Published : 01 Feb 2020 10:20 AM
Last Updated : 01 Feb 2020 10:20 AM
தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் புகைப்பவர்களாக உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு நான்கு வாரங்களுக்கு முன்னால் புகைபிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு மயக்க மருந்தால் ஏற்படும் பிரச்சினைகள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன.
தொடர்ந்து புகைபிடித்துக்கொண்டிருப்பவர் நான்கு வாரங்கள் புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு, அவருடைய உடலில் அவசியமான உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் 19 சதவீதம் அதிகரித்துச் சீராகிறது. சிகரெட், பீடி ஆகியவற்றில் உள்ள நிகோடினும் கார்பன் மோனாக்சைடும் பிராண வாயுவின் அளவைக் குறைத்து இதயக் கோளாறுகளை அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் அதிகரிக்கும்.
அடுப்புப் புகை மரணங்கள்
உலகில் பெரும்பாலான நாடுகளில் பெண்களே அதிகம் சமையலில் ஈடுபடுபவர்களாக இன்றும் இருக்கின்றனர். விறகு அடுப்புகளால் உண்டாகும் மாசுபாடு மிகுந்த புகையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர். அடுப்புப் புகையால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உலகம் முழுவதும் ஐந்து லட்சம் பெண்கள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் ஏற்படும் புகை பாதிப்பு காரணமாக, குழந்தைகள் எடைகுறைவாகப் பிறக்கின்றன.
ஆர்இஎம் உறக்கம்
உறக்கத்தில் ஆழ்ந்து 90 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்படும் உறக்கநிலை ஆர்இஎம் (Rapid eye movement) என்று அழைக்கப்படுகிறது. உறக்கத்தின் முதல் நிலை ஆர்இஎம் பத்து நிமிடங்கள் நீடிக்கும். அடுத்தடுத்த நிலையில் நேரம் நீண்டு ஒரு மணிநேரம் வரை நீடிக்கும். கண்களின் அசைவு அதிகம் இருக்கும் இந்த நிலையில் மூளையும் இதயத் துடிப்பும் மூச்சும் வேகமாக இருக்கும். இந்த நிலையில்தான் கதைகளைப் போன்ற தீவிரமான கனவுகள் வரும். குழந்தைகள் தங்கள் தூக்கத்தில் 50 சதவீதத்தை இந்த நிலையில் கழிக்கின்றன. பெரியவர்கள் தங்கள் தூக்கத்தை 20 சதவீதம் கழிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT