Published : 20 Feb 2021 09:49 AM
Last Updated : 20 Feb 2021 09:49 AM

உடல்நலனைக் கடத்த அனுமதிக்கலாமா?

டாக்டர் சசித்ரா தாமோதரன்

ஒரு கடத்தல்காரர் விமானியைக் கட்டுப்படுத்தி விமானத்தைக் கடத்தி, ஓரிடத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் விமானத்தை, மொத்தமாகத் திசைமாற்றி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றுவிடுவது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் நம் அன்றாடப் பயன்பாட்டின் மூலம் உடலுக்குள் ஊடுருவி நம் உடலையே வேறொரு நிலைக்குக் கடத்திக்கொண்டு போனால்? கேட்கப் புதிதாக இருந்தாலும், இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நமது உடலின் உறுப்புகளில் பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, பாலின சுரப்பிகள் அட்ரீனல், கணையம் போன்ற மிகச்சிறிய சுரப்பிகள், ஹார்மோன்கள் என்ற வேதிப்பொருள்களை மிகக் குறைந்த அளவில் உற்பத்திசெய்து, நாளங்கள் இல்லாததால், அவற்றை நேரடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இதன் மூலம் நமது மூளை, இதயம், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள் என அனைத்து உடலுறுப்புகளுக்கும் சென்றடையச் செய்வதுடன், உடலின் வளர்ச்சி, நோயெதிர்ப்பு, வளர்சிதை மாற்றங்கள், சூழலுக்கேற்ப உடலைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல் என்று நம் உடலின் அத்தனை முக்கியப் பணிகளுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன நாளமில்லா சுரப்பிகள்.

எளிதாகக் கூறவேண்டுமென்றால், இந்த சுரப்பிகள் சுரக்கும் எண்டோகிரைன் ஹார்மோன்கள்தாம், நம் உடலில் லட்சம் கோடி (ட்ரில்லியன்) கணக்கில் இருக்கும் ஒட்டுமொத்த செல்களையும் கட்டுப்படுத்தி உடலின் செயல்பாடுகள், வளர்ச்சி - ஆரோக்கியத்தைச் சமன்படுத்துகின்றன. மேலும், எப்போதாவது இந்த சுரப்பிகளின் செயல் பாடுகளில் பற்றாக்குறையோ மிகுதியோ என ஏற்படும் சிறிய மாற்றம்கூட, நம் ஆரோக்கி யத்தைப் பாதித்து, நீரிழிவு நோய், தைராய்டு, உடல்பருமன், பி.சி.ஓ.டி., குழந்தைப் பேறின்மை, மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

உடலைக் கடத்துதல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை, சோப், ஷாம்பு, நாப்கின் போன்ற அத்தியாவசியப் பொருள்களிலும், பதப்படுத்தப்பட்ட உணவு -ஊட்டப் பொருள்களிலும் கலந்துள்ள சில வேதிப்பொருள்கள்தாம். இவை நமது உடலுக்குள் சென்று கலந்துவிடும் போது, அவை எண்டோகிரைன் ஹார்மோன்கள் போலவே இயங்கி, நமது செல்களிலுள்ள ஹார்மோன் ஏற்பிகளைத் தன்வசப்படுத்துகின்றன. நமது உடலில் இயல்பாக உற்பத்தியாகும் ஹார்மோன்களின் செயல்திறனைப் பாதித்து, அவற்றின் அளவைக் குறைக்கவோ கூட்டவோ செய்கின்றன. பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

நம் உடலில் ஹார்மோன் சுரக்கும் அளவோடு ஒப்பிடும்போது இவற்றின் அளவு மிகவும் குறைவுதான். ஆனால், பல்வேறு செயற்கை வேதிப் பொருள்களை நாள்படத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவை நம் உடலில் சேர்த்துக்கொண்டே போகும் போது ஏற்படும் விளைவுகள்தாம் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளன.
இந்த வேதிப்பொருள்கள், உடலில் இயற்கையாக இயங்கும் ஹார்மோன்களைப் போலவே செயல்பட்டு, அவற்றின் உண்மையான செயல்பாடுகளில் குறுக்கிட்டு, மனித உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் வேறு பக்கம் திசைதிருப்பி விடுவதால், இவற்றை ‘எண்டோகிரைனை சீர்குலைக்கும் வேதிப்பொருள்கள்' (Endocrine Disrupting Chemicals - EDC) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எண்டோகிரைன் சீர்குலைவு

ஒரு சாதாரண மனிதன் அன்றாட வாழ்வில் வந்துபோகும் எண்டோ கிரைன் சீர்குலைப்பிகள் இதுவரை 80,000 கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் சில:

* பிளாஸ்டிக், உணவு பேக்கிங் உறைகள், ஃபீடிங் பாட்டில்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் என அனைத்திலும் அதிகளவு காணப்படும் 'பி.பி.ஏ. - Bis Phenol Acetate'.
* பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும், செயற்கை உணவு ஊட்டங்களிலும் காணப்படும் ‘பாரபென்கள்' (Parabens).
* அழகு சாதனப்பொருள்கள், நாப்கின்களில் காணப்படும் ‘தாலேட்' (Phthalates), ஆக்சிபென்ஸோன்' (Oxybenzone).
* ஷாம்பு, சோப்புகளில் உள்ள ‘ட்ரைக்ளோசான்' (Triclosan), ‘ஆல்கைல் பினைல்' (Alkyl Phenyl).
* பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்களில் உள்ள ‘டிடிடி' (DDT), ‘டயாக்சின்' (Dioxins).
* நீரில் கலந்துள்ள ‘ஆர்சனிக்'
* சிகரெட், வாகனப் புகை.
* தொழிற் சாலைக் கழிவு களில் ‘பி.சி.பி.' (PCB), 'டி.டி.ஈ.' (DDE) போன்ற எண்ணற்ற எண்டோகிரைன் சீர்குலைப்பிகள் உள்ளன.

பி.பி.ஏ. ஆபத்து

எண்டோகிரைன் சீர்குலைப்பி ஒவ்வொன்றும் நம் உடலில் ஒவ்வொரு விதமாகச் செயல்படும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, பயன்பாட்டில் பெருமளவில் உள்ள பி.பி.ஏ.வை (BPA) எடுத்துக்கொள்வோம். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், ஃபீடிங் பாட்டில்கள், ஃபிளாஸ்க்குகள், டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, என அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் 90% பொருள்களில் இருக்கும் இந்த பி.பி.ஏ., ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களைப் போல் செயல்பட்டு நம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இவற்றை ‘ஜெனோ ஈஸ்ட்ரோஜன்கள்', அதாவது ‘வெளியிலிருந்து கிடைக்கப்பெறும் ஈஸ்ட்ரோஜென்' என்கிறார்கள் மருத்துவர்கள். இவை, செல்களின் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுக்குள் பதிந்து, பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களையும், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் ஒருபக்கம் குறைக்கும் இந்த பி.பி.ஏ., அதே வேளையில் சினைப்பையில் பி.சி.ஓ.டி. எனும் நீர்க்கட்டிகள், என்டோமெட்ரியோசிஸ் எனும் ரத்தக்கட்டிகள், சினைப்பைச் செயலிழப்பு என மறுபக்கத்தையும் முடக்கி, ஆண்-பெண் இருவரிடையேயும் கருத்தரித்தலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

மீறிக் கருத்தரித்தால் கருச்சிதைவு, கர்ப்பகால நீரிழிவு நோய், பிறவிக் குறைபாடுகள், குறைமாதக் குழந்தைப்பேறு எனப் பல கர்ப்ப காலப் பிரச்சினைகளை இவை ஏற்படுத்துகின்றன. மீறிக் கரு உருவாகிவிட்டாலும், இவற்றைப் பயன்படுத்தும் கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்குத் தாயின் நஞ்சுக்கொடி வழியாகவும், தாய்ப்பால் மூலமாகவும் இவை சென்றடைந்து, ஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி. போன்ற கற்றல் குறைபாடுகள், ஆஸ்துமா, அலர்ஜி, இளவயதுப் பருவமடைதல், இளவயது உடல்பருமன், நீரிழிவு நோய், நியூரோபிளாஸ்டோமா போன்ற இளவயதுப் புற்றுநோய்கள் என அடுத்த தலைமுறையையும் இது பாதிக்கிறது.

கரு, கர்ப்பம் என்பதை விட்டுவிட்டால் சாதாரணமானவர்களுக்கு உடல்பருமன், நீரிழிவு நோய், தைராய்டு நோய், எலும்புப் புரை, அல்சைமர் நோய், நோய்த் தடுப்பாற்றல் குறைவதால் ஏற்படும் தொற்றுநோய்கள், இவையனைத்துக்கும் மேலாக, ‘செல் சைக்கிள் டிஸ்ரெகுலேஷன்' என்ற அணுக்களின் மறுபராமரிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மார்பகம், கர்ப்பப்பை, சிறுநீரகம், புராஸ்டேட், விரை ஆகியவற்றில் புற்றுநோய்கள் என இந்த ஒரேயொரு சீர்குலைப்பி ஏகப்பட்ட நோய்களை ஏற்படுத்த வல்லது.

இந்த ஜெனோ ஈஸ்ட்ரோஜன்கள், இயற்கை ஈஸ்ட்ரோஜன்களைக் காட்டிலும் நம் உடலால் மிக மிகக் குறைந்த அளவில் (1,000 மடங்கு குறைவாய்) தான் ஏற்கப்படுகின்றன என்பதால், இவற்றின் அளவு உடலில் அதிகரிக்கும்போதோ அல்லது இவை மிக நீண்ட காலம் உடலுக்குள் தங்கியிருந்தால் மட்டுமே இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் ஒரே ஆறுதல்.

தீர்வுகள் என்ன?

ஒவ்வொரு நாட்டின் அரசும், மருந்து களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளைப் போலவே, இந்த எண்டோகிரைன் சீர்குலைப்பிகள் விஷயத்திலும் தீவிர சோதனைகளையும், கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு.
இதைப் பின்பற்றி நார்வே, ஸ்வீடன், ஃபிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், பி.பி.ஏ.வுக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன. நமது நாட்டிலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. குழந்தைகளுக்கான ஃபீடிங் பாட்டில்களில் பி.பி.ஏ. பயன்படுத்த மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பொருள்கள் சார்ந்து தடை விதிக்கப்படவில்லை.

தனிமனிதர்களின் கடமைகள்

* இயன்றவரை பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது. மீறிப் பயன்படுத்தும்போது, மறுசுழற்சிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட #1,#2,#4 எண்கள் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மட்டுமே சரிபார்த்து வாங்குவது. (#3,#6,#7 ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்).
* பழங்கள், காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவிய பின்னர் பயன்படுத்துவது.
* மண்பாண்டங்கள், எவர்சில்வர், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்துவது.
* பதப்படுத்தப்பட்ட உணவையும், செயற்கை உணவு ஊட்டங்களையும் தவிர்ப்பது.
* சானிடரி நாப்கின்கள், டயப்பர்களில் ஸைலீன் போன்ற தாலேட்களைத் தவிர்ப்பது.
* தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது, வாட்டர் பில்டர்களைப் பயன்படுத்துவது.
* குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் அதிக கவனம் செலுத்துவது.
* நான்-ஸ்டிக், மைக்ரோ வேவ், டப்பர் போன்றவற்றைத் தவிர்ப்பது.
* வாங்கும் பொருள்களில் பி.பி.ஏ. ஃப்ரீ, பாரபென் ஃப்ரீ என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது.
* புகைப்பிடித்தலைத் தவிர்ப்பது.
* குப்பை கழிவை எரிப்பதைத் தவிர்ப்பது.
* அனைத்துக்கும் மேலாக, காற்று மாசைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறங்களில் அதிக மரங்களை நடுவது

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: sasithra71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x