Published : 05 Sep 2015 02:57 PM
Last Updated : 05 Sep 2015 02:57 PM
தேசிய கண் தான இரு வாரம்: ஆக. 25 முதல் செப். 8
இரண்டு ஆண்டுகளுக்குமுன் சென்னையில், பார்வையிழந்த தன் மகனுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டி ‘கண்களைத் தானம் செய்வதாக’ எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் அன்புள்ளம் கொண்ட தாய். பார்வை நரம்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் தன் மகனுக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டது என்பதையும், கண்தானம் மூலமாக அதைச் சரி செய்ய முடியாது என்பதையும், அந்த ஏழைத் தாய் அறிந்திருக்கவில்லை. பாசம் தாயின் கண்ணை மறைத்துவிட்டதுபோல.
அந்தத் தாயைப் போலவே கண்ணில் ஏற்படும் பார்வையிழப்பு அனைத்தையுமே கண்தானம் மூலம் சரிசெய்ய முடியும் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். மருத்துவத் துறையைச் சார்ந்த பலரும்கூட அப்படி நம்புவதுதான் துரதிர்ஷ்டம்.
பார்வையிழப்பு ஏன்?
கண்புரை, விழித்திரை பிரிதல், பார்வை நரம்பு பிரச்சினை, நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு, கண் நீர் அழுத்த உயர்வு, கருவிழியில் ஏற்படும் நோய்கள், காயங்களால் பார்வையிழப்பு ஏற்படலாம். இதில் கருவிழி (கார்னியா) பாதிப்பால் ஏற்பட்ட பார்வையிழப்பை மட்டுமே கண் தானம் மூலம் சரிசெய்ய முடியும்.
கண்ணின் வாசல்
கருவிழியை நம் கண்ணின் நுழைவாயில் என்று சொல்லலாம். வீட்டின் நுழைவாயிலை அடைத்துவிட்டால் வீடு இருட்டாகிவிடுமல்லவா! அதைப்போல ஒளி ஊடுருவும் தன்மைகொண்ட கருவிழி, சில நோய்களாலோ அல்லது காயங்களாலோ பாதிக்கப்பட்டு ஒளி ஊடுருவும் தன்மையை இழந்துவிடலாம். இதனால் ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள் செல்ல முடியாமல் கண் இருட்டாகிவிடுகிறது - அதாவது பார்வையிழப்பு ஏற்படுகிறது.
விழி மாற்று மருத்துவம்
இருளடைந்த வீட்டுக்கு வெளிச்சம் வேண்டுமானால் மூடிய கதவைத் திறந்தால் போதும். அதைப் போல ஒளி ஊடுருவும் தன்மையைக் கருவிழி இழந்ததால்தானே பார்வையிழப்பு ஏற்பட்டது. எனவே, அந்தக் கருவிழியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இறந்தவரிடமிருந்து தானமாகப் பெற்ற கண்ணின் கருவிழியை அறுவை மருத்துவம் மூலம் பொருத்திவிடுகிறார்கள். இப்போது கண்ணுக்குள் ஒளி செல்வதன் மூலம், பார்க்க முடியும்.
தேவை விழிப்புணர்வு
‘நான் என் கண்ணைத் தானம் செய்துவிட்டேன்’ என்று பலரும் சொல்வதைக் கேட்கிறோம். ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்களோ அல்லது மனமகிழ் மன்றத்தைச் சார்ந்தவர்களோ கூட்டாக 50 பேர் சேர்ந்து கண்களைத் தானம் செய்ததாக நாளிதழ்களிலும் அடிக்கடி பார்க்கிறோம். ஒருவர் ரத்ததானம் செய்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. அவரிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் 50 பேர் கூட்டாகச் சேர்ந்து கண்தானம் செய்தார்கள் என்றால், அதில் அர்த்தம் ஏதுமில்லை.
ஏனென்றால் கண்தானம் என்பதே ஒருவருடைய இறப்புக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்வு. இதைப் போலப் பெரிய விழாக்களில் வெறுமனே கண்தானப் படிவங்களைப் பூர்த்தி செய்வது, திருமண நாளில்- மணமக்கள் கண்தானம் செய்வதாக அறிவிப்பது போன்றவை எல்லாம் விழாக்களுக்கு முக்கியத்துவம் பெற்றுத் தரும். ஆனால், உடனடியாக எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. வெறும் படிவங்களைப் பூர்த்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை ஆய்வுகளும் தெளிவுபடுத்துகின்றன.
எது பயன் தரும்?
இப்படிப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருபவர்கள் எல்லாருமே பெரும்பாலும் இளைஞர்கள். படிவத்தைப் பூர்த்தி செய்வதோடு சரி, பிறகு பலரும் மறந்தும் விடுகிறார்கள். இதற்குப் பதிலாக, தங்கள் பகுதியில் வாழும் வயதான முதியோரை அணுகிக் கண்தானத்தின் முக்கியத்துவத்தைக் கூறி, இறப்புக்குப் பின் கண்தானம் செய்யும்படி வலியுறுத்தலாம். கண்தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள், வீட்டு வரவேற்பறையில் கண்தானம் செய்ய விருப்பம் உள்ள குடும்பம் என்று எழுதி வைக்கலாம்.
தங்கள் பகுதியில் யாராவது இறந்துபோனால் நண்பர்களோடு சேர்ந்து அவ்வீட்டாரை அணுகி, கண்தானத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி உடன் தானம் செய்ய ஏற்பாடு செய்யலாம். கண்தானம் செய்ய முன்னரே பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒருவர் இறந்த பிறகு அவருடைய நெருங்கிய உறவினர், நண்பர்கள் சம்மதம் தெரிவித்தாலே கண்களைத் தானமாகப் பெற முடியும்.
விருப்பமுள்ளவர்கள் கூடி, இதை ஒரு இயக்கமாகவே நடத்தலாம். இதுதான் உடனடி பயன்தரக்கூடியது; அவசியத் தேவையும்கூட. ஏனென்றால் கருவிழி பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தானம் மூலம் கிடைக்கும் கண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. தானமாகக் கிடைக்கும் இரண்டு கண்கள் இருவருடைய வாழ்க்கையில் ஒளி கிடைக்கச் செய்வதால், தானத்தில் சிறந்த தானமாகக் கண்தானம் பேசப்படுகிறது. எனவே, கண்தானம் செய்வதை ஒரு குடும்ப நிகழ்வாக மாற்றுவோம்.
கட்டுரையாளர், தேசியக் கண் மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT