Published : 12 Dec 2015 02:47 PM
Last Updated : 12 Dec 2015 02:47 PM
இந்த அடைமழைக் காலத்தில் வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, ஃபுளூ காய்ச்சல் மற்றும் டெங்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம். உணவிலும் வாழ்க்கை முறையிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம்.
1. நன்கு தளதளவெனக் காய்ச்சிய நீரை மட்டுமே குடிக்கப் பயன்படுத்துங்கள். அதையும்கூட இளம் வெதுவெதுப்பான சூட்டோடு பருகுங்கள்.
2. அதேபோல இளம் வெதுவெதுப்பான நீரை மட்டும் குளிக்கவும் பயன்படுத்துங்கள்.
3. ஆவியில் வேக வைக்கப்பட்ட எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம், சோறு, புட்டு, பொங்கல் போன்றவற்றைச் சாப்பிடவும். கோதுமைச் சப்பாத்தியும் எடுக்கலாம். மதியத்துக்கு மிளகு தூவிய கிழங்கு மட்டும் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். மற்ற மாவுப் பண்டங்கள் வேண்டாம், எளிதில் செரிக்காது. மிளகு, பூண்டு, சீரகம் போட்ட ரசம் சோறு மிகவும் நல்லது.
4. நோய் எதிர்ப்பாற்றலை உடலில் அதிகரிக்கத் தேவைப்படும் இடத்திலெல்லாம் காரத்துக்காக மிளகுத் தூளைப் பயன்படுத்துங்கள். அன்னாசிப்பூ எனப்படும் star anise-யை குருமா போன்ற உணவில் சேர்த்துச் சாப்பிடவும்.
5. வீட்டில் கண்டிப்பாக நிலவேம்புக் குடிநீர் இருக்கட்டும். இந்தப் பொடியைப் போட்டு 250 மி.லி. நீர் விட்டுச் சூடாக்கி 60 மி.லி.யாகக் குறுக்கிக் கஷாயமாக்கி, உணவுக்கு முன்னதாகப் பருகுங்கள். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி. கொடுக்கலாம். 3-6 வயதில் 15-30 மி.லி. கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு எப்போதும் கிடைக்கிறது.
6. நெஞ்சில் சளி கட்டி இருமலுடன் துன்பப்பட்டால், துளசி (ஒரு கைப்பிடி அளவு), வெற்றிலை (இரண்டு இலை), மிளகு (நான்கு எண்ணிக்கை), கற்பூரவல்லி (ஒரு கைப்பிடி அளவு) இதைப் போட்டு 250 மி.லி. நீர் விட்டுச் சூடாக்கி 60 மி.லி.யாகக் குறுக்கிக் கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாகப் பருகுங்கள்.
7. வெறும் தரையில் படுக்க வேண்டாம். வெயில் அடிக்கும்போது படுக்கை தலையணை உறையை வெயிலில் போட்டு எடுங்கள். ஈரமான நாட்களில் ஒவ்வாமை தும்மல் வர மிக முக்கியக் காரணம் ஈரம் பாய்ந்த துவைக்காத தலையணை உறை என்பதை மறந்துவிடக் கூடாது
8. குழந்தைகளின் காது, தலைப் பகுதியை அணைத்ததுபோல (குரங்கு குல்லா மாதிரி) ஆடை அணிவியுங்கள். இருசக்கர வாகன முன்பகுதியிலோ, சாலையைப் பார்த்தபடியோ குழந்தையை உட்கார வைக்காதீர்கள்.
9. வயிற்றுப் போக்கை நிறுத்த கறிவேப்பிலை, சித்த மருந்துகளான சுண்டை வற்றல் பொடி, தயிர்சுண்டிச் சூரணம் பயனளிக்கும். கூடவே உடலில் நீர்ச்சத்து குறைந்திடாமல் இருக்க உப்பு, பனைவெல்லம் கலந்த நீர், இள நீர், நீர்த்த மோர் ஆகியவற்றை அருந்துங்கள்.
10. காய்ச்சல் இரண்டு நாட்களைத் தாண்டி படிப்படியாக அதிகரித்தாலோ, தோலில் ‘சிவந்த படை’ இருந்தாலோ, காய்ச்சலில் துவளும் சூழல் வருவது போலிருந்தாலா, அருகில் உள்ள குடும்ப மருத்துவரைத் தாமதிக்காமல் அணுகுங்கள்.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் தொடர்புக்கு: herbsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT