Last Updated : 17 Jul, 2020 12:05 PM

 

Published : 17 Jul 2020 12:05 PM
Last Updated : 17 Jul 2020 12:05 PM

சிரிப்பிலும் இருக்கிறது விட்டமின் ‘சி’!

கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கும் இணையம் பெரும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில், ஆரோக்கியமான விஷயங்களைக் கேட்பதற்கும் ஆலோசனைகளுக்கும்கூட இணையவழி உதவி தற்போது அதிகரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடங்கி, சமூகத்துக்குத் தேவையான பல விஷயங்களையும் துறைசார் பிரமுகர்களின் உரை வழியாக விழிப்புணர்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது ‘குதிர்’ - மெய்நிகர் பகிர்வு அரங்கம். இந்த அமர்வை வாரம்தோறும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஒருங்கிணைத்துவருகிறார் எழுத்தாளர் சுகதேவ்.

அண்மையில் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா ‘அறிந்து தெளிவோம்; புரிந்து வெல்வோம்’ என்னும் தலைப்பில் கரோனா குறித்த விழிப்புணர்வைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் பகிர்ந்துகொண்டார்.

2013 முதல் 2017 வரை சென்னை, அம்பத்தூரிலுள்ள சர் இவான் ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக சேவையாற்றி போது, 4000 குழந்தைகளின் பிரசவத்தை கையாண்ட அனுபவத்துக்கு உரியவர் ஜெயஸ்ரீ சர்மா. தற்போது சென்னை, கோடம்பாக்கத்திலுள்ள சரோஜா கருத்தரிப்பு மையத்தின் இயக்குநராக இருக்கும் இவரது உரையிலிருந்து சுருக்கமான வடிவத்தை இங்கே தருகிறோம்.

காதில் ஒலிக்கும் கரோனா

கடந்த மூன்று மாதங்களாகவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைவரது காதுகளிலும் கரோனா குறித்த செய்திகள் விழுந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிலும் புயல் போன்ற செய்திகளுக்கு இடையில் நம்மை ஆசுவாசப்படுத்தும் மூச்சுக்காற்று போல் அமையும் செய்தி, கரோனா பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணியின் கருவில் இருக்கும் சிசுவுக்கு கரோனா பாதிப்பு பரவுவதில்லை என்பதுதான்! ஒரு மகப்பேறு மருத்துவராக ஆறுதல் அளிக்கும் விஷயமாக இதைப் பார்க்கிறேன். கரோனா பாதித்த தாயிடமிருந்து கருவிலிருக்கும் சிசுவுக்குத் தொற்று பரவியதாக பெரிய அளவுக்கு ரிப்போர்ட் எதுவும் ஆகவில்லை. ஆனாலும், அப்படிப்பட்ட குழந்தைகளையும் தனிமைப்படுத்தி, தொற்று ஏதும் பரவாமல் கவனத்துடன் பாதுகாக்கிறது மருத்துவ உலகம்.

கரோனா எதிர்ப்பில் நாம் ஒவ்வொருவருமே தன்னார்வலர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை நோக்கியே நம்முடைய திட்டமிடல்கள் அமைய வேண்டும். கரோனா வருவதற்கான அறிகுறிகள் இருப்பவர்களின் வீடுகளிலும் ‘வீட்டிலிருக்கும் நபர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்’ என்ற வாசகங்களுடன் கூடிய அறிவிப்புகளை சுகாதாரத் துறையினர் வைக்கின்றனர். இதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடாகப் பார்க்க வேண்டுமே தவிர, பீதியைப் பரப்பும் விஷயமாகப் பார்க்கக் கூடாது. நமக்கும் பாஸிட்டிவ் என்றால் நம் வீட்டிலும் இப்படி ஸ்டிக்கர் ஓட்டுவார்களே என்று பரிசோதனைக்கு செல்லாமல் பலர் இருந்துவிடுகின்றனர். இந்தத் தவறான புரிதலைத் தவிர்க்க வேண்டும்.

தேவை எஸ்.எம்.எஸ்.

கரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் அதிலிருந்து மீள்வதற்குப் போராடுவதைவிடச் சிறந்தது, வராமலேயே தடுப்பதுதான். அதற்குத் தேவையான கரோனா வருமுன் பாதுகாப்பு வழிதான் இந்த ‘எஸ்.எம்.எஸ்’.

வீட்டை விட்டு அத்தியாவசியத் தேவைக்காக வெளியே போகும்போது, தகுந்த சமூக இடைவெளியைக் (6 அடி தள்ளி நிற்பது) கடைப்பிடிப்பது அவசியம். அண்மையில் உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ் கிருமிகள் காற்றில் எட்டு மணி நேரம்வரை இருக்கும் என்று அறிவித்துள்ளது. மூக்கு, வாயைத் தகுந்தபடி மூடும் துணியினாலான முகக் கவசத்தைப் பயன்படுத்துவது நலம். சோப்பு போட்டு கை, கால்களை 20 நொடிகளுக்குக் குறையாமல் தேய்த்துக் கழுவுவது முக்கியம். இதோடு வெளியிலிருந்து வீட்டுக்குள் வருபவர்கள் சுடுநீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டை பகுதியில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

ஏன் பரிசோதனை அவசியம்?

கரோனா பாதிப்பைத் தொடக்கத்திலேயே கண்டறிவது அவசியம். ரத்த ஓட்டத்தில் தேக்கத்தை உண்டாக்குவது, நுரையீரலுக்கு வைரஸ் பரவுவது போன்ற மோசமான நிலை 100 நோயாளிகளில் ஒருவருக்கே ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு பரிசோதனை அவசியம். கரோனா பாதித்து அதிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாதான் இன்னொரு நோயாளியைக் காப்பாற்றுவதில் பெரும் பங்களிக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலேயே இரண்டாவதாக பிளாஸ்மா வங்கி தமிழகத்தில் தொடங்கவிருப்பதாக அண்மையில் முதல்வர் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் முக்கியத்துவத்தை

நாம் புரிந்துகொள்ளலாம். அதனால், தேவையில்லாத வதந்திகளை, தவறான கற்பிதங்களை அடுத்தவருக்குப் பரப்பாமல் இருப்பதும், அப்படிப்பட்டவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதும் கரோனா குறித்த விழிப்புணர்வில் தலையாய அம்சம்.

உருமாறும் கரோனா

பல பரிசோதனை முறைகள் இருந்தாலும் ஆர்.டி.பி.ஸி.ஆர். பரிசோதனை மிகவும் முக்கியமானதாகவும் நம்பகத்தன்மையுள்ளதாகவும் இருக்கிறது. மூக்கின் உள்ளே இருந்து சளி மாதிரியை எடுத்துச் செய்யப்படும் இந்தப் பரிசோதனை முடிவுகள் 70 முதல் 90 சதவீதம் சரியாக இருக்கிறது. அதனால், இப்படிப்பட்ட பரிசோதனையை தவிர்ப்பது புத்திசாலித்தனமல்ல.

இந்தியச் சூழ்நிலையை நன்கு ஏற்றுக்கொண்டு பரவிவரும் வைரஸாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை கோவிட் 19 வைரஸ் 10-லிருந்து 15 வகைகளில் உருமாற்றம் (Mutation) அடைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குக் கொடுக்கும் மஞ்சள், பூண்டு இவற்றுடன், விட்டமின் சி சத்து நிறைந்த கொய்யாப்பழம், நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிடுங்கள். வாய்விட்டுச் சிரியுங்கள். என்னைப் பொறுத்தவரை சிரிப்பிலும் விட்டமின் ‘சி’ இருக்கிறது”!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x