Published : 17 Oct 2015 10:40 AM
Last Updated : 17 Oct 2015 10:40 AM
என் வயது 51. உயரம் 5.11”. உடல் எடை 105 கிலோ. எனக்கு 15 வருடங்களாக ரத்த அழுத்தமும் 7 வருடங்களாக சர்க்கரை நோயும் உள்ளன. அவற்றுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன். ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவிலும் சர்க்கரை வெறும் வயிற்றில் 105 ,சாப்பிட்ட பின் 170 என்ற அளவிலும் உள்ளன. எனக்குப் பத்தாண்டுகளாக மனப்பதற்றம் இருக்கிறது. இதற்கு மருந்துகள் எடுத்துவருகிறேன். எனக்கு நல்ல தீர்வு சொல்வீர்களா?
- நாகராஜன், மின்னஞ்சல்
இந்தக் கேள்விக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம் பதிலளிக்கிறார்:
உடல் மற்றும் மனம் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. உங்களுடைய சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தைத் தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.
உடல்நலம் பேணுதல்
உங்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறது. எடையைக் குறைத்தாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாகக் குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம். குறிப்பாக யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.
மனநலம் பேணுதல்
அடுத்து நாம் மாற்ற வேண்டியது நம்முடைய சிந்தனையை. சிறு சிறு விஷயங்களுக்குக்கூடப் பதற்றப்பட்டு பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும். பிறகு பல நேரம் நம்மையறியாமலேயே பதற்றம் வந்துவிடும். 'ஒரு விஷயம் நடந்துவிடுமோ' என்று நாமே கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை. ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது சூட்சுமம். அதை கைக்கொள்ளப் பாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT