Published : 13 Jun 2015 02:34 PM
Last Updated : 13 Jun 2015 02:34 PM
‘அய்யய்யோ மேகியில் காரீயம் இருக்கிறது, அது நரம்பு மண்டலத்தையும் அறிவுத்திறனையும் பாதிக்கும்’ என்று இப்போது கூச்சல் போடுபவர்கள், ஒரு நிமிடம் நிதானிக்க வேண்டும். நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரீயம் இருக்கிறது என்கிறார் டெல்லியை மையமாகக் கொண்ட பிரபலப் பன்னாட்டு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த உணவுத் தொழில்நுட்ப ஆய்வாளர்.
நமது ரத்தத்திலும் காரீயம் இருக்கலாம். நிலத்தடி நீரிலேயே காரீயம் அதிக அளவில் இருப்பதுதான், இதற்குக் காரணம். நிலத்தடி நீரில் காரீயம் இருப்பதை நாம் ஒவ்வொரு வரும் பரிசோதனை செய்து கண்டறிந்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேநேரம் அனைத்துத் தரக் கட்டுப் பாடுகளையும் பூர்த்தி செய்து விட்டதாகக் கூறும் பதப் படுத்தப்பட்ட ஓர் உணவுப் பொருளில், காரீயம் இருப்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இயற்கையா, செயற்கையா?
'எம்.எஸ்.ஜி. என்ற செயற்கை சுவையூட்டி மேகியின் டேஸ்ட்மேக்கரில் சேர்க்கப்படவில்லை. குளூட்டமேட் என்றொரு இயற்கை சுவையூட்டி இருக்கிறது. இரண்டுமே ஒன்றுதான். இயற்கையான குளூட்டமேட்டைதான் நாங்கள் சேர்த்திருக்கிறோம்' என்று நெஸ்லே நிறுவனம் தெரிவிக்கிறது.
"இந்தக் கூற்றுகள் அனைத்துமே பொய். இயற்கையில் குளூட்டமேட் இருக்கலாம். ஆனால், மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற வேதிப்பொருள் செயற்கையாகவே தயாரிக்கப்படுகிறது" என்கிறார் சென்னையை மையமாகக் கொண்ட பாதுகாப்புக்கான உணவுக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்து. அதைவிட அவர் கவனப்படுத்தும் இன்னொரு விஷயம் அதிர்ச்சியைத் தருகிறது.
ஆபத்தான நச்சு
எம்.எஸ்.ஜி. என்பது ஒரு எக்சிட்டோடாக்சின் (excitotoxin) என்ற நச்சு வகையைச் சேர்ந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த எக்சிட்டோடாக்சின் நமது மூளையில் உள்ள நியூரான்களை அதீதமாகத் தூண்டிவிடக்கூடியது.
நரம்புமண்டலக் கோளாறு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் இது ஏற்படுத்தலாம். குறிப்பாகக் குழந்தைகளைப் பாதிக்கும். குழந்தைகளின் அதீதச் செயல்பாட்டுக்குக் (ஹைபர் ஆக்டிவிட்டி) காரணமாகிவிடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட மூலப்பொருட்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India) வலியுறுத்துகிறது. அதன்படி ஒவ்வொரு பொருளின் பேக்கிலும் மூலப்பொருள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் பல்வேறு தகிடுதத்தங்கள், முகமூடி போட்டு அரங்கேற்றப்படுகின்றன.
வேதிப்பொருளின் பெயரை மாற்றி போடுதல், நுகர்வோர் அறிந்துகொள்ள முடியாத வகையில் குறியீட்டு பெயர்களைப் பயன்படுத்துதல் போன்றவை அப்படிப்பட்டவைதான். எடுத்துக்காட்டுக்கு, "எம்.எஸ்.ஜி. hydrolyzed vegetable protein,' 'vegetable protein,' 'natural flavorings,' and 'spices' என்ற பெயர்களில் சேர்க்கப்படுகிறது" என்கிறார் எம்.எஸ்.ஜி. பற்றி புகழ்பெற்ற ஆராய்ச்சியை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவர் ரஸ்ஸல் பிளேலாக்.
இப்போது பிடிபட்டுத் தடை செய்யப்பட்டிருப்பது மேகி மட்டும்தான். பதப்படுத்தப்பட்ட எத்தனையோ உணவுப் பொருட்கள் அரசு விதித்துள்ள குறைந்தபட்சக் கட்டுப்பாட்டு அளவை மீறாமல் இருக்கின்றன என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
யார் பொறுப்பு?
வீட்டில் சமைக்கச் சுணங்கிக்கொண்டு, உடனடி உணவுப் பொருட்களை வாங்குகிறோம். அடிப்படையில் உடல் செயல்படுவதற்குத் தேவையான சக்தியை-ஊட்டத்தை வழங்கும் உணவு என்ற உயிர் ஆதாரத்தில் இருந்து, சத்தற்ற - நோய்களை உருவாக்கக்கூடிய செயற்கை உணவு வகைகளுக்கு மாறிவருகிறோம்.
இந்த நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு உண்மையிலேயே உணவுதானா, அது பாதுகாப்பானதா என்று உத்தரவாதப்படுத்தும் வேலையை அரசு பார்த்துக்கொள்ளட்டும் என்று சும்மா இருந்துவிட முடியாது.
அவசர உலகில் வேறு வழியில்லாமல் பதப்படுத்தப்பட்ட - தொழில்மயப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அதேநேரம் அவற்றைத் தயாரிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு நெறிமுறைகள், தரக்கட்டுப்பாடுகளை வலியுறுத்த வேண்டியது நுகர்வோரான நாம்தான்.
மேகி மட்டுமல்ல
மேகி, வேறு நூடுல்ஸ் பிராண்டுகள் மட்டுமல்ல நாம் அன்றாடம் விழுங்கிக் கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் உடல்நலனைப் பாதிக்கக்கூடிய ஏதோ ஒரு பொருள் இருக்கிறது.
அது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாக, தேனாக, பிராய்லர் கோழியாக, மென்பானமாக, புட்டி குடிநீராக என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நம் உடலுக்குச் சக்தியைத் தரும் அமுதமாக இருப்பதற்குப் பதிலாக, உடலில் மெல்ல மெல்ல நஞ்சை கலந்துகொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது? தொடர்ந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT