Published : 11 Jan 2020 11:37 AM
Last Updated : 11 Jan 2020 11:37 AM

பனியும் பிணியும்

திருவருட் செல்வா

தமிழர், பருவத்துக்கான காலங்களைப் பெரும் பொழுது ஆறு, சிறு பொழுது ஆறு எனப் பிரித்துள்ளனர். பெரும் பொழுது ஆறில் முன் பனிக் காலம், பின் பனிக் காலம் இரண்டும் இடம்பெறும். முன் பனிக் காலத்தில் நம் உடலுக்கு வரக்கூடிய பிரச்சினைகளைத் தீவிரமாக்காமல் கடந்து விட்டாலே ஒருவாறு பின் பனிக் காலத்தை சமாளித்துவிடலாம்.

மழைக் காலத்தில் வரக்கூடிய அனைத்து நோய்களும், பனிக் காலத்தில் இரு மடங்காக நம்மைத் தாக்கலாம், மழைக் காலத்தில் உடலைச் சரியாகப் பேணத் தவறினால், மழைக் காலத்தில் உதித்த நோய்க் காரணிகள் வலுவடைந்து வெகு எளிதாக எதிர்ப்பாற்றல் குறைவானவரைத் தாக்கி பல விதமான நோய்களையும் எளிதில் வரவழைத்துவிடும்.

நுண்ணுயிர்க் கிருமிகள்

பனிக் காலத்தில், துணிகளை வெயில் படாத இடத்தில் வைத்தால், அதன் மேல் பூஞ்சை படர்ந்துவிடும். அதைக் கவனிக்காது அணிந்தால், அது உடலில் பட்டுப் படை, படர்தாமரையாக உருவெடுக்கும்.

வெயிலில் துணிகளை உள்பக்கத்தை வெளிப்புறமாகக் காய வைக்க வேண்டும். அதே போலக் காலை இளம் வெயிலில் உடலையும் சிறிது காட்டலாம். ஒரு கைப்பிடி கசக்கிய வேப்பிலை, மஞ்சள் போட்டுக் கொதிக்கவைத்த நீரில் குளிக்கலாம். குறிப்பாக, உள்ளாடைகளின் இருபக்கங்களிலும் இஸ்திரி செய்து அணிவது நல்லது.

தோல் வறட்சிக்குக் குளித்து வந்த பின் ஈரப்பதத்தைத் தரும் களிம்புகளைத் தவிர்த்து நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய்யைக் கை கால்களில் தேய்த்துக்கொண்டால், தோல் வறட்சி ஏற்படாது.

பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு, சுத்தமான தேங்காய் எண்ணெய்யைத் தலை மேற்தோலில் படுமாறு தேய்த்து, அதிகம் நுரை வரக்கூடிய சாம்பூக்களைத் தவிர்த்து கடலை மாவைத் தண்ணீரில் குழைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

என்ன பாதிப்புகள் ஏற்படும்?

நீர்ச்சத்தும் நார்ச்சத்தும்

பனிக் காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்போம், ஆனால் தண்ணீர் குடிக்கும் அளவு நம்மை அறியாமலேயே குறையும். தாகமும் பெரிதாக எடுக்க வாய்ப்பில்லை. இதன் விளைவாக உடல் வறட்சி ஏற்படும். கூடவே பனிக் காலத்தில் குளிர்ச்சியான சூழல் காரணமாகப் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்ப்போம்.

இதனால் நார்ச்சத்தும் குறையும். இவை இரண்டின் விளைவாக மலக்கட்டு, மூலம், பித்த வெடிப்பு, கால்களில் பித்த வெடிப்பு வருவது போல ஆசன வாயைச் சுற்றி வெடிப்பு ஏற்படும். உதட்டில் வரும் வெடிப்புக்கும் காரணம் இதுவே. அசீரணம், நெஞ்செரிச்சல் போன்றவையும் ஏற்படும்.

தீர்வு என்ன?

குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது ஒரு நாளைக்கு அருந்த வேண்டும். பழங்கள் சாப்பிட முடியாவிட்டால், அதை ஈடு செய்ய நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். வறட்சியை அளிக்கக்கூடிய தோசை போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். உண்ட பின் 10 நிமிட சுறுசுறுப்பான குறுநடை அசீரணத்துக்குப் பெரிதும் பலனளிக்கும். எளிதில் செரிமானமாகும் உணவு வகைகள், வேகவைத்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். இவற்றை ஈடுசெய்ய இளஞ்சூடான தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.

சீரற்ற ரத்த ஓட்டம்

அதீத பனிப்பொழிவின் காரணமாக மாரடைப்பு மரணம் அதிகம் ஏற்படும். ரத்த நாளம் தொடர்பான நோய்களின் தீவிரமும் அதிகரிக்கலாம். தாடை இறுக்கம், பக்கவாதம், ரத்த நாளப் புடைப்பு, மூட்டு தொடர்பான நோய்கள், மனநலம் சார்ந்த நோய்கள், சளி தொடர்பான பிரச்சினைகள் ஆகியன ஏற்படலாம் அல்லது அதிகரிக்கலாம்.

பனிக் காலத்தில் ஏற்படும் ரத்த நாளச் சுருக்கத்தால் அவ்வுறுப்பின் செயல்திறன் குறைகிறது. அதைத் தொடர்ந்து நரம்புகளின் இயக்கம் பாதிப்படைகிறது. வயோதிகர் மரணம் பனிக் காலத்தில் அதிகரித்துக் காணப்படுவதற்குக் காரணம் இதுவே. கொரக்கு வலிக்கு நேரடி பனித்தாக்கம் ஒரு காரணம் என்றால், நீர்ச்சத்து குறைபாடு மற்றொரு காரணம் ஆகும்.

தீர்வு என்ன?

குளிர்ச்சி நிறைந்த உணவு, அதிக குளிர்ச்சியில் ஈடுபடுதல், அதிக குளிர்மை நிறைந்த நீர் அருந்துதல் போன்றவற்றைத் தவிர்த்தால் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளலாம். ஆறிய உணவைத் தவிர்த்து, இளஞ்சூடான உணவை உட்கொள்ள வேண்டும். ரத்த நாளத்தை விரிவடைய வைக்கக்கூடிய வல்லாரை (துவையல் / ரசம்), ரத்த ஓட்டத்தைச் சீராகச் செல்ல வைக்கக்கூடிய சின்ன வெங்காயம், பூண்டு முதலியவற்றை அதிகம் சேர்க்கலாம். நரம்புகளின் இயக்கத்தைத் தூண்ட உளுந்தங்கஞ்சி பருகலாம்.

சூட்டைத் தரக்கூடிய கம்பளித் துணிகளைப் போர்த்திக் கொள்ளுதல், வெளியில் செல்லும்போது அணிந்து செல்லுதல் போன்றவை குளிரைத் தாங்குவது மட்டுமல்லாமல், நரம்புகளுக்கும் ரத்த நாளங்களுக்கும் சூடு கொடுத்து ரத்த ஓட்டத்தைச் சீராகச் செல்ல வைக்க உதவும்.

மார்கழிப் பனியில் காலையில் கோலம் போடத் தண்ணீரைத் தொட்ட மாத்திரம் அடுக்குத் தும்மலும் மூக்கடைப்பும் பெண்களுக்கு ஏற்படும். இதற்குத் தீர்வு, காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் முகம், கை கால்களைத் துண்டில் நனைத்துத் துடைத்து, தலைக்குக் குல்லா அணிந்து பின் வேலைகளைத் தொடர்வது.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்

அதீத வெயில், அதீத மழை, அதீதப் பனி என ஏதாவது ஒரு பருவம் அந்தந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையில் இடையூறாக இருப்பதைக் கவனித்து வருகிறோம். நம் தமிழகம் மட்டுமே அனைத்துப் பருவங்களையும் உத்தமமாகப் பெற்று, மக்களின் உற்பத்தித் திறன், வாழ்க்கை முறைச் சூழல் போன்றவை செவ்வனே இடையூறின்றி இயங்கும் வரத்தைப் பெற்றுள்ளது. அப்படி இருக்கையில், இது போன்ற நமக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சினைகளை, மேற்கூறிய வகைகளில் பின்பற்றிப் பனிக் காலத்தில் ஏற்படும் பிணிகளிலிருந்து தப்பித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: siddhathiru@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x