Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

நலம்தானா? 02: காலையில் சாப்பிட்டீங்களா?

தைராய்டு குறைபாடு பிரச்சினைக்காக ஒரு நோயாளி என்னிடம் வந்திருந்தார். அவருக்கு நோயை உறுதிசெய்து, தைராக்ஸின் மருந்தைக் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்திருந்தேன்.

பட்டென்று, ‘நான் காலையில் சாப்பிடுவதில்லையே, டாக்டர். காலையில் நான் எழுவதில்லை. மதியம் 2 மணிக்குத்தான் எழுவேன். இரவு முழுவதும் கம்புயூட்டரில் வேலை. அதிகாலைதான் படுக்கவே போவேன்” என்றார். உலகம் முழுதும் 10-30 சதவீதம் பேர் இப்படித்தான் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இதில், 30 வயதுக்குக் குறைவானவர்களே அதிகம்.

காரணங்கள்

தாமதமாக விழிப்பவர்கள், பசி யின்மை, நேரமின்மை (பள்ளிகளுக் கும் பணிகளுக்கும் காலையில் சீக்கிரம் செல்பவர்கள்), குடும்ப சூழ்நிலை, திருமணம் ஆகாத தனியர்கள், பருமனாக இருப்பவர்கள் எனப் பலரும் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

காலையில் உணவு உட்கொள் ளும்போதுதான், இரவில் 8 மணி நேரம் ஓய்வெடுத்த உடல் சுதாரித்துக் கொள்கிறது. காலையில் படிப்பதற்கும் பணி செய்வதற்குமான ஆற்றலைத் தந்து உத்வேகத்துடன் உடல் உழைப்பதற்கு உணவு உதவுகிறது.

தவிர்த்தால் என்ன?

காலை உணவைத் தவிர்ப்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்: ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும், காலையில் சாப்பிடாததால் மதியம் அதிகமாகச் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இதற்குத் தேவையான இன்சுலினை உற்பத்திசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கணைய பீட்டா செல்களுக்கு ஏற்படும்.

இந்த நிலை தொடரும்போது... உடலில் இன்சுலின், மற்ற ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாறுதலால், உடலில் இயல்பாக நடைபெறும் வளர்சிதை செயல்பாடுகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழும். இதன் காரணமாக உடல் பருமன், இன்சுலின் செயல்திறன் குறைவதால் (Insulin resistance) குளுக்கோஸ் சத்தை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலை (Glucose intolerance) ஏற்பட்டு நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.

காலை சாப்பாட்டைத் தவிர்ப்பதால் மாணவர்க ளுக்கு மூளையின் செயல்பாடு குறைதல், ஞாபகமின்மை, கற்றலில் குறைபாடு, ரத்த அழுத்தம், இதய நோய், பித்தப்பையில் கற்கள் ஏற்படுதல், இரைப்பை புண், இரைப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே பணிபுரிபவர்கள் என்றால் ஆர்வத்துடன், சுறுசுறுப்புடன் பணிபுரிய இயலாமை, நல்ல மனநிலை இல்லாமை, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளும் ஏற்படச் சாத்தியம் அதிகம்.

சிறந்த நேரம்

நாள்தோறும், காலை 8.30 மணிக்கு முன்பாக காலை உணவை உட்கொள்கிறவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

அவசர வேலைகளுக்கு இடையே, பெரும்பாலான வீடுகளில் காலையில் ஒரு உணவுப் பண்டம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் 5-6 இட்லிகள், 4-5 தோசைகளைப் பலரும் சாப்பிடுகிறார்கள். அப்படியில்லாமல் ஒரு காய்கறி, இரண்டு பழ வகைகள், 4-5 ஆளி விதைகள் அல்லது பாதாம் பருப்புகளுடன், ஒரு முட்டை அல்லது சிறிதளவு சுண்டலைச் சேர்த்துச் சாப்பிடலாம். கொழுப்பு மிகுந்த சீஸ் (பாலாடைக்கட்டி), வெள்ளை சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பு, எண்ணெய் ஆகியவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

இப்படிச் சாப்பிடுவது அதிக மாவுச்சத்தை (கார்போஹைட்ரேட்) தராமல் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகளைத் தரும். உடலுக்குத் தேவையான சமச்சீர் உணவாக (Balanced diet) இருக்கும். இட்லி, தோசைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம்.

ஐரோப்பாவில் விழிப்புணர்வைப் பரவலாக்க, ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி ‘காலை உணவு நாளாக’ அனுசரிக்கப்படுகிறது. நம் ஊரில் அப்படித் தனி நாள் எதுவும் அனுசரிக்கப் படாவிட்டாலும்கூட, காலை உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் பழக்கங்களைச் சீராக்கிக்கொள்வோம்.

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார்

சென்னை பாரத் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான முத்துச் செல்லக் குமார், தொடர்ச்சியாக மருத்துவ நூல்களை எழுதிவருபவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்கிற அமைப்பின் மூலம் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். மருத்துவம் சார்ந்து பல்வேறு இதழ்களில் எழுதிவரும் இவருடைய சமீபத்திய நூல், 'அனைவருக்கும் பயன்படும் ஆங்கில மருந்துகள்'.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x