Published : 17 Aug 2019 11:02 AM
Last Updated : 17 Aug 2019 11:02 AM

பசியைப் போக்கும் பழங்கள், காய்கறிகள்

கனி

பழங்கள், காய்கறிகள் என இயற்கையான உணவைச் சாப்பிட வேண்டும் என்பதில் இப்போது பலரும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், பழங்கள், காய்கறிகளைச் சரியாகத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டியது அவசியம். அப்படியில்லாவிட்டால், அவற்றைச் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் பசிக்கத் தொடங்கிவிடும். வயிறு நிறையச் சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும் சில பழங்கள், காய்கறிகளின் பட்டியல் இது.

வாழைப்பழம்

உடலின் ஆற்றலை உடனடியாக மீட்டெடுப்பதில் வாழைப்பழங்கள் சிறந்தவை. இவற்றில் பொட்டாசியம், வைட்டமின்-பி6 என்ற இரண்டு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஓட்டப்பந்தய வீரர்களின் விளையாட்டு பானத்தில் நிரம்பியிருக்கும் ஊட்டச்சத்துகள் வாழைப்பழத்தில் இருக்கின்றன. இந்தப் பழத்தில் மற்ற பழங்களைவிட கலோரி அதிகமாக இருந்தாலும், அதில் இருக்கும் தனித்துவமான அம்சங்கள் உடனடியாக வயிற்றை நிரப்பும் பழமாக ஆக்குகிறது. வாழைப்பழத்தில் இயல்பாகவே நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன், பச்சை வாழைப்பழத்தில் மாவுச்சத்துக்கு எதிரான தன்மை இருக்கிறது. அதனால், அது சற்று தாமதமான செரிமானத்தை அடைகிறது. இந்தத் தன்மை, கொழுப்பாக மாறாமல் உங்கள் வயிற்றை நிரப்புகிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

தர்பூசணி

தர்பூசணிப் பழத்தைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. தர்பூசணிப் பழத்தைச் சாறாகக் குடித்தாலும் அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை உடனடியாகக் கொடுக்கும். ஏனென்றால், தண்ணீர்க் குடித்தவுடன் எப்படி உங்களுக்கு உடனடியாகப் பசி எடுக்காதோ, அதேபோலத்தான் தர்பூசணிச் சாறுக் குடித்தாலும் உங்களுக்கு உடனடியாகப் பசிக்காது. தர்பூசணியில் 94 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. அதிலிருக்கும் கூடுதலான நீர்த்தன்மை, சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.

அத்துடன், அதில் இருக்கும் வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் ஆகிய சத்துகள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவிசெய்கின்றன. தர்பூசணியில் லைக்கோபீன் (Lycopene) என்ற ஆக்சிஜனேற்றத்தடுப்பான் இதய நோய்கள், புற்றுநோய்க் கட்டிகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தாலும், இதை எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழங்களை அற்புதமான இனிப்பு என்று சொல்லலாம். பேரீச்சம்பழ சாற்றில் (syrup) நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மைகள் இருக்கின்றன. பேரீச்சம்பழத்தில் கலோரி, சர்க்கரை மட்டுமல்லாமல்; அதிகமான நார்ச்சத்தும் இருக்கிறது. மற்ற இனிப்பூட்டப்பட்ட உணவுகளைவிட, பேரீச்சம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து தன்மை, அது செரிமானம் ஆவதைத் தாமதமாக்குகிறது. இதனால், அதைச் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது.

கேரட்

கேரட்டும் வயிற்றை நிரப்பக் கூடிய காய்கறிகளில் முக்கியமானது. அளவான இனிப்புச் சுவை கொண்ட காய்கறி. கேரட்டிலும் இருக்கும் நார்ச்சத்துதான் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த திருப்தியைக் கொடுக்கிறது. அத்துடன், கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து கண்பார்வைக்கு நல்லது என்பதால், இதைத் தொடர்ந்து பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தை களுக்கும் கொடுக்கலாம்.

பருப்புகள்

அரைக் கப் பருப்பில், எட்டு கிராம் புரதம் இருக்கிறது. பருப்பில் நிறைந்திருக்கும் புரதமும் நார்ச்சத்தும் இயல்பாகவே அதை வயிற்றை நிரப்பும் உணவாக வைத்திருக்கிறது. அத்துடன், கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பருப்புகள் உதவிசெய்கின்றன. சாப்பிட்டவுடன் பசியை உடனடியாகப் போக்கும் உணவில் பருப்புகள் முக்கியமான இடத்தில் இருக்கின்றன.

ஆப்பிள்

‘நாள்தோறும் ஆப்பிள் ஒன்று சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை’ என்ற பழமொழி உண்மைதான் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆப்பிளில் நார்ச்சத்தும் தண்ணீரும் நிறைந்திருப்பதால், அதைச் சாப்பிட்டவுடன் உடனடியாக வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. அத்துடன், ஆப்பிளில் இருக்கும் ‘பெக்டின்’ (pectin) என்ற கரையும் நார்ச்சத்து, பசியை போக்குவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த பெக்டின் என்ற கரையும் நார்ச்சத்து ஆப்பிளைத் தனித்துவமான பழமாக மாற்றுகிறது. ஆப்பிளை மெதுவாகக் கடித்துச் சாப்பிடுவது, வயிறு நிரம்பிய திருப்தியை அளிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உடல் எடையைக் கூட்டுகிறது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. ஆனால், உருளைக்கிழங்கைப் பொரித்துச் சாப்பிடுவதாலும், அதில் வெண்ணெய், கிரீம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவதாலும்தான் எடை கூடுகிறது. உருளைக்கிழங்கைச் சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன், அதில் அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும் இருக்கிறது. பொரிக்காமல் உருளைக்கிழங்குகளைச் சாப்பிடு வதால், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைப்பதுடன் வயிற்றையும் நிரப்புகிறது.

பெர்ரி பழங்கள்

மாலையில் பசிக்கும்போது சாப்பிடுவதற்கு ஏற்றவை. பெர்ரி பழங்கள் சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, மாலையில் பசிக்கும்போது ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை ஒரு கிண்ணம் நிறையச் சாப்பிடலாம். இந்தப் பழங்களில் கலோரிகள் அதிகம் இல்லையென்பதால் உடல் எடை கூடிவிடுமோ என்ற அச்சமில்லாமல் ஒரு நாளில் மூன்று, நான்கு முறைகூட இவற்றைச் சாப்பிடலாம். பெர்ரி பழங்களுக்கு உயிரணுக்கள் அளவிலேயே வீக்கம் உருவாகுவதைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.

அத்துடன், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகளையும் பெர்ரி பழங்கள் தடுக்கின்றன. இந்தப் பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள், ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், நார்ச்சத்துகள் ஆகியவை நிரம்பியிருப்பதால், இவற்றைச் சாப்பிட்டவுடன் ஆற்றல் கிடைப்பதுடன் வயிறு நிறைந்த திருப்தி ஏற்படுகிறது.

காலிஃபிளவர்

பன்முகத் தன்மை கொண்ட காய்கறிகளில் ஒன்று காலிஃபிளவர். வறுத்து, வேகவைத்து என இதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். நார்ச்சத்துடன், வைட்டமின்கள் சி, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் இதில் இருக்கின்றன. இதய நோய், புற்று நோய்ப் போன்றவை உருவாவதை காலிஃபிளவர் தடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon