Published : 07 Nov 2015 02:27 PM
Last Updated : 07 Nov 2015 02:27 PM
பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். அது உயிரைப் பறிக்கும் ஆபத்தைக் கொண்டது என்பது சமீபத்தில் கவனத்துக்கு வந்தது. குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது இந்த மூளை காய்ச்சல்.
வளர்ந்துவரும் ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆசியாவில், ‘மூளை காய்ச்சல்’, ‘ஜப்பானிய மூளை காய்ச்சலால்’ பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்குட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
எப்படி வருகிறது?
இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை ‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது.
மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச் சவ்வு அழற்சி என்று பெயர். இந்த நோய் வர வேறு சில நோய்களும்கூட ஒரு காரணம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான் இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய்கள் மூளைச் சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.
குழந்தைகளுக்குக் காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குக் காசநோய்க் கிருமியால் சில நேரம் மூளைச் சவ்வு அழற்சி ஏற்படலாம். தாய்க்குக் காசநோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்குச் சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச் சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
என்ன அறிகுறிகள்?
அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள்வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கையடைந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி வளைத்துப் படுத்திருப்பது, தலையைக் கால் முட்டிகளுக்குக் கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தலை உச்சியின் மென்பகுதி மேல் நோக்கிப் புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.
இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாகக் காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும். பெரும்பாலும் நினைவு இழக்கும்வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாகப் பல நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகுதான் அறிகுறிகளைக் காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தைக்குப் பாதுகாப்பு
குழந்தைகளை மட்டும் குறி வைத்து இந்த நோய் ஏன் வருகிறது? இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் ரவியிடம் கேட்டோம். "இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் வருவதற்குச் சில காரணங்கள் உள்ளன. மூளை வேகமாக வளரும் பருவம், சின்ன வயது, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதே முக்கியக் காரணம். இதுபோன்ற காரணங்களோடு தொற்றுகள் சுலபமாகத் தாக்கும் வயது என்பதால் குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் எளிதில் வந்துவிடுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள வயதானவர்களுக்கும் இந்த நோய் வரச் சாத்தியம் அதிகம்" என்கிறார் ரவி.
மூளை காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி மிக முக்கியம். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். தாய்க்குக் காசநோய் அல்லது குழந்தைக்குக் காசநோய் தொடர்பான மூளைச் சவ்வு அழற்சி இருந்தால், தாமதமில்லாமல் மருத்துவ உதவியை நாட வேண்டும். காசநோய் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறந்த உடனேயே பி.சி.ஜி. தடுப்பூசி போட்டுவிடுவது நல்லது. அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
எப்படித் தடுப்பது?
மூளை காய்ச்சல் வராமல் வேறு எப்படித் தடுத்துக்கொள்ள முடியும்? "இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் தடுப்பூசியைச் சரியாகப் போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வருவதற்கான சாத்தியம் 95 சதவீதம் குறைந்துவிடும். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள், குழந்தைகள் நல மருத்துவரிடம் அறிவுரை பெற்று அதைப் போட்டுக்கொள்ளலாம்.
இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும், குப்பையைச் சேர்க்கக்கூடாது. தண்ணீர் தேங்காமலும், கொசு வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கொசுக்கடிக்கு ஆளாகாத வண்ணம் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மழைக் காலங்களில் உஷாராக இருக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் ரவி.
நம் வீடு மட்டுமில்லாமல், சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்யும்போது, பெரும்பாலான நோய்களைத் தடுத்துவிட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT