Published : 30 Nov 2019 10:22 AM
Last Updated : 30 Nov 2019 10:22 AM
இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு மதிய வேளையில் மனைவியிடமிருந்து போன் வந்தது. அலுவலகத்தில் அவருடைய தங்கை மயங்கி விழுந்து விட்டார் என்று பதற்றத்துடன் தெரிவித்தார். பதற்றப்படுவதை நிறுத்தி, என்ன ஆச்சு என்பதைப் புரியும்படி சொல்லுமாறு மனைவியிடம் சொன்னேன்.
“அவளுக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது. வேலை காரண மாக, விடுப்பு எடுக்காமல் வேலைக்குச் சென்றிருக்கிறாள். இன்று மதியம் காய்ச்சல் அதிகமாகி, அலுவலகத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்” என்று பதற்றம் சற்றும் குறையாமல் மனைவி கூறினார்.
பலவீனம் ஏற்படுத்திய மயக்கம்
“சரி, பயப்படாதே. ஒன்றும் இருக்காது. அவள் எங்கே ஒழுங்கா சாப்பிடுகிறாள். காய்ச்சலில் மயங்கி விழுந்ததற்கு அதுவே காரணமாக இருக்கும். நீ வேணுமானால் போய் பார்த்துவிட்டு வா” என்று சொல்லிவிட்டு நான் மீண்டும் வேலையில் மூழ்கினேன். இரவுதான் மனைவி வீடு திரும்பினார். “டாக்டரை பார்த்தீங்களா? இப்ப அவளுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டேன். “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. பலவீனமும் காய்ச்சலும் காரணமாக இரத்த அழுத்தம் குறைந்து, மயங்கி விழுந்திருக்கிறார். டாக்டர் மாத்திரை கொடுத்து இருக்கிறார்” என்று மனைவி கூறினார்.
ஈறில் கசிந்த இரத்தம்
இரண்டு நாட்கள் கழித்து, அதிகாலையிலேயே மனைவிக்கு போன் வந்தது. தங்கையின் பல் ஈறிலிருந்து ரத்தம் கசிவதாக அழுதபடியே அவருடைய அன்னை கூறினார். நான் போனை வாங்கி, “காய்ச்சல் எப்படி இருக்கு?” என்று கேட்டேன். “காய்ச்சல் இன்னும் குறையவில்லை” என்று அவர் பதிலளித்தார். “சரி, பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று அவரிடம் கூறினேன். டெங்குகாய்ச்சல் காலம் என்பதால், நான் கூகுளில் டெங்கு அறிகுறிகளைத் தேடினேன். டெங்குவின்போது ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும் என்று கூகுள் தெரிவித்தது.
மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அங்கே அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் எல்லாம் நார்மலாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். ‘ப்ளேட்லெட் (ரத்தத் தட்டணுக்கள்) எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்று மருத்துவரிடம் கேட்டேன். “அது இரண்டு லட்சத்துக்கு மேல் உள்ளது. பயப்படத் தேவையில்லை. இது சாதாரண வைரல் காய்ச்சல்தான்” என்று உறுதியுடன் அவர் கூறினார். “அப்ப ஏன் ஈறில் ரத்தம் கசிந்தது?” என்று கேட்டேன். “பல் துலக்கும்போது வாயில் பிரெஷ் இடித்து இருக்கலாம் அல்லது வாயில் ஏதும் புண் ஏற்பட்டிருக்கலாம், அல்லது உடல் உஷ்ணமாகக்கூட இருக்கலாம்” என்று சிரித்தபடியே கூறி, மாத்திரை எழுதிக் கொடுத்தார்.
மருத்துவரின் வார்த்தைகள் நம்பிக்கை அளித்தாலும், மனத்துக்குள் சற்று குழப்பம் நீடிக்கவே செய்தது. வீட்டுக்கு வந்தவுடன், மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளுடன், பப்பாளி இலைச் சாறும், நில வேம்புக் கஷாயமும் அவளுக்குக் கொடுத்தோம். இரண்டாம் நாள் காலையில், ஈறில் ரத்த கசிவு அதிகமாக இருந்தது. மீண்டும் ரத்தப் பரிசோதனை எடுத்து வரும்படி மருத்துவர் சொன்னார். இந்த முறை ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 1,80,000 ஆகக் குறைந்து இருந்தது. “பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், உங்கள் திருப்திக்காக ஸ்டேன்லியில் அனுமதித்துவிடுங்கள்” என்று மருத்துவர் கூறினார்.
ஸ்டேன்லியில் சிகிச்சை
‘அப்பர் வார்டு’, ‘லோயர் வார்டு’ என ’ஸ்டேன்லி’யில் காய்ச்சலுக்கு என்று இரண்டு வார்டுகள் உள்ளன. ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 50,000-க்கு மேல் உள்ளவர்கள் ‘அப்பர் வார்டி’லும் 50,000-க்கு கீழ் உள்ளவர்கள் ‘லோயர் வார்டி’லும் சேர்க்கப்படுகின்றனர். அப்பர் வார்டில் இவர் சேர்க்கப்பட்டார். அங்கே மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முறை ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 1,50,000 என இருந்தது. அன்று மட்டும் அவருக்கு மூன்று முறை ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மூன்றாம் பரிசோதனையில் தட்டணுக்களின் எண்ணிக்கை 90,000 என்ற அளவிலிருந்தது. இட நெருக்கடி காரணமாக, மறுநாள் காலையில் அவர் லோயர் வார்டுக்கு மாற்றப்பட்டார். அன்றும் அவருக்கு மூன்று முறை ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. கடைசி பரிசோதனையில் தட்டணுக்களின் எண்ணிக்கை 1,10,000 எனச் சற்றே உயர்ந்திருந்தது.
முகப்பேர் மருத்துவரிடம் சிகிச்சை
லோயர் வார்டின் சூழல் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும்படி இருந்ததால், அன்று இரவே ஸ்டேன்லியிலிருந்து அவரை நாங்கள் அழைத்து வந்தோம். மறுநாள் காலையில், முகப்பேரிலிருக்கும், எனக்கு தெரிந்த மருத்துவரிடம் (75 வயது) அழைத்துச் சென்றோம். அங்கே மீண்டும் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தட்டணுக்களின் எண்ணிக்கை 2,26,000 என இருந்தது. “ஒன்றும் பயப்படத் தேவையில்லை. இது ஒருவித வைரல் காய்ச்சல்தான். ஆறு மாதத்துக்குக் தலையில் முடி கொட்டும், மாதவிடாய் சீரற்று இருக்கும். அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கத் தேவையில்லை” என்று சொன்னபடி மருந்து சீட்டை எங்களிடம் டாக்டர் நீட்டினார். எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி வீடு திரும்பினோம்.
மறுநாள் காலையில், மீண்டும் அவருக்கு ஈறிலிருந்து ரத்தம் கசிந்தது. அலறி அடித்தபடி மருத்துவரிடம் மீண்டும் விரைந்தோம், பரிசோதனைகளுக்குப் பின்னர், தனக்குத் தெரிந்த பல் மருத்துவரிடம் எங்களை அந்த மருத்துவர் அனுப்பிவைத்தார்.
பல் மருத்துவரிடம் சிகிச்சை
பல் மருத்துவர், அவரை நன்கு பரிசோதித்தார். “சொத்தைப் பல் ஒன்று உள்ளது. பல்லின் வேர்வரை பரவி, ஈறினுள் அது புண்ணை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் ரத்த கசிவு ஏற்படுகிறது” என்று சொன்னபடி, அதற்கு அவர் சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். வெளியே புறப்பட்டபோது, வேரின் உள்வரை பரவியிருக்கும் இந்தப் புண்ணால்கூட அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் சொன்னார். நிலவேம்பு கசாயத்தையும் பப்பாளி இலைச் சாறையும் இத்தனை நாட்களாகத் தனக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டிய தனது அன்னையை என் மனைவியின் தங்கை கோபத்துடன் முறைத்துப் பார்த்தார்.
முன்பு எல்லாம் காய்ச்சல் என்றால், ரசம் சாதம் சாப்பிட்டு ஓய்வு எடுத்தால்போதும் என்று அதனை மனம் எளிதாக எடுத்துக்கொள்ளும். இன்று அப்படியில்லையே. காய்ச்சல் என்றவுடன், அது டெங்குகாய்ச்சலாக இருக்குமோ, சிக்குன்குனியாவாக இருக்குமோ பன்றிக்காய்ச்சலாக இருக்குமோ என்று மனம் பதைபதைத்து அபாய மணியை அடித்துவிடுகிறதே!
- முகமது ஹுசைன், தொடர்புக்கு:
mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT