Published : 28 Nov 2015 12:35 PM
Last Updated : 28 Nov 2015 12:35 PM
தெருக்கள்தோறும் மருந்துக் கடைகள், `ஆன்லைன் பார்மஸி’ என்ற புது வரவு வேறு! மக்களுக்கு ஏற்படும் பெரும் நோய்களைப் போக்குவதற்கும், அவசரக் காலத்திலும் மருத்துவரின் பரிந்துரையோடு மருந்துகள் தேவைப்படுவது உண்மைதான்!
ஆனால் சளி, இருமல் போன்ற சாதாரணத் தொந்தரவுகளுக்குக்கூட மருந்துக் கடைகளை அடிக்கடி நாடுவது, நாகரிக மக்களின் பொழுதுபோக்காக மாறியிருப்பது, அறியாமையின் உச்சம்.
நமது வாழ்க்கைச் சக்கரத்தைச் சற்றே பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால், அந்தக் காலத்தில் இத்தனை மருந்துக் கடைகள் இருந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அதேநேரம், அப்போது இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகளின் உதவியோடு, வீடுதோறும் இயற்கை மருந்தகம் செயல்பட்டுவந்தது.
மழைக்கால நோய்கள்
இயற்கை மருந்துகளை நோக்கி மீண்டும் பயணித்தால், மழைக் காலத்தில் உண்டாகும் பல்வேறு நோய்களை எளிதாகத் தடுக்கலாம்.
மழை பொழியத் தொடங்கியவுடன், நிலத்தடி நீர் அதிகரிக்கிறதோ இல்லையோ, கிருமிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் சளி, இருமல், தலைபாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் நம்மைப் பதம்பார்க்கின்றன. இவற்றைக் கட்டுக்குள் வைக்கப் பயன்படும் மூலிகைகள் எவை?:
தூதுவளை
கொடி வகையைச் சேர்ந்த தாவரமான தூதுவளை, தேகம் முழுவதும் முட்களைக் கொண்டது. நுரையீரல் சார்ந்த நோய்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை கில்லாடி. ஆஸ்துமா நோயாளிகளிடம் இருக்க வேண்டிய முக்கியமான மூலிகை இது. நுண்ணுயிர்க் கொல்லி (Anti-microbial action) செய்கை கொண்ட தூதுவளை, நோய்க் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. மழைக்காலத்தில் உண்டாகும் சளி, இருமல், காசம், நீரேற்றம் போன்ற நோய்களைக் களையும் தன்மை கொண்டது.
பயன்படுத்தும் முறை
இதன் இலைகளை உலர வைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய், தக்காளி சட்னிகளால் சலித்துப்போவதற்கு முன்னால் இடையிடையே தூதுவளை இலையையும் சட்னியாக்கிச் சாப்பிடலாம். இலைகளை நீரில் கொதிக்க வைத்துச் சிறிது மிளகு, உப்பு சேர்த்து 'சூப்' செய்தும் பருகலாம். பருப்பு ரசம், தக்காளி ரசம் போன்று, அக்காலத்தில் மழைக்காலத் தூதுவளை ரசம் ரொம்ப பிரசித்தி!
கர்ப்பூரவல்லி
கர்ப்பூரவல்லி (ஓமவல்லி) இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், சளித் தொந்தரவுகள் குறையும் என்பது முன்னோர் காட்டிய வழி. இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவிவர இருமல் குணமாகும். மழைக் காலத்தில் குடிக்கும் நீரில் 4, 5 இலைகளைப் போட்டுப் பயன்படுத்தலாம். சிறிதளவு இலையை மென்று சாப்பிட்டால் இருமல் குறையும். இதில் உள்ள எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெயில் உள்ள `p-cymene’ மற்றும் `thymol’ நோய்க்கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. வேது (ஆவி) பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகை களுள் கர்ப்பூரவல்லி முக்கியமானது. இதன் இலைகளால் செய்யப்படும் கர்ப்பூரவல்லி பஜ்ஜி ரெசிப்பி, சில ஹோட்டல்களில் ஸ்பெஷல் மெனு!
சுக்கு
தொண்டை கரகரப்பா …தொண்டையில் கிச்கிச்சா!… சுக்குத் துண்டு சாப்பிடுங்க!... தோல் சீவிய சிறிய சுக்குத் துண்டை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை மட்டும் விழுங்கினால், `கிச்.. கிச்’ எல்லாம் காணாமல் போய்விடும். சுக்கை, பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை பாரம் நீங்கும். சுக்குக் காபி, இஞ்சி டீ வகைகளைச் சூடாகப் பருக, குளிருக்கு இதமாக இருப்பதோடு, தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.
கொள்ளு
‘கொள்ளு ரசம் குடிச்சா ஜலதோஷமெல்லாம் ஜகா வாங்கிடும்' என்பது கிராமங்களில் புழங்கும் புதுமொழி. மழைக் காலத்தில் தக்காளி, எலுமிச்சை ரசத்துக்குச் சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, கொள்ளு ரசத்துக்கு அதிக வாய்ப்பு கொடுக்கலாம். ‘நீரேற்றமோடு குளிர் சுரம் போம்' என்று கொள்ளின் பயன்களை விளக்குகிறது அகத்தியர் பாடல். உரமாக்கும் செய்கையுடைய கொள்ளுக் கஞ்சியைக் குடித்தால், உடல் உரம் பெற்று நோய்களைத் தகர்த்தெறியும் வன்மை கிடைக்கும்.
துளசி
தினமும் ஒன்றிரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் பற்றி கவலைப்படத் தேவையிருக்காது. துளசியிலை சாற்றால் காய்ச்சல், பீனசம் (சைனஸ்) குணமாகும். நீரில் துளசி இலைகளைப் போட்டு அருந்துவதால், கப நோய்கள் அனைத்தும் மறைவதன் காரணமாகவே, கோயில் தீர்த்தங்களில் துளசி முக்கிய இடம்பிடித்திருக்கலாம். துளசியில் இருக்கும் ‘Eugenol’ எனும் வேதிப் பொருளே, அதன் மருத்துவக் குணத்துக்குக் காரணம்.
மஞ்சள், மிளகு
* பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடிக்கத் தொண்டைக்கட்டும், சளியும் குறையும். மூச்சுவிடச் சிரமம் ஏற்படும்போது, ஒரு வெற்றிலையில் மூன்று மிளகு வைத்து மென்று சாப்பிட, சுவாசம் சீராகும். மிளகுத் தூளைத் தேனில் கலந்து அருந்த இரைப்பு, இருமல், ஜுரம் ஆகியவை நீங்கும்.
* கண்டங்கத்தரிக்காய் காரக் குழம்பு, மழைக் காலத்தில் உருவாகும் கப நோய்களைப் போக்கும். இதை முள்ளுக் கத்திரி என்றும் சில பகுதிகளில் சொல்கின்றனர்.
* தொண்டை கரகரப்புக்கு, சிற்றரத்தையை வாயில் போட்டு மெல்லலாம்.
* அதிமதுரப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.
அலமாரிகளில் இயற்கை
சுக்கு, கொள்ளு, மிளகு, திப்பிலி, மஞ்சள், சிற்றரத்தை, அதிமதுரம், கண்டங்கத்தரி போன்ற நோய்களைப் போக்கும் தாவரப் பொருட்கள் நம் வீட்டு அலமாரிகளில் இடம்பெற வேண்டியது அவசியம். தூதுவளை, கர்ப்பூரவல்லி, துளசி போன்ற மூலிகைகளைச் சிறிய தொட்டிகளில் வளர்த்துத் தேவைப் படும்போது பயன்படுத்தலாம். இயற்கை உணவுப் பொருட்களின் பயன்களை, குழந்தைகளிடம் கொண்டுபோய்ச் சேர்த்து, நலமான வருங்காலத் தலைமுறையை உருவாக்குவது பெற்றோரின் கையில் தான் உள்ளது. அன்பால் அழகாகும் உங்கள் வீடு, இத்தகைய இயற்கை மருந்துக் கடையையும் உள்ளடக்கி இருக்கும்போது, கூடுதல் அழகையும் ஆரோக்கியத்தையும் பெறும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு:drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT