Published : 21 Dec 2019 11:19 AM
Last Updated : 21 Dec 2019 11:19 AM

மருத்துவம் தெளிவோம் 14: கொழுப்புக் கல்லீரலுக்கு சிகிச்சை தேவையா?

டாக்டர் கு. கணேசன்

சமீப காலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான மருத்துவ வார்த்தைகளில் ‘கொழுப்புக் கல்லீரலும்’ (ஃபேட்டி லிவர் - Fatty liver) சேர்ந்துவிட்டது. முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடியதாக இருந்த இந்த நோய், இப்போது குழந்தைகளுக்கும் வருகிறது என்பதுதான் நம்மை உஷார்ப்படுத்தி இருக்கிறது.

கொலுப்புக் கல்லீரல் என்றால் என்ன?

பெயரே நோயைச் சொல்கிறது. அதாவது, கொழுப்பு மிக்க கல்லீரல்! இது எப்படி ஏற்படுகிறது? எதற்கும் அசராத கல்லீரல், இரண்டு விஷயங்களில் ‘ஆட்டம்’ காண்கிறது. ஒன்று, மது. மற்றொன்று, கொழுப்பு. மதுவில் இருக்கும் ஆல்கஹால் எப்படிப் பலசாலி கல்லீரலையும் நோஞ்சான் ஆக்கி, நம்மை மரணக் குழிக்குள் தள்ளுகிறதோ அதுபோல கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைக்கு நாம் சாப்பிடும் அதீத சர்க்கரையும் கொழுப்பு மிகுந்த உணவுகளும்தாம் முக்கியக் காரணங்கள்.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்துவைப்பதே கல்லீரல்தான். அவசரத்துக்கு உடலுக்கு சக்தியைத் தர இயற்கை தந்திருக்கும் ஏற்பாடு இது. இப்படிச் சேகரிக்கப்படும் கொழுப்பு ஒரு கட்டத்தில் கல்லீரலுக்கு எதிரியாகிவிடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

நம்முடைய தவறான உணவுப் பழக்கம்தான் கொழுப்புக் கல்லீரலுக்கு முக்கியக் காரணம். அதிலும் உடல் உழைப்பும் இல்லாமல், உடற்பயிற்சியும் செய்யாமல், மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடுகிறோம். இது போதாதென்று இடையிடையே நொறுக்குத்தீனி, வார இறுதி பார்ட்டி, மாதம் ஒரு பஃபே விருந்து.

அதிலும் செந்நிற இறைச்சிகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி உணவுகள், கார்ன் சிரப், ஜெல்லி, கேக், சிப்ஸ், ஐஸகிரீம், செயற்கை இனிப்புகள், குளிர் பானங்கள் என நமது உணவுமுறை முற்றிலும் மாறிவிட்ட பிறகு, உடல் பருமன் பிரச்சினை அதிகமாகி விட்டது. தம் வாழ்நாளில் மதுவை ஒருமுறைகூடத் தொடாதவருக்கும் கொழுப்புக் கல்லீரல் வருவது இப்படித்தான்.

கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைக்கு அடுத்த காரணம், நீரிழிவு நோய். இதில் இன்சுலின் சரியாகச் சுரக்காது என்பதால், ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாது. அதுபோல் தேவைக்கு மேல் உள்ள கொழுப்பு அமிலங்களும் ரத்தத்தில் தேங்கும்.

இவற்றைக் கல்லீரல் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். இதுவும் ஓர் அளவுக்குத்தான். அதற்குள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்திவிட்டால், கொழுப்புக் கல்லீரலுக்கு இடமில்லாமல் போகும். தவறினால், ‘முதல் கட்டக் கொழுப்புக் கல்லீரல்’ (Grade I Fatty Liver) தலையெடுப்பதைத் தடுக்க முடியாது.

கொழுப்புக் கல்லீரலின் பல நிலைகள்!

உணவிலிருந்து வரும் கொழுப்பு மொத்தமும் கல்லீரலில் சேரும் ஆரம்ப நிலைக்கு ‘முதல் கட்டக் கொழுப்புக் கல்லீரல்’ என்று பெயர். பெண்கள் ஃபேசியல் செய்யும்போது சில கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்வதைப் போல, கல்லீரலின் மேற்புறம் மட்டுமே கொழுப்பு படியும் நிலை இது எந்தவோர் அறிகுறியையும் வெளிக்காட்டாமல், எந்த வழியிலும் ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் ‘அமைதி’யாக இருக்கும். வேறு காரணத்துக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது, கொழுப்புக் கல்லீரல் இருப்பது எதேச்சையாகத் தெரியும்!

இந்த நேரத்தில் நாம் உஷாராகிவிட வேண்டும். முதல் கட்டத்துக்குக் காரணம் தெரிந்து அதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், இது இரண்டாம் நிலைக்குத் தாவிவிடும். இப்போது கல்லீரலில் அநேக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். இதுவரை மேற்பூச்சாக இருந்த கொழுப்புகள் கல்லீரலுக்குள் ஊடுருவுவதால் அங்கே அழற்சியும் வீக்கமும் உண்டாகின்றன.

கல்லீரல் செல்கள் இருக்கும் இடத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாகக் கொழுப்பு செல்கள் இடம் பிடிக்கின்றன. வீட்டில் சமையல் அறையெங்கும் விருந்தாளிகள் அமர்ந்துவிட்டால், சமையல் எப்படி நடக்கும்? அப்படித்தான், இப்போது கல்லீரலின் செயல்பாடு குறைந்து செரிமானக் கோளாறுகள் ஏற்படும். வயிறு வலிக்கும். வாந்தி வரும். சிலருக்குக் காமாலை எட்டிப் பார்க்கும். அத்தோடு சிரமங்கள் நின்றுகொள்ளும். இதற்கும் பயப்படத் தேவையில்லை.

ஆபத்து எப்போது ஆரம்பிக்கும்?

கொழுப்புக் கல்லீரலின் மூன்றாம் கட்டம்தான் ஆபத்தானது. இதில், இதுவரை கல்லீரலில் அழற்சி ஏற்பட்ட இடங்களில் தழும்புகள் தோன்றி, சுருங்கும். தேங்காய்க்குள்ளே இருக்கிற ‘பருப்பி’ல் அதன் வெளிப்பக்கம் இருக்கிற நார்கள் இடம்பிடித்துவிட்டால் எப்படி இருக்கும்? கற்பனை செய்துபாருங்கள். அப்படித்தான் கல்லீரல் இப்போது இருக்கும்.

இதற்கு ‘ஃபைப்ரோசிஸ்’ என்று பெயர். இதுவே நாளடைவில் ‘சிரோசிஸ்’ எனும் கல்லீரல் சுருக்க நோய்க்குக் கொண்டு சென்று உயிருக்கு ஆபத்தை வரவழைக்கும். ஆனால், நவீனத் தொழில்நுட்பத்தில், இந்த நோய்க்குக் ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ (Liver transplantation) செய்து உயிரைக் காப்பாற்றவும் வசதி இருக்கிறது என்பது ஆறுதல்.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

கொழுப்பின் காரணமாகக் கல்லீரலில் நேர்ந்திருக்கும் பாதிப்பைத் துல்லியமாக அறிவதற்கு என்சைம் பரிசோதனைகள் இருக்கின்றன. வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் உதவும்.

அத்துடன் ‘லிவர் பயாப்சி’யும் கைகொடுக்கிறது. பயாப்சி எடுக்கப் பயப்படுபவர்களுக்காகவே ‘ஃபைப்ரோஸ்கேன்’ எனும் நவீன சோதனை இப்போது வந்துள்ளது. இதன் மூலம் நோயைக் கணித்து முதல் இரண்டு நிலை கொழுப்புக் கல்லீரலுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள், வைட்டமின்-இ கலந்த ஆன்டிஆக்ஸிடென்டுகள், உணவுமுறை மாற்றங்கள் போன்ற வற்றைப் பின்பற்றிக் கொழுப்புக் கல்லீரலைச் சமாளித்து விடலாம்.

என்ன செய்ய வேண்டும்?

* மதுவை மறக்க வேண்டும்.
* உடல் எடையைப் பேண வேண்டும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* கொழுப்பு மிகுந்த உணவுகளான செந்நிற இறைச்சிகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* முக்கியமாக, பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய்யில் கவனம் தேவை.
* நொறுக்குத் தீனிகளை ஓரங்கட்ட வேண்டும். மைதா உணவுகளும் வேண்டாம்.
* இனிப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவில் உப்பு அளவோடு இருக்கட்டும்.
* வெள்ளை அரிசி உணவுகளைக் குறைத்துக் கொண்டு, முழுத்தானிய உணவுகளையும் சிறுதானிய உணவு களையும் அதிகப்படுத்த வேண்டும்.
* கீரைகள், பழங்கள், காய்கறிகள் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபிளவினாய்டு நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிக பலன் தரும். அதற்கு அவரைக்காய்க்கு முக்கியத்துவம் தர வேண்டும். தினமும் 3 கப் காய்கறி தேவை.
* சிவப்பு, ஆரஞ்சு, அடர் பச்சை மற்றும் மஞ்சள் நிறக் காய்களும் பழங்களும் சிறந்தவை.
* எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது.
* தாவரப் புரதங்களைக் கூட்ட வேண்டும். உதாரணம்; பருப்பு மற்றும் பயறுகள், முளைவிட்ட தானியங்கள்.
* ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்துள்ள மீன் உணவுகளைச் சேர்த்துக்கொண்டால் நல்லது.
* தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுவதும் நீச்சலும் அதே பலனைத் தரக்கூடியவையே.
* மன அழுத்தம் ஆகாது.
* 6 - 8 மணி நேரம் இரவுத் தூக்கம் தேவை..
* இத்தனையும் சரியாக இருந்தால் கொழுப்புக் கல்லீரலுக்கு நம் உடலில் இடமில்லை; சிகிச்சையும் தேவையில்லை.

‘உயிரை மீட்கும் முக்கிய உதவி’க்குக் கூடுதல் விளக்கங்கள்!

* எல்லா வயதினருக்கும் முதலுதவி செய்பவர் ஒருவராக இருந்தால் இதய அழுத்தம் 30 முறை கொடுத்துவிட்டு, இரண்டு முறை செயற்கை சுவாசம் தர

* முதலுதவி செய்வதற்கு இருவர் இருந்தால், குழந்தைகளுக்கு இதய அழுத்தம் 15 முறை கொடுத்துவிட்டு, இரண்டு முறை செயற்கை சுவாசம் தர வேண்டும். முதலுதவி செய்பவர்களில் ஒருவர் செயற்கை சுவாசத்தையும், அடுத்தவர் இதய அழுத்தம் கொடுப்பதையும்

* நிமிடத்துக்கு 100 லிருந்து 120 வரை அழுத்தம் கொடுப்பது என்னும் வேகத்தில் இதய அழுத்தம் தர வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x