Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM
‘‘என்ன அவர் இறந்துவிட்டாரா; என்னப்பா சொல்றீங்க நேத்து நல்லாத்தானப்பா இருந்தாரு!’’ என்று சில திடீர் இறப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு நம்மில் பலரும் பதறியிருப்போம். இந்தியாவில் 2019 ஆண்டில் மட்டும் 28,005 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். 21 வயதிலிருந்து 100 வயது வரையுள்ள நோயாளிகள் மாரடைப்பால் திடீரென இறப்பதைக் கேள்விப்பட்டும், பார்த்தும் வருகிறேன். இப்படி இறப்பது ஏதோ திடீர் காரணத்தால் என்று மக்கள் நினைப்பார்கள். உண்மையில் இது நெடுங்கால பாதிப்பின் விளைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முதியோருக்கு அல்லது நடுத்தர வயதுடையவர்களுக்குத்தான் மாரடைப்பு வருமென நம்பிக்கொண்டிருந்தால், அந்தக் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பெரும்பாலானோருக்கு 10 - 14 வயதிலேயே ரத்தநாளக் குழாய்களின் உட்சுவரில் ‘அதரோஸ்கிலரோசிஸ்’பாதிப்பு தொடங்கிவிடுகிறது. இப்படிச் சிறு வயதிலேயே பிரச்சினை தொடங்குவதும், அதன் பாதிப்பு விரைவாக அதிகரிப்பதாலும்தான் சிலருக்கு 20 - 30 வயதுக்குள்ளாகவே மாரடைப்பு ஏற்பட்டுவிடுகிறது.
‘அதரோஸ்கிலரோசிஸ்’ என்றால் என்ன?
ரத்தநாளக் கொழுப்புப் படிவே ‘அதரோஸ்கிலரோசிஸ்’ எனப்படுகிறது. இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தநாளம் தொடங்கி உடலிலுள்ள பல முக்கிய நாளங்களிலும் கொழுப்புப் படிவு (Atherosclerosis) ஏற்படுவது சிறு வயதிலேயே தொடங்கிவிடும். ரத்தநாள உட்சுவர் பழுதடைவதுதான் இதன் முதல் நிலை. இதற்குத் தேவைப்படும் நைட்ரிக் ஆக்சைடு குறைவதுதான் இதற்கு முக்கியக் காரணம். ரத்தநாளத்தில் கொழுப்புப் படிவதற்கு நீண்ட கால அழற்சியும் மற்றொரு காரணம். ரத்தநாள உட்சுவர் அழற்சியால் கொழுப்புப் பொருட்கள், செல் கழிவுப் பொருட்கள், நாளத்தின் மென்தசை செல்கள், கால்சியம், ஃபைப்ரின் உள்ளிட்டவை சேர்ந்து தமனித் தடிப்பு ஏற்படலாம். இது ரத்த ஓட்டத்தைக் குறைக்கும்போது நோயாளிக்கு நெஞ்சுவலி ஏற்படும். தமனித் தடிப்பு சிதைந்து முழுமையாக ரத்த நாளத்தை அடைத்துவிடும்போது உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டுவிடும்.
யாருக்கு மாரடைப்பு வரச் சாத்தியம் அதிகம்?
குடும்ப, பரம்பரை காரணங்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், ரத்தத்தில் கொழுப்பு மிகுந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், மது, புகைப்பழக்கம் உள்ளவர்கள், உறக்கம்-உடற்பயிற்சி இல்லாதவர்கள், உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாதவர்கள், மன அழுத்தம், மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள், பதறுபவர்கள், பயப்படுகிறவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு வரச் சாத்தியம் அதிகம். பெண்களைவிட ஆண்களுக்கு வயதாக வயதாக மாரடைப்பு ஏற்படக்கூடும்.
இளம் வயதினருக்கு ஏன் மாரடைப்பு வருகிறது?
இன்னும் குறிப்பாகக் கூறுவதென்றால் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு, இதய ரத்தநாள ‘அதரோஸ்கிலரோசிஸ்’ அடைப்பு மட்டும் காரணமல்ல; ரத்தநாளங்கள் திடீரெனச் சுருங்குவதாலும், இவர்களின் ரத்தம் எளிதில் உறைவதாலும், நாளங்களில் செலுத்தப்படும் போதை மருந்துகளாலும், இதயத் தசை நோய்கள், இதய மின்னோட்ட நோய்களாலும் மாரடைப்பு ஏற்படலாம்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT