Published : 08 Aug 2020 09:35 AM
Last Updated : 08 Aug 2020 09:35 AM

உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு என்ன வைத்திருக்கிறோம்?

கரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் சூழ்நிலையில், மக்களைப் பாதுகாக்கும் போர் வீரர்களாக விளங்குபவர்கள் மருத்து வத் துறையினரே. ஆனால், தற்போது மருத்துவத் துறையினரே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவருவது, அவர்களுடைய பாதுகாப் பைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் நோயாளி களின் எண்ணிக்கையைப் போலவே கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்த முறையான விவரங்களை மத்திய, மாநில அரசுகள் இதுவரை வெளியிடவில்லை.

மருத்துவர்கள் உயிரிழப்பு

இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் ராஜிவ் ஜெயதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 104-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனாவுக்குப் பலியான முதல் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் (55), அதேபோல் கடந்த மாதம் உயிரிழந்த தூத்துக்குடி அரசு மருத்துவர் கல்யாணராமன் (54), மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமாறன் (52), சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த தலைமைச் செவிலியர் பிரிசில்லா (59), ஆர்க்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த அர்ச்சனா (35) ஆகியோர் கரோனாவால் உயிரிழந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

“எங்கள் அமைப்பு சார்பில் சேகரிக்கப்பட்ட தக வலின்படி தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் இருபது மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் குறித்த தகவல்களை அரசு தனியாகச் சேகரிக்கவில்லை. எங்களைப் போன்ற அமைப்புகள்தாம் தகவல்களைச் சேகரித்துவருகிறோம்” என்கிறார் இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகச் செயலாளர் ஏ.கே.ரவிகுமார்.

அதேநேரம் தமிழகத்தில் தனியார், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்திருக்கக்கூடும் என்று விவரமறிந்த மருத்து வர்கள் கூறுகிறார்கள். இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஐம்பது லட்ச ரூபாய் நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, பணியின்போது கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதற்கு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரணத் தொகை ஆகியவை வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களில் 55 சதவீதத்தினர் அறுபது வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். மேலும், ஐம்பது முதல் நாற்பது வயதுக்குள் உயிரிழந்த மருத்துவர்களின் சதவீதம் 21-லிருந்து 29.6வரை உள்ளது. உயிரிழந்த மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் பொது மருத்துவர்கள் (General Medical practioner). இவர்கள் பெரும்பாலும் அலோபதி மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவத் துறைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

55-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு

முறையான வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தாலே மருத்துவர்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவர், பட்ட மேற்படிப்பு மருத்துவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம், “பெருந்தொற்றுக் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் மருத்துவத் துறையினருக்கு உண்டு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதேநேரம் நாளுக்கு நாள் நோயாளிகள் பாதிக்கப்படுவதுபோல் மருத்துவர்களும் கரோனாவால் பாதிக்கப்படுகி றார்கள். மருத்துவர்களின் உயிரிழப்பும் அதிகரித்தி ருப்பதால் மருத்துவத் துறையினர் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் அதிகப்படியாக அச்சமடைந்திருக்கிறார்கள்.

உயிரிழந்த பெரும்பாலான மருத்துவர்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே உள்ளனர். கரோனா நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் ஐம்பது வயதைக் கடந்தவர்கள்தாம். அரசு இதைக் கவனத்தில் கொண்டு 55 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களுக்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் 59 வயதுவரை பலருக்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் மருத்துவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இவ்வாறு ஏற்படும் அநியாயமான உயிரிழப்பை அரசு தவிர்த்திருக்க முடியும்” என்கிறார் அவர்.

பணிச்சுமையும் தாமதப் பரிசோதனையும்

கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு உடை (PPE KIT), முறையான பரிசோதனை, சுழற்சி முறைப் பணி போன்றவை வழங்கப்பட வேண்டும் எனப் பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. இது குறித்து முதுகலைப் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூறுகையில், “பாதுகாப்பு உடைதான் எங்களை கரோனாவிலிருந்து பாதுகாக்கும் கவசம். ஆனால், அது தரமற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதேபோல் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பதினான்கு நாள் தனிமைப்படுத்துதல், தற்போது ஏழு நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டால் பதினான்கு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானது.

ஆனால், பணிச்சுமை காரணமாக நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் கரோனா சிகிச்சை பணி வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு மாதத்துக்கு ஒருமுறை கரோனா சிகிச்சைப் பணி மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது” என்கிறார் அவர்.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிவந்த முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன் (24) மருத்துவ மனை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். கூடுதல் பணிச்சுமை காரணமாகவே கண்ணன் தற்கொலை செய்துகொண்டதாக சக மருத்துவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்தத் தற்கொலை தொடர்பான வழக்கு நடைபெற்றுவருகிறது.

மன அழுத்தம்

மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரான சுகுமாறனின் மனைவியும் மகப்பேறு மருத்துவருமான ஜெயப்பிரியா கூறுகையில், “முறை யான பாதுகாப்பு அம்சங்களுடன்தான் என் கணவர் தொடர்ந்து காய்ச்சல், கரோனா பணியில் ஈடுபட்டார். ஆனால், அவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார்” என்கிறார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஐந்து மாதங்களுக்கு மேலாக கரோனா பிரிவில் பணியாற்றிவருகிறேன். ஆனால், எனக்கு இரண்டு முறை மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்ய நாங்கள் உள்ளோம். ஆனால், எங்களுக்குப் பரிசோதனை செய்ய யாருமில்லை. இந்த சூழ்நிலையில் மூன்றாம் முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்குக் கரோனா உறுதிசெய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை முடியும் காலத்துக்கு முன்பாகவே, மீண்டும் பணிக்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

சென்னையிலேயே வீடு இருந்தும், நான் மருத்துவமனை விடுதியில்தான் தங்கியுள்ளேன். இதற்குக் காரணம் பணிச்சுமைதான். இங்கு வழங்கப் படும் உணவு எங்களுடைய நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்க உதவவில்லை. இதுபோன்ற இறுக்கமான பணிச் சூழ்நிலையில் என்னுடைய மனநிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் உள்ளனர். அதேபோல் தனியார்த் துறையில் ஒரு லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். மற்ற மாநிலங் களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் 700 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர். இதைத் தவிர்த்து கரோனா அவசர காலத்தை முன்னிட்டு இளநிலைப் பயிற்சி மருத்துவர்கள் மூன்றாயிரம் பேர், முதுநிலைப் பயிற்சி மருத்துவர்கள் 1,500 பேர் உள்ளனர்.

“நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மருத்துவர்கள் உள்ளனர். இவர்களுக்குப் போதுமான இடைவெளியில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணி வழங்கலாம். ஆனால், தொடர்ச்சியாக மூன்று வாரத்துக்கு ஒருமுறை கரோனா சிகிச்சைப் பணி வழங்கப்படுகிறது. கரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உடலில் நோய்த் தடுப்பாற்றால் உருவாகி இருக்கிறதா, இல்லையா என்றறிய ‘எதிரணுப் பரிசோதனை’ கட்டாயம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியும்” என்கிறார் டாக்டர் ராமலிங்கம்.

மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், முன்களப் பணியாளர்களான மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமைதானே?

நிவாரணம் அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைவர் எஸ்.சுகுமாறன், திருச்சி கள்ளமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எஸ்.பிச்சைமணி, மற்றும் 26 முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மட்டும் நிவாரணத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x