Published : 11 Jul 2020 09:02 AM
Last Updated : 11 Jul 2020 09:02 AM
இ. ஹேமபிரபா
நாவல் கரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்குப் பரவும். இவ்வாறு பரவுவதற்கு முக்கியக் காரணியாகக் கூறப்படுவது, நோய் பாதிப்புள்ள ஒருவர் இருமினால், தும்மினால் வெளியேறும் சளி, எச்சில் உள்ளிட்டவை. இந்த நீர்த் திவலைகளை மற்றொருவர் வாய், மூக்கு, கண் மூலம் அவர் உடலுக்குள் செல்லும்போது நோய்த் தொற்று ஏற்படுகிறது.
இந்நிலையில், நீர்த் திவலைகள் (Droplet) மட்டுமல்ல சாதாரணமாகப் பேசும்போது, மூச்சுவிடும்போது வெளியேறும் நுண்திவலைகள்கூட காற்றில் மிதந்து, பரவி நோய்த் தொற்றை உண்டாக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்தை உலக சுகாதார நிறுவனத்திடம் ஆய்வாளர்கள் பலமுறை எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆய்வாளர்கள் பகிரங்கக் கடிதமாக வெளியிட்டிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமும் இப்போது செவிசாய்க்கத் தொடங்கியிருக்கிறது.
காற்றுவழிப் பரவும் நோய்
ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மில்லிமீட்டர். ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மைக்ரோமீட்டர் (அ) மைக்ரான்.
காற்றுவழிப் பரவுதல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இந்த அளவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக நம் தலைமுடியின் தடிமன் 75 மைக்ரான். கரோனா வைரஸ் 0.1 மைக்ரான் அளவு மட்டுமே இருக்கும். நாம் தும்மும்போது வெளியேறும் நீர்த்திவலைகள் 5 மைக்ரானைவிட பெரிதாக இருக்கும். நாம் பேசும்போதும், மூச்சுவிடும்போதும், பாடும்போதும்கூட நுண்திவலைகள் வெளியேறும். இவை 5 மைக்ரானைவிட சிறியதாக இருக்கும். நீர்த்திவலைகள் அளவில் பெரிதாக இருப்பதால் அதிகபட்சம் 3 முதல் 6 அடி தொலைவு மட்டுமே பயணிக்க முடியும்.
பின்பு தரையில் படிந்துவிடும். ஆனால், நாம் பேசும்போது வெளியேறும் நுண்திவலைகள் அளவில் சிறியதாக இருப்பதால், நீண்ட தூரம் காற்றில் மிதந்து செல்ல முடியும். 30 அடி அளவுகூட செல்ல முடியும், கிட்டத்தட்ட ஓர் அறை முழுக்க அவற்றால் பரவ முடியும். இந்த நுண்திவலைகளில் கரோனா வைரஸ் இருக்கலாம் என்பதால், காற்றின் மூலமும் பரவி தொற்று ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் – நாவல் கரோனா வைரஸோடு 95 சதவீதம் ஒத்துப்போகக்கூடிய சார்ஸ் வைரஸும் காற்றில் பரவக்கூடியதே.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
காற்றினால் பரவும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருவதற்கு பல காரணிகள் இருக்கின்றன. இரண்டு ஆய்வுக்களங்களை இதற்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.
முதல் ஆய்வுக்களம்: கரோனா வைரஸ் தொற்றின் வீரியத்தை உணர்ந்த சீன அரசு, கரோனா வைரஸ் தொற்று தொடங்கிய வூகான் மாகாணத்தை ஜனவரி 23ஆம் தேதி மொத்தமாக முடக்கியது. அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற ஒருவர், வூகானில் இருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு உணவகத்தில் தன் குடும்பத்துடன் உணவருந்தினார். அந்த வேளையில் தனக்குத் தொற்று இருந்தது அவருக்குத் தெரியாது.
அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து 15 அடி இடைவெளியில் உணவருந்திய 10 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் அப்போது நோய்த்தொற்று அதிகமில்லை என்பதால், வூகானில் இருந்து வந்த நபரைத் தவிர வேறு யார் மூலமாகவும் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியமும் இல்லை. அந்த உணவகம் காற்றோட்டம் இல்லாத இடமாக இருந்திருக்கிறது. எனவே, காற்று மூலம் பரவி தொற்று ஏற்பட்டிருப்பது ஒன்றே இங்கே சாத்தியம்.
இரண்டாவது ஆய்வுக்களம்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மார்ச் 10ஆம் தேதி ஒரு இசை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு கரோனா தொற்றுக் காரணிகள் நன்கு தெரிந்திருந்தது. தேவையான அளவு தனிநபர் இடைவெளி பராமரிக்கப்பட்டது. ஒருவரையொருவர் தொடவில்லை. பங்கு பெற்றவர்கள் சோப்பு, சானிடைசர் பயன்படுத்தினார்கள். இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னும், அதில் பங்கேற்ற 61 பேரில் ஒருவருக்கு மட்டும் லேசான இருமல் இருந்துள்ளது.
ஆனாலும், 53 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அதிகக் காற்றோட்டம் இல்லாத மூடிய அறைக்குள் நடந்த நிகழ்வில், இத்தனை பேருக்குத் தொற்று ஏற்படுவதற்குக் காற்று மூலம் பரவியது ஒன்றே காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பேசும்போது, மூச்சுவிடும்போது வெளியேறும் நுண்திவலைகளைக் காட்டிலும், அதிக சத்தத்துடன் வாய் திறந்து பாடும்போது வைரஸ் அதிகளவு பரவும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?
இதுபோன்ற பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் தங்களுடைய தொடர் ஆய்வு முடிவுகளை உலக சுகாதார நிறுவனத்திடம் ஆய்வாளர்கள் எடுத்துக்கூறி, நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைப்பார்கள். இந்நிலையில், ‘இந்த நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது என்பதற்கு நிறைய சான்றுகளை எடுத்துரைத்தும், உலக சுகாதார நிறுவனம் முறையான பதில் தராததால், பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டோம்' என்று கடிதத்தில் ஒப்பமிட்ட ஓர் ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார்.
‘கோவிட்-19 நோய் காற்றின்வழி பரவும் என்பதைப் பேசவேண்டிய காலம் வந்துவிட்டது (It is Time to Address Airborne Transmission of COVID-19)' என்னும் தலைப்பிலான அந்தக் கடிதம் ஜூலை 6 வெளியானது. அதற்கு மறுநாள் உலக சுகாதார நிறுவனம், ‘பொதுஇடங்களில் குறிப்பாக, நெரிசலான, மூடிய, காற்றோட்டம் இல்லாத சூழ்நிலைகளில் கரோனா வைரஸ் காற்றால் பரவும் என்னும் சாத்தியக்கூறை நிராகரிக்க முடியாது. இருந்தாலும், மேலும் சான்றுகள் சேகரிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட வேண்டும், அப்படிப்பட்ட ஆய்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும்' என்பதே.
ஏன் இத்தனை இழுபறி?
உலக சுகாதார நிறுவனம் அறுதியிட்டுச் சொல்லாமல் இருப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு கொலை நிகழ்வை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, குற்றத்தை நிரூபிக்க சான்று தேவை. அந்த நிகழ்வை யாராவது நேரில் பார்த்திருந்தால், அது வலுவான சான்று. ஆனால், பெரும்பாலான இடங்களில் நேரில் பார்த்த சாட்சி இருக்காது என்னும்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அந்நேரத்தில் இருந்த இடம், அவரின் உள்நோக்கம் போன்ற மற்ற சான்றுகளை மூலம் குற்றம் நிரூபிக்கப்படும். காற்றின் மூலம் கரோனா பரவும் என்பதற்கு ஆய்வாளர்கள் நேரடியான சான்றுகளை இன்னும் தரவில்லை. அத்தகைய சான்றுகள் இருந்தால் மட்டுமே, உலகளாவிய அமைப்பு அந்தத் தகவலை உறுதியுடன் தெரிவிக்கும்.
ஆனால், குறுகிய காலத்தில் அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளுவது கடினம். ஆனாலும், ஆய்வுக்களங்களில் தரவுகளை சேகரித்து, அங்கே எவ்வாறு பரவியிருக்கலாம் என்ற மறைமுகக் கணிப்புகள் காற்றின்வழி கரோனா வைரஸ் பரவும் என்கின்றன. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நேரடி ஆய்வு முடிவுகளுக்குக் காத்திருக்காமல், இந்தக் கணிப்புகளை வைத்து ‘காற்றில் பரவும்’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அந்நிறுவனம் நேரடியாக சொல்லாத வரைக்கும், இது காற்றால் பரவாது என்றுதான் மக்கள் நினைப்பார்கள். எனவே, விஷயத்தை சுற்றிவளைக்காமல் உலக சுகாதார நிறுவனம் சொல்வதே மக்களுக்கு நன்மை பயக்கும். ஆய்வாளர்களின் பரிந்துரையைவிட உலக சுகாதார நிறுவனம் இவ்விஷயத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே அரசு அமைப்புகள் அதற்கேற்ற நடவடிக்கைகளை முடுக்கிவிடும்.
என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
நேரடியாக மட்டுமே பரவும், காற்றின் மூலம் பரவாது என்னும் எண்ணம் இருக்கும்வரை, ஒரே அறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம், ஒரு மீட்டர் இடைவெளி இருந்தால் பிரச்சினையில்லை என்று நினைப்போம். ஆனால், காற்றோட்டம் இல்லையென்றால் அந்த அறையில் 15 அடி தொலைவில் ஒருவர் அமர்ந்திருந்தால்கூட தொற்று ஏற்படலாம். மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் இருப்பார்கள் என்பதால், அங்கிருக்கும் காற்று சுழற்சி முறையில் வெளியேற்றப்பட வேண்டும். N95 போன்ற வலுவான முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
சத்தமாகப் பேசும்போதும், பாடும்போதும் அதிகளவு தொற்றுக் கிருமிகள் வெளியேறும் என்பதால் பிரார்த்தனைக் கூட்டங்கள், காய்கறி சந்தைகள் போன்ற இடங்களில் காற்றோட்டம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். கோயம்பேடு சந்தையின்வழி கரோனா தொற்று நிறைய பேருக்குப் பரவியதற்கு, நேரடி தொடுதல் மட்டுமே காரணமாக இல்லாமல், காற்றுவழிப் பரவல் முக்கிய காரணியாக இருந்திருக்கலாம். தற்போது அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அதிகளவு நோய்த்தொற்று பரவியதற்கும் காற்றுவழிப் பரவல் காரணமாக இருந்திருக்கலாம். எனவே, முக்கிய அலுவல் கூட்டங்கள் இணையம்வழி நடத்துவது சிறந்தது.
கடின உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு வைரஸ் தாங்கிய நுண்திவலைகள் வெளியேறும் என்பதால் உடற்பயிற்சி நிறுவனங்களைத் திறப்பது குறித்தும், அவை அமைந்திருக்கும் இடம் குறித்தும் ஆய்வுசெய்ய வேண்டும். உணவகங்கள் மூடிய இடமாக இருப்பதைக் காட்டிலும், திறந்தவெளியில் அமைப்பது நல்லது. மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கரியமில வாயு அளவிடும் கருவிகளைப் பொருத்தினால், குறிப்பிட்ட அளவுக்குப் பிறகு காற்றை சுழற்சி செய்ய ஏதுவாக இருக்கும். ஏற்கனவே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவற்றையும் கருத்தில்கொள்வது அத்தனை கடினமல்ல. இனி கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT