Published : 21 Nov 2015 02:50 PM
Last Updated : 21 Nov 2015 02:50 PM
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக உள்ள நிலையில், அந்த நோய் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதைச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
15 நகரங்களில் ஆய்வு
அக்டோபரில் நடைபெற்ற ‘உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாத நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஏ.சி. நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து ஃபிலிப்ஸ் ஹெல்த்கேர் இந்தியா ஓர் ஆய்வை நடத்தியது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பூனே, அகமதாபாத், பெங்களூர், ஐதராபாத், லக்னோ, சண்டிகர், குவஹாட்டி, பாட்னா, இந்தூர், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய 15 மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இதயக் கோளாறுகள், தொற்றுநோய்கள் மற்றும் வளர்சிதைமாற்ற சீர்கேடு ஆகிய நோய்களுடன் ஒப்பிடுகையில் புற்றுநோய் கவலையளிக்கும் மிகப் பெரிய நோய் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் வகைகளில் 84 சதவீதத்துக்கு உடனடி சிகிச்சைகள் அவசியம் என்று கூறப்படும் நிலையில், 34 சதவீதப் புற்றுநோய்களுக்கான சிகிச்சை குறித்து மட்டுமே பரவலான விழிப்புணர்வு உள்ளது.
பயமுண்டு, விழிப்புணர்வு இல்லை
இந்தியாவில் நோய் சார்ந்து ஏற்படும் இறப்புகளில், 8 சதவீதத்துக்குப் புற்றுநோயே காரணம். ஆண்களின் புற்றுநோய் இறப்புகளுள் நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கருப்பைவாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. புற்றுநோய் குறித்த அச்சம் இருக்கும் அளவுக்கு, அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. 58 சதவீதம் பேர் மட்டுமே புற்றுநோய் அறிகுறிகள் குறித்து அறிந்துள்ளனர்.
இந்த ஆய்வில் பதில் அளித்த 85 சதவீதம் பேர் மருத்துவச் சிகிச்சைகளுக்கான கட்டணம் அதிகம் என்று நம்புவதால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வது தெரிய வந்திருக்கிறது.
"புற்றுநோய் இருப்பதைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால்தான், அதை குணப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குணப்படுத்த முடியாது என்று முன்பு கருதப்பட்ட புற்றுநோய்களைத் தற்போது குணப்படுத்த வழி உருவாகியிருக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதுடன், முறையான சிகிச்சைகளை நடைமுறைப்படுத்தவும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் உயிரிழப்புகள் குறைவதுடன் தீர்வுகளும் மேம்படும்" என்கிறார் சங்கரா புற்றுநோய் அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் பி. எஸ். நாத்.
பிரபலங்கள் மீது ஆர்வம்
பலவகையான புற்றுநோய்களுள் மார்பகம், வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் உள்ளது. புற்றுநோய் தடுக்கப்பட வேண்டிய உயிர்க்கொல்லி நோய் என 75 சதவீத மக்கள் நம்புவதாக இந்த ஆய்வு சொல்கிறது. இருந்தாலும் பிரபலங்கள் தங்களுடைய புற்றுநோய் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, புற்றுநோய் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளத் திறந்த மனதுடன் உள்ளதாகவும், இயல்பான வாழ்க்கையை வாழ சிகிச்சை எடுத்துக்கொள்ள அவை ஊக்குவிப்பதாகவும் 78 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT