் இந்தப் பிரச்சினை கிடையாது.

லென்ஸ் சிறப்பம்சம்

புராக்ரெசிவ் லென்சில் என்ன சிறப்பு என்றால், இதில் கோடோ வட்டமோ இருக்காது. இந்த லென்ஸ் மூலம் எந்தத் தொலைவுக்கும் தெளிவாகப் பார்க்க முடியும். இது, சாதாரண இருகுவியக் கண்ணாடியைக் காட்டிலும் விலை சற்று அதிகம். சிலர் கண் மருத்துவமனைக்குச் சென்றால் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று நேரத்தை வீணடித்துவிடுவார்கள் என்று நினைத்துக் கண்ணாடி கடைக்குச் சென்று வெள்ளெழுத்துக்குரிய சிறிய ரெடிமேட் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொள்வார்கள்.

இந்தக் கண்ணாடிகள் தரமானவை அல்ல. அவசரத்துக்கு வேண்டுமானால் இதைப் பயன்படுத்தலாம். ஒருவேளை ஒருவருக்குத் தூரப்பார்வை சார்ந்த குறைபாடு இருந்தால், வெள்ளெழுத்து கண்ணாடியுடன் அதற்குரிய பவரையும் சேர்த்துத்தான் போட வேண்டியிருக்கும். அதற்கு முறையான, முழுமையான கண் பரிசோதனை செய்து கண்ணாடி போட்டுக்கொள்வதே நல்லது.

- கட்டுரையாளர், மதுரை தேசியக் கண்மருத்துவ சங்க ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x