Published : 01 Aug 2015 02:56 PM
Last Updated : 01 Aug 2015 02:56 PM
தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது.
இம்முறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயம் ஊற்றப்படும். பொதுவாக வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. சில நேரங்களில் மூலிகை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டுப் புளிக்க வைக்கப்பட்ட தானியாம்லம் (தானியங்களால் செய்யப்பட்ட காடி) பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை நரம்பு நோய்கள், பித்த நோய்களைக் கொண்ட வர்களுக்குச் செய்யப்படும்.
நோயாளியைப் படுக்க வைத்துத் தைலத்தை மிதமான சூட்டில் நெற்றியில் சீராக ஊற்றி அசைக்க வேண்டும். இது தூக்கமின்மை, தலைவலி, முடி உதிர்தல் போன்றவற்றுக்கு உகந்த சிகிச்சை. இந்தச் சிகிச்சை முறை 30-45 நிமிடம் வரை செய்ய வேண்டும்.
தாரை
ஆயுர்வேத சிகிச்சைகளில் மிக முக்கியமான சிகிச்சை இது. கேரளத்தில் மிகப் பிரபலமான சிகிச்சை முறை. தாரை என்று சொன்னால், உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு திரவத்தைச் சீராக விட்டுக்கொண்டிருப்பது என்று அர்த்தம். நோயாளியைப் படுக்கவைத்துக் கண்களை ஒரு துணியால் கட்டி, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து எண்ணெயையோ அல்லது வேறொரு திரவத்தையோ புருவ மத்தியில் சீரான வேகத்தில் விழச் செய்கிற சிகிச்சைதான் தாரை. சிரோ தாரை என்றால் தலையில் எண்ணெய், தைலம் போன்றவற்றைச் சீராக விழச் செய்வது. இதனால் மனமும் மூளையும் சீராக இயக்கப்படுகின்றன.
வாத, பித்த, கபங்களில் எந்த நோய்க்கு எந்த மருந்து தேவையோ, அந்த மருந்து தாரைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தலை மட்டுமல்லாமல் மூட்டுகளுக்கும் தாரை செய்யலாம். இவற்றை விவரிக்கும் தாரா கல்பம் என்று ஒரு நூலே உள்ளது. தலையில் பிராணனும் பல வர்மங்களும் உள்ளன. தலை, புலன்களின் இருப்பிடமாக உள்ளது. மனதின் ஸ்தானம் அது.
ஒரு ஆலமரத்தைப் போல மூளையை ஆதாரமாகக் கொண்டு கை, கால்கள் கிளைகளாக இருக்கின்றன. புத்தி, மன உறுதி, நினைவாற்றல் போன்றவை மூளையைச் சார்ந்திருக்கின்றன. தலையில் பிராண வாயு ஆலோசக பித்தம், போதக கபம், தர்பக கபம் ஆகியவை உள்ளன. ஸத்வ குணம், ரஜோ குணம் மூளையைப் பாதிக்கின்றன. தலையில் பல வகைகளில் எண்ணெய் தேய்ப்பதற்கு மூர்த்தத் தைல சிகிச்சை என்று பெயர்.
சரகரின் அத்தியாயம்
தலையின் மகத்துவத்தை விளக்க, கியந்த சிரசீயம் என்ற ஒரு அத்தியாயம் எழுதியுள்ளார் சரகர். சாலாக்யம் என்று சொல்லுகிற கண், மூக்கு, நாக்கு, காது ஆகியவற்றைக் கொண்ட தலைக்கு மருத்துவவியலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தலைமுடியைப் பற்றிய பல சிகிச்சைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. புத்தியும் மனமும் தலையிலேயே உள்ளன. காக்காய் வலிப்பு எனும் அபஸ்மாரம், உன்மாதம், மதம் போன்ற நோய்கள் தலையையே சார்ந்துள்ளன.
தைலங்களை வைத்துத் தாரை செய்யலாம். பாலை வைத்துத் தாரை செய்யலாம். மோரை வைத்துத் தாரை செய்யலாம். வெப்புக்காடி எனும் தானியம்லத்தை வைத்துத் தாரை செய்யலாம். உடலுக்குப் போஷாக்கு அளிப்பதற்குப் போஷாக்கான தைலம் மற்றும் நெய்களை வைத்துத் தாரைகள் செய்யலாம். உடலிலுள்ள கபத்தைக் குறைப்பதற்கு மோரை வைத்துத் தாரை செய்யலாம். பித்தச் சமனத்துக்கு இளநீரை வைத்தும் தாரை செய்யலாம்.
தாரை பாத்திரம்
இரண்டு அல்லது மூன்று லிட்டர் அளவு பிடிக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தை இதற்குப் பயன்படுத்தலாம். வாய் அகன்றதாக இருக்க வேண்டும். தாரைப் பாத்தி வெளி விளிம்பில் மூன்று துளைகளைப் போட வேண்டும். இந்தப் பாத்திரத்தை ஒரு கொக்கியில் மாட்டித் தொங்கவிட வேண்டும். இதன் உள்ளே ஐந்து அங்குலம் முதல் எட்டு அங்குலம்வரை ஆழம் இருக்க வேண்டும். அதன் அடியிலே சிறு விரல் செல்லும் அளவுக்கு ஒரு துளை இட வேண்டும்.
ஒரு கொட்டாங்கச்சியை, அந்தத் துளையின் மேலே வைக்க வேண்டும். அதன் மேலே ஒரு நூலைக் கட்டி அந்தத் துளை வழியாகத் தொங்கவிட வேண்டும். நூல் வெளியில் வராமல் இருப்பதற்கு அந்தக் கொட்டாங்கச்சியின் மேல் ஒரு கம்பைக் கட்டி வைக்க வேண்டும். பின்பு ஒரு கனமான துணியையோ, ஒரு திரியையோ அந்த ஓட்டை வழியாக இழுக்க வேண்டும். 12 அங்குலம் நீளம் உடையதாக அது இருக்க வேண்டும். தலைக்கும் அந்தத் திரிக்கும் இடையே மூன்று அங்குல இடைவெளி இருக்க வேண்டும். உயரத்தில் சிறிது ஏற்றத்தாழ்வு இருந்தால் பரவாயில்லை.
தாரைப் பாத்தி
தாரை மற்றும் எண்ணெய் மசாஜ் செய்வதற்கு மரத்தினால் ஆன பாத்திகள் செய்யப்படுகின்றன. ஒரு ஆளைப் படுக்க வைத்து எண்ணெய் தேய்ப்பதற்கான பாத்தி செய்வதற்குப் பலவிதமான மரங்கள் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் மாவிலங்கம், தேவதாரு, புன்னை, வேம்பு, வேங்கை, கருங்காலி, மருதம், பாதிரி போன்ற மரங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பத்தடி நீளம் உடையதாகவும், அகலம் 2.75 அடி உடையதாகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபருக்குத் தாரை செய்வதற்கு 2 லிட்டர் எண்ணெயாவது வேண்டும். தாரை செய்வதற்கு இரண்டு ஆட்கள் தேவை, மோர் போன்றவற்றைத் தினமும் மாற்றலாம். தேங்காய் எண்ணெயை 2 நாட்களுக்கு ஒருமுறை மாற்றலாம். எண்ணெயை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது. வாதானுபந்த நோய்களில் எண்ணெயும், வாத - கப நோய்களில் மோர் தாரையும் செய்யப்படுகிறது.
(சிரோ தாரை அடுத்த வாரம் நிறைவடையும்)
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை - 600 002
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT