Last Updated : 17 Oct, 2015 10:38 AM

2  

Published : 17 Oct 2015 10:38 AM
Last Updated : 17 Oct 2015 10:38 AM

பரிசோதனை ரகசியங்கள் 5: சிறுநீரக நோய்க்கு என்ன பரிசோதனை?

உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உடலின் பொது ஆரோக்கியம் காக்கப்படும். பொதுவாகக் கட்டுப்படாத நீரிழிவு நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்தஅழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை பெற்றுவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால், நாளடைவில் எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடலில் கீழ்க்காணும் அறிகுறிகள் தோன்றும்:

# சிறுநீர் பிரிவது குறையும்.

# பசி குறையும்.

# வாந்தி வரும்.

# தூக்கம் குறையும்.

# கடுமையான சோர்வு ஏற்படும்.

# உடலில் அரிப்பு உண்டாகும்.

# முகம் மற்றும் கைகால்களில் வீக்கம் தோன்றும்.

# மூச்சிளைப்பு ஏற்படும்.
சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்: 1. உடனடி பாதிப்பு 2. நாட்பட்ட பாதிப்பு.

என்ன பரிசோதனைகள்?

# ரத்த யூரியா அளவு.

# ரத்த யூரியா நைட்ரஜன் அளவு.

# ரத்த கிரியேட்டினின் அளவு.

# ஜி.எஃப்.ஆர். (GFR Glomerular Filtration Rate) அளவு.

# சோடியம், பொட்டாசியம், கால்சியம் அளவுகள்.

# வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐ.வி.பி. பரிசோதனை (Intravenous pyelogram IVP), சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள்.

# சிறுநீரில் மைக்ரோ அல்புமின் அல்லது அல்புமின் பரிசோதனைகள்.

# சிறுநீரில் 24 மணி நேரப் புரத அளவுப் பரிசோதனை.

# சிறுநீரில் புரதம் அல்லது அல்புமினுக்கும் கிரியேட்டினின் அளவுக்குமுள்ள விகிதாச்சாரம்.

பரிசோதனை முடிவுகள்:

# ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும் இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

# ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர்.

# ரத்தக் கிரியேட்டினின் அளவு ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர், பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி., குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி., என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும்.

# ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும்.

# சோடியத்தின் அளவு 135 142 மில்லிமோல்/லிட்டர், பொட்டாசியத்தின் அளவு 3.5 5 மில்லிமோல்/லிட்டர், கால்சியத்தின் அளவு 9 11 மி.கி./டெ.லி. என்று இருக்க வேண்டும்.

# ஜி.எஃப்.ஆர். அளவு ஆண்களுக்கு நிமிடத்துக்கு 95 - 115 மி.லி; பெண்களுக்கு 85 110 மி.லி. இருந்தால் சரியான அளவுதான். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது நிமிடத்துக்கு 60 மி.லி. என்ற அளவில்தான் இருக்கும். இது அவர்களுக்கு இயல்பான அளவு.

# ஜி.எஃப்.ஆர். அளவு நிமிடத்துக்கு 60 மி.லி.க்குக் குறைவாக 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும்.

# ஜி.எஃப்.ஆர். அளவு நிமிடத்துக்கு 15 மி.லி.க்குக் குறைவாக இருந்தால், சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்துவிட்டது என்று அர்த்தம்.

# சாதாரணமாகச் சிறுநீரில் அல்புமின் புரதம் வெளியேறுவதில்லை. சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் நுண்புரதம் வெளியேறும். இதைத் தொடர்ந்து வெண்புரதம் வெளியேறும்.

# சிறுநீரில் 24 மணி நேரப் புரத அளவுப் பரிசோதனையில் 300 மி.கி.க்கு அதிகமாகப் புரதம் இருந்தாலும், சிறுநீரில் புரதம் அல்லது அல்புமினுக்கும் கிரியேட்டினின் அளவுக்குமுள்ள விகிதாச்சாரம் 0.2 முதல் 2 மி.கி.% க்கு மேல் இருந்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

# வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தால், சிறுநீரகத்தின் அளவு, வீக்கம், சிறுநீரகக் கல், புராஸ்டேட் வீக்கம், சிறுநீர்ப்பை கட்டி, சிறுநீர்ப் பாதை அடைப்பு போன்ற விவரங்கள் தெரியவரும்.

# இதுவரை சொன்ன எல்லாப் பரிசோதனைகளையும் எந்த நேரத்திலும் செய்யலாம்.

யார் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

# நீரிழிவு நோயாளிகள்.

# உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்.

# பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

# சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்.

# சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள்.

# சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள்.

# அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள்.

கவனிக்க!

# பரிசோதனைகளில் சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதியானால், குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதலுடன் நோயின் ஆரம்பநிலையிலேயே சிறுநீரகச் சிறப்பு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இதன்மூலம் சிறுநீரகம் கெடுவதைத் தடுத்துக்கொள்ள முடியும்.

(அடுத்த வாரம்: நீரிழிவு நோய்க்கான ரத்தப் பரிசோதனைகள்)

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x