Published : 23 Nov 2019 10:26 AM
Last Updated : 23 Nov 2019 10:26 AM

மருத்துவம் தெளிவோம் 10: குறை ரத்த அழுத்தம் - தீர்வு என்ன?

டாக்டர் கு. கணேசன்

உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து அநேகருக்கும் தெரிந்திருக் கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம்கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. உலகளவில் சொல்லப்படும் புள்ளி விவரப்படி இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது.

உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி’ (Silent killer) என்கிறோம். அதுபோல் குறை ரத்த அழுத்தத்தை ஓர் எரிமலை என்கிறோம். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாததுபோல, குறை ரத்த அழுத்தமும் எப்போது ஆபத்தைத் தரும் என்று கூற முடியாது.

‘குறை ரத்த அழுத்தம்’ என்பது எது?

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது மேல் அழுத்தம்; 80 என்பது கீழ் அழுத்தம். ரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் குறைந்தால் அது ‘குறை ரத்த அழுத்தம்’. இதில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத் ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.

நம்மிடையே பலருக்குக் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் இருக்காது. அவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று மேல் அழுத்தத்தில் 20 மி.மீ. குறைகிறதென்றால் அல்லது கீழ் அழுத்தத்தில் 10 மி.மீ. குறைகிறதென்றால் மயக்கம் உள்ளிட்ட சில தொல்லைகள் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ரத்த அழுத்தம் குறைவது ஏன்?

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்றுவிடுகிறது; இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது.

யாருக்கு இது வருகிறது?

விபத்துக்குள்ளாகுபவர்கள், தடகள வீரர்கள், கடுமையான உடற் பயிற்சி/ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள்ளிட்ட சில ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள், ரத்தம் இழப்பவர்கள், ரத்தசோகை, கடுமையான நோய்த்தொற்று, இதயநோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய் - சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நீரிழப்பு ஏற்பட்டவர்கள், ஒவ்வாமை உள்ள வர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட சாத்தியம் அதிகம். கடுமையான தீப்புண், அதிர்ச்சி, விஷக்கடி, மருந்துகளின் பக்க விளைவு போன்றவற்றாலும் இது ஏற்படலாம்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

தலைக்கனம், தலைசுற்றல், மயக்கம், வாந்தி, அதிக தாகம், சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால், அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

‘இருக்கை நிலை குறை ரத்த அழுத்தம்’ என்பது என்ன?

சிலருக்குப் படுக்கையைவிட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான்.

இதற்கு ‘இருக்கை நிலை குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது அதிகம். நடு வயதிலும் ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வருவதும் உண்டு. சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.

உணவு சாப்பிட்ட பிறகு சிலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. அது ஏன்?

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். தானியங்கி நரம்புக் குறைபாடு (Autonomic neuropathy) உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம். உணவைச் சாப்பிட்டதும் அதைச் செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் சென்றுவிடும்.

இதனால் இதயத்துக்கும் மூளைக்கும் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இந்த வகை குறை ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க சிறிது சிறிதாகச் சிறிய இடைவெளிகளில் உணவு சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்து உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

இதற்கு என்னென்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

குறை ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு மல்லாந்து படுத்த நிலையிலும் பிறகு எழுந்து நின்ற நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட வேண்டும். வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் நல்லது. சிலருக்கு ‘சாய் மேசை பரிசோதனையும் (Tilt-table Test) தேவைப்படும்.

என்ன சிகிச்சைகள் உள்ளன?

அடிப்படைக் காரணத்தைச் சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக்கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்துகொள்வது நல்லது. சிறு தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். உடல் எடையைப் பேண வேண்டும். இந்த நோயைக் குணப்படுத்த மாத்திரைகளும் உள்ளன. குடும்ப மருத்துவரின் பரிந்துரைப்படி அவற்றில் ஒன்றைச் சாப்பிடலாம்.

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x