Last Updated : 16 May, 2015 08:39 PM

 

Published : 16 May 2015 08:39 PM
Last Updated : 16 May 2015 08:39 PM

தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது எப்படி? : இதோ சில டிப்ஸ்

புகைப்பழக்கம், மது அருந்துதல் உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களிலிருந்து விடுபடுவது என்பது பெரிய சவால். ஆனால் ஹிப்னோசிகிச்சை நிபுணரும், நரம்பு-மொழியியல் நிபுணருமான ஜாஸ்மின் பைரன் இதற்கு சில தந்திரோபாயங்களை அளித்துள்ளார்.

இது குறித்து லண்டன் இணையதளம் ஒன்றில் அவர் அளித்த சில டிப்ஸ்கள் வருமாறு:

ஒரு பழக்கத்தை விட்டொழித்து புதிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கான தேதியை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். சிலர் திங்கட் கிழமை முதல்.. என்றும் சிலர் பிறந்தா நாள், புத்தாண்டு தினம் என்றெல்லாம் இலக்கு நிர்ணயித்துக் கொள்வார்கள். தினத்தை தேர்வு செய்வது முக்கியமல்ல, ஆனால் அன்றைய தினம் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பற்றி எதார்த்தமாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில் எந்த தினம் கெட்டப் பழக்கத்தை ஒழிக்க சிறந்த தினம், என்பதை முன் கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.

தீய பழக்கத்தை விட்டொழிப்பது குறித்து நாம் யாரிடம் தெரிவிக்கப் போகிறோம் என்பது மிக முக்கியம். சிலருக்கு சிலரிடம் இதனை தெரிவிப்பது தீய பழக்கங்களிலிருந்து விடுபட தூண்டுகோலாக அமையும், ஆனால் பலருக்கு இது இடைஞ்சலையும் ஏற்படுத்தும், ஏனெனில் நாம் கூறிவிட்டோமே, இதனை நாம் விட்டொழிக்காவிட்டால் கேலிப் பேச்சுக்கு ஆளாக நேரிடுமே என்ற மன அழுத்தங்கள் ஏற்படும், எனவே யாரிடம் கூற வேண்டும் என்பதை மிக நிதானமாக அறிவுபூர்வமாக யோசனை செய்து அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

ஏன் நம்மிடம் அந்த மாற்றம் தேவை என்பதற்கான நேர்மறையான காரணங்களை பட்டியலிடுவது பயனளிக்கும். எப்போது தீய பழக்கத்தை விட்டொழிக்கும் உங்கள் எண்ணத்தில் பின்னடைவு ஏற்பட்டு சவாலாக இருக்கிறதோ அப்போது இந்த பட்டியலை எடுத்துப் படித்துப் பார்த்து உறுதியை தக்க வைக்க முடியும்.

எப்போதும் உங்களிடம் நீங்கள் பொறுமை கடைபிடிப்பது இந்த விவகாரத்தில் மிக முக்கியமானது. தினசரி அளவில் நேர்மறையான சில நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மிகப்பெரிய நேர்மறையான மாற்றத்தை உங்களை அறியாமலேயே ஏற்படுத்திவிடும் சக்தி கொண்டது. ஒவ்வொரு முறை உங்கள் சவாலில் நீங்கள் வெற்றி பெறும் போதெல்லாம் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான முடிவு ஏற்படுவதற்கு போதுமான கால அவகாசம் அளியுங்கள்.

ஒரு குறிப்பிட்ட பழக்கத்துக்கு அடிமையாவதற்கு பின்னால், காரணமாக அமையும் உணர்ச்சி நிலைகள் என்னவென்பதை புரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக மிகவும் மந்தமாக உணர்பவர்கள் குடித்தால் உற்சாகம் பெறலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். இந்த மாதிரி உணர்வதற்கான காரணங்கள் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும், அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் என்னவென்பதை சிந்தித்து அதனை தவிர்க்க வேண்டும். எந்தந்த கால நேரத்தில் நம் வாழ்க்கையில் அவ்வாறு உணர்ந்து ஒரு பழக்கத்திடம் சரண் அடைகிறோம் என்பதை மெல்ல அசை போடுவதும் பயன் தரும்.

சரி. பழகக்த்தை விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அதனால் ஏற்படும் நேர்மறை, எதிர்மறை விளைவுகளையும், அனுபவங்களையும் தடம் காண வேண்டும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பழக்கத்திலிருந்து வெளியே வர உங்களுக்கு ஏற்பட்ட தடைகள், சவால்கள் ஆகியவை உங்கள் நினைவில் வரும், அதோடு நீங்கள் அதனை சமாளித்து உறுதியைக் கடைபிடித்த விதமும் உங்களுக்கு எதிர்காலத்தில் பழக்க வழக்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமல்லாது, வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் அளிக்கும்.

உங்கள் சாதனைகளுக்கு நீங்களே பரிசு அளித்துக் கொள்ளுங்கள். சவால் அளிக்கும் தருணங்களில் இந்த பரிசுகள் உங்கள் உறுதியை மேலும் நகர்த்திச் செல்ல உதவும். உதாரணமாக புகைப்பழக்கத்தையோ, மதுப்பழக்கத்தையோ நீங்கள் வெற்றிகரமாக தடுத்தாட்கொண்டு விட்டீர்கள் என்றால் அதனை உங்களுக்கு விருப்பமான நபர்களுடன், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று கொண்டாடலாம். இந்த நினைவு மீண்டும் உங்களை அந்தப் பழக்கங்களுக்குள் கொண்டு செல்லாமல் காக்கும்.

எப்படி பழக்க வழக்கங்களை நாம் சடங்கார்த்தமாக ஏற்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் அதனை விடாது செய்து பழகி விடுகிறோமோ, அதேபோல் பழக்கத்திலிருந்து விடுபட்டு புதிய நடத்தைக்கு வரும் நீங்கள் அதற்கான சடங்கார்த்த நடைமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, காலை உணவு அருந்தியவுடன் புகைபிடிக்கும் விருப்பம் ஏற்பட்டால், வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடிக்கு ஏதாவது கவனத்தை திசைதிருப்பி அதனை தினமும் சடங்கார்த்தமாக செய்து வந்தால், சாப்பிட்டவுடன் புகைபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் மறையும்.

அதேபோல்தான் இரவு 7 மணிக்கு குடிக்க வேண்டும் என்ற கைநடுக்கம் ஏற்படும் போதும் அந்த நேரத்தில் வேறு ஏதாவது, அதையும் விட சுவாரசியமான பயனுள்ள காரியங்களில் ஈடுபடலாம். இதனை அந்த நேரத்தில் சடங்கார்த்தமாக செய்ய முடிந்து விட்டால், எந்த தீயப் பழக்கமும் நம்முடன் வாழ்நாள் முழுதும் ஒட்டி உறவாட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x