Published : 26 Dec 2015 12:59 PM
Last Updated : 26 Dec 2015 12:59 PM
தற்கொலைகள் பற்றி ஓரளவுக்காவது அறிவியல் பூர்வமான புரிதல் இருக்கிறதோ, இல்லையோ நம்மில் பெரும்பாலான வர்களிடம் மிகவும் தவறான புரிதல் இருப்பது என்னவோ உண்மை.
தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எல்லாருமே கோழைகள், வாழத் தெரியாதவர்கள்; வேண்டுமென்றே செய்கிறார்கள்; வெறும் மிரட்டல்கள் முயற்சியாக மாறாது; தற்கொலையில் இருந்து ஒருமுறை மீண்டு வந்துவிட்டால் மறுபடியும் அதற்கு முயற்சிக்க மாட்டார்கள்; தற்கொலை எண்ணங்களைப் பற்றி மருத்துவர் சாதாரணமாக விசாரித்தாலே, அந்த எண்ணம் இல்லாதவர்களுக்கும்கூடத் தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் - தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைப் பற்றி நிலவும் தவறான மூடநம்பிக்கைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் இவை.
ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையே தோற்றுப்போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அதேநேரம் தற்கொலை என்பது ஒரு பிரச்சினையை மறப்பதற்கோ, மாற்றுவதற்கோ உள்ள தீர்வு கிடையாது. அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பதை வளர்இளம் பருவத்தினர் மனதில் கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வர்கள். பல நேரம் அவர்களுக்குச் சிகிச்சையும் தேவைப்படலாம்.
தடுக்க முடியுமா?
தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாகத் தடுக்கக் கூடியவைதான். ஏற்கெனவே கூறியதுபோல ஆபத்தான மனநிலை யில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்கொலை எண்ணத்தை, நடத்திப் பார்க்கும் முயற்சியாக மாற்றத் தூண்டும். உதாரணமாக எறும்பு பொடி, வயலுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் போன்றவை இப்படிப்பட்ட நபர்களின் பார்வையில் படாமல் வைத்திருப்பது, நல்ல பலனைத் தரும்.
கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனையில் தடுப்பு வேலிகள் அமைத்த பின்பு, அங்கு அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. லண்டன் நகரின் தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் உயர்த்திக் கட்டப்பட்ட பின்பு, அங்குத் தற்கொலை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலில் இருக்கும் நபர்களிடம் ‘மது அருந்தினால் நிம்மதி கிடைக்கும்’ என நண்பர்கள் ஆலோசனை கூறித் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். மது, நிச்சயமாக மனநிம்மதிக்கான மருந்தல்ல. சமீபகாலமாக எந்தக் காரணமும் இல்லாமலேயே மது தரும் போதையில், தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம். மதுவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விஷப்பொருள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம்?
கடைசிக் கட்டத்தில் கிடைக்கும், ஒரு சிறிய ஆலோசனையும்கூடத் தற்கொலை முயற்சியைத் தடுக்கும். எனவே, அதைப் பற்றிய லேசான எண்ணங்கள் எட்டிப் பார்த்தால்கூட நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அதைப் பற்றி பகிர்ந்துவிடுவது நல்லது. இதுபோன்ற நேரத்தில் தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது. மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் மாத்திரைகளும் சரியான நேரத்தில் கிடைத்தால், பல தற்கொலை எண்ணங்கள் முயற்சிகளாக மாறுவது தவிர்க்கப் படும். இது போன்ற வர்களுக்கு உதவுவதற்காக, தற்கொலைத் தடுப்பு அவசர உதவி மையங்கள் நிறைய செயல்படுகின்றன.
சமுதாயம், ஊடகங்களின் பொறுப்பு
தற்கொலைகளைத் தடுப்பதில் சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தற்கொலை முயற்சி செய்த பின் உளவியல் ஆலோசனை பெற வரும் வளர்இளம் பருவத்தினரிடம் கேட்டதில், அவர்களில் பலரும் சினிமாக்களில் வரும் தற்கொலைக் காட்சிகளை உள்வாங்கிப் பிரதிபலிப்பது தெரியவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த வான் கதே என்ற எழுத்தாளர் தனது ‘இளம் வெர்தரின் சோகம்’ (Sorrows of young Werther ) என்ற நாவலில், நாயகனின் ஒருதலைக் காதல் தோல்வியடைந்ததன் விளைவாகத் தற்கொலை செய்துகொள்வதாகச் சித்தரித்திருப்பார்.
அந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில், நாவலில் வெர்தர் எந்த உடையணிந்து, எப்படித் தற்கொலை செய்துகொண்டாரோ, அதுபோலவே ஐரோப்பாவில் தற்கொலை செய்து மடிந்த இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல இன்றும் பல ஊடகச் செய்திகளும் படங்களும் வளர்இளம் பருவத்தினரைப் பாதிப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
(அடுத்த முறை: தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்போம்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT