Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
பொதுச் சுகாதாரம் பேணுதலில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு கருதப்பட்டுவருகிறது. மருத்துவத் துறை சார்ந்த முன்னேற்றங்களிலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளிலும் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம் தேசிய அளவிலும் உலக அளவிலும் பாராட்டைப் பெற்ற ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவத் துறையில் தமிழகம் கண்ட ஏற்ற இறக்கங்கள் என்னென்ன, ஓர் அலசல்:
முதலில் தமிழகம் எட்டியுள்ள ஆக்கப்பூர்வமான அம்சங்களைப் பார்ப்போம். பொதுச் சுகாதாரத் துறையின் சில அம்சங்களில் தமிழ்நாடு முன்னேறியிருப்பதை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசிய அளவில் பிறக்கும்போதே குழந்தை இறக்கும் விகிதம் ஆயிரத்துக்கு 34. ஆனால், தமிழ்நாட்டில் 2010இல் 24, அதுவே 2016-17இல் 16 ஆகக் குறைக்கப்பட்டது. பிறக்கும்போதே குழந்தைகள் இறக்கும் விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் 2030ஆம் ஆண்டில் அடைய வேண்டிய ஐ.நா. நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றான ஆயிரத்துக்கு 12 என்ற இலக்கை தமிழகம் 2019இலேயே அடைந்துவிட்து. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் 2030ஆம் ஆண்டிற்கான இலக்கு களைத் தமிழகம் நெருங்கிவருகிறது.
பேறுகாலத்தில் தாய்மார்கள் இறப்பது இந்திய அளவில் ஆயிரத்துக்கு 130 ஆக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 2010இல் 90 ஆக இருந்த இந்த அளவு 2019இல் 63 ஆகக் குறைந்துள்ளது. ஐ.நா. நிலைத்த வளர்ச்சி இலக்கான 2030-க்குள் பேறுகால இறப்பு விகிதத்தை 67ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தமிழ்நாடு 2016இலேயே எட்டிவிட்டது.
முன்னோடித் திட்டங்கள்
குடும்ப நலத் திட்டத்தில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தியது. தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக 2018இல் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மகப்பேறுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ 15000லிருந்து 18000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைப் பெற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்வதிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளருடன் இயங்கக்கூடிய 2,000 மினி கிளினிக்குகளை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் 47 மினி கிளினிக்குகளும் மாநிலம் முழுவதும் 630 மினி கிளினிக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதேநேரம் தேர்தலை மனதில் கொண்டு அவசரமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மினி கிளினிக்குகளுக்கு உரிய வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தனியாக நியமிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கரோனாவை எதிர்கொண்ட விதம்
கரோனா பெருந்தொற்றுக்கான ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. தொடக்கத்தில் தொற்றுப்பரவல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டதுபோல் தெரிந்தாலும், நிலைமை கைமீறிப் போய்விட்டதை மே மாதத்தில் மாநில அரசு உணர்ந்தது. இதன் காரணமாகச் சுகாதாரத் துறை செயலாளர் ஜூன் மாதம் மாற்றப்பட்டார். அதன்பிறகு அதிக அளவிலான பரிசோதனைகள், கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள், விழிப்புணர்வுப் பிரசாரம் போன்ற முன்னெடுப்புகள் கைகொடுத்தன.
தொற்று பரவத் தொடங்கிய தொடக்கக் கட்டத்தில் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்பதற்கான தெளிவான திட்டம் மாநில அரசிடம் இல்லாததால், நிலைமை கைமீறிப் போனதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு கட்டுப்பாடு களைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்கள், அரசு என இரு தரப்பினரும் சுணக்கம் காட்டிய தால் தற்போது இரண்டாம் அலை ஆபத்து தீவிரமடைந்திருக்கிறது.
சறுக்குகிறதா தமிழகம்?
மற்றொருபுறம் சுகாதாரக் குறியீடுகளில் தமிழகம் பின்தங்கி யிருப்பதாக நிதி ஆயோக்கின் சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2015-16ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி பொதுச் சுகாதாரத் துறையில் 3வது இடத்திலிருந்த தமிழ்நாடு, 2019ஆம் ஆண்டு அறிக்கையில் ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொதுச் சுகாதாரத் துறைக்கான ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 74.01 புள்ளிகளுடன் கேரளம் முதலிடத்திலும் 28.61 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்குக் குறைவான எடையுடன்) குழந்தைகள் பிறப்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் வழங்குவது, 2015-16இல் 82.7 சதவீதமாக இருந்தது, 2019இல் 76.1 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதே போல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை களிடையே வளர்ச்சிக் குறைபாடு ஆயிரத்துக்கு 20 குழந்தைகளிடம் காணப்படுகிறது. போலியோவை முற்றிலும் ஒழித்துவிட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், மதுரையில் 2018இல் ஒரு குழந்தைக்கு டிப்தீரியா நோய் ஏற்பட்டது. தடுப்பு மருந்து கொடுக்கப்படாததே இதற்குக் காரணம். மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் சதவீதம் 2015-16இல் 81.8 சதவீதமாக இருந்தது, தற்போது 80.5 ஆகக் குறைந்துள்ளது.
ஒருபுறம் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளை அதிக எண்ணிக்கையில் தமிழகம் கொண்டுள்ளது. ஆனால், நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியை எட்டிப்பிடிக்க முடியாத நிலை தீவிரமடைந்துள்ளது. மருத்துவக் கல்வி முதுநிலைப் படிப்பிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு வழியில்லாமல் போனது போன்றவை மாணவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்தக் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
ஏற்றமும் இறக்கமும்
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான மாநில அரசு இயற்கைப் பேரிடர்களையும் பொருளாதார சவால்களையும் சந்தித்தது உண்மைதான். இவற்றைத் தாண்டி சுகாதாரத் துறையில் ஏற்கெனவே முன்னேறியிருந்த அம்சங்களை அப்படியே தக்கவைத்துக்கொள்வதுதான், ஒரு மாநிலத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் சுகாதாரக் குறியீடுகளில் பின்தங்கியிருப்பது பின்னடைவே. இந்த சுகாதாரக் குறியீட்டுப் பின்னடைவு கரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முந்தையது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, சிக்கலுக்குள்ளாகி இருந்த மருத்துவக் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளை கரோனா தொற்று தீவிரமாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பின்னணியில் அடுத்துப் பொறுப்பேற்கும் மாநில அரசு தெளிவான திட்டத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. அதுவே நெடுங்காலத்தில் தமிழக மக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT