Last Updated : 13 Jun, 2015 02:25 PM

 

Published : 13 Jun 2015 02:25 PM
Last Updated : 13 Jun 2015 02:25 PM

இரும்புச் சத்தையும் கொழுப்பையும் சீராக்கும் ரத்தத் தானம்

உலக ரத்த தான நாள்: ஜூன் 14

மனித உயிர்களைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ரத்தத் தானம், தானங்களில் சிறந்தது என்பதில் கேள்விக்கு இடமிருக்காது. ஒருவர் செய்யும் ரத்தத் தானம், ரத்தம் பெறுபவருக்குக் கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு.

ஒவ்வொரு முறையும் தானமாகக் கொடுக்கப்படும் ரத்தம் மூலம் மூன்று பேரைக் காப்பாற்ற முடியும். மருத்துவ உலகில் அத்தியாவசியமானதாகக் கருதப்படும் ரத்தம், உலக அளவில் எப்படிக் கிடைக்கிறது, அதை யார் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.

ரத்தத் தானம்

# ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 10.8 கோடி யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்படுகிறது. இதில் 50 சதவீதம் வளர்ந்த நாடுகளில் பெறப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ரத்தத் தானம் செய்கிறார்கள்.

ரத்தத்தைத் தானமாகக் கொடுத்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. இது முற்றிலும் தவறு.

மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்தத் தானத்தின் போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.

ரத்தத் தானம் செய்தவர்கள் இழந்த ரத்தம் இரண்டு நாட்களில் சுரந்துவிடும். இரண்டு மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவை எட்டிவிடும். எனவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம்.

# ஏழை நாடுகளில் பெறப்படும் ரத்தத்தில் 65 சதவீதம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே வளர்ந்த நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

# வளர்ந்த நாடுகளில் ஆயிரம் பேருக்கு 37 பேர் ரத்தத் தானம் செய்கிறார்கள். ஆனால், வளரும் நாடுகளில் 12 பேரும், ஏழை நாடுகளில் 4 பேர் மட்டுமே ரத்தத் தானம் செய்கிறார்கள்.

# 2004-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் தன்னார்வமாக ரத்தத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 86 லட்சமாக அதிகரித்துள்ளது.

யார் தானம் செய்யலாம்?

# நல்ல உடல்நலத்துடன், 45 கிலோவுக்கு மேல் எடை உள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம்.

# ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றின் அளவை பார்த்த பிறகே, ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

# ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.

# புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் ரத்தத் தானத்தைக் கருதலாம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தைச் சரியான அளவில் வைத்துக்கொள்ள ரத்ததானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு, தானம் செய்யும்போது சீரடைகிறது. எனவே, இப்பிரச்சினை உள்ளவர்கள் ரத்தத் தானம் செய்யலாம்.

யார் தரக்கூடாது?

#மாதவிடாய் தொடங்கிய ஒன்று முதல் ஐந்து நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரேபிஸ் நோய் சிகிச்சைக்குப் பின் ஓராண்டுவரை ரத்தத் தானம் செய்யக்கூடாது.

# டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்களுக்குச் சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள்வரையும், மது அருந்திய பின் 24 மணி நேரம்வரையும் ரத்தத் தானம் செய்யக் கூடாது.

# ஹெச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள், மஞ்சள் காமாலை உள்படக் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், இதர தொற்று உள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.

# இதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இன்சுலின் பயன் படுத்துபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாமை பிரச்சினை உள்ளவர்கள், எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

நன்மைகள் பல

# ரத்தம் வழங்குவதால், ரத்தம் பெறுபவருக்கு மட்டுமல்ல, ரத்தத் தானம் செய்பவருக்கும் பலன் உண்டு. இரும்புச் சத்தையும் கொழுப்பையும் ரத்த தானம் சீராக்கும்.

# தானம் செய்யப்படும் ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாகப் பிரித்துவிடுவார்கள். தேவைப்படுபவர்களுக்கு ரத்தச் சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்லெட்கள் எனப் பிரித்துப் பயன்படுத்த முடியும். இதனால் ஒரே நேரத்தில் மூன்று பேர் பயனடைகிறார்கள்.

# தானம் செய்யப்படும் ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாகப் பிரித்துவிடுவார்கள். தேவைப்படுபவர்களுக்கு ரத்தச் சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்லெட்கள் எனப் பிரித்துப் பயன்படுத்த முடியும். இதனால் ஒரே நேரத்தில் மூன்று பேர் பயனடைகிறார்கள்.

# தினந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தானம் செய்தால் மட்டுமே, தேவைப்படும் ரத்தத்தைப் பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.

ரத்தம் என்பது மனித உடலில் ஓடும் திரவம் மட்டுமல்ல. உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துகளையும் மனித உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் நீரோடை போன்றது.

உடலில் கழிவுப் பொருட்கள் சேர்ந்துகொண்டே போனால், உயிரைப் பறிக்கும் பிரச்சினைகள் தோன்றலாம். கழிவுகளை வெளியேற்றவும் உதவும் ரத்தம், உயிர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.

ரத்தத்தில் ஏ, பி, ஒ, ஏபி என நான்கு வகைகள் இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான ரத்த வகை இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x