Last Updated : 20 May, 2014 02:39 PM

 

Published : 20 May 2014 02:39 PM
Last Updated : 20 May 2014 02:39 PM

குழந்தைகளைச் சமாளிக்க திணறுகிறீர்களா?

‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது.

கற்றலும் குணநலமும்

குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்கள் மட்டுமல்லாது சமூகத்திடமிருந்து பெறப்படும் விஷயங்களும் ஒரு குழந்தையின் குணநலனைத் தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நேரத்தில் ‘இவனை டிவி பார்க்கவிட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது’ எனக் குழந்தைகளின் போக்குக்கு விட்டுவிடுகிறோம். நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்பதே இதன் பின்னணிக் காரணம்.

கோழிப்பண்ணைகளில் சென்று பார்த்தால் அங்கு உள்ள கோழிகள் 24 மணி நேரமும் குனிந்த தலை நிமிராமல் தீனி தின்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். ஒரே மாதத்தில் கறிக்குத் தயாராகும் அளவுக்கு எடையும் கூடிவிடும். அது போலத்தான் இன்று கல்வியுடன் குணநலனையும் வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்கள் பத்தாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறிவருகின்றன.

இதனால் குழந்தை வளர்ப்பைப் பற்றி கருத்தரங்கம் நடத்திச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

பெற்றோரின் பங்கு

ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் அடிப்படை பாடம். வேலைப்பளுவைக் காரணம் காட்டுவதைவிட, யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால், இதில் உண்மை விளங்கும். குழந்தைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தைவிட அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான். ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான்/ள், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான், ஆனால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டுப் பாருங்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தையாக, ஆக்கபூர்வமான குறிக்கோளைக் கொண்டவராக இருப்பார்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைதான். பொறுமையைக் கையாண்டு ரசித்துச் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே பெரிய விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒரு காரின் ஸ்டியரிங்கை சிறிது திருப்பினாலே அந்தக் கார் முழுவதுமாகத் திரும்புவது போலத்தான், ‘Behaviour Therapy’ என்றழைக்கப்படும் நடத்தை சீர்திருத்தப் பயிற்சிகள். இவை குழந்தைகளிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

குழந்தை வளர்ப்பின் சூட்சுமம்

செய்த தவறைக் குழந்தையையே திருத்தும்படி செய்தால், அதே தவறைத் திரும்பச் செய்யும் வாய்ப்பு நாளடைவில் குறையும். உதாரணமாக வேண்டுமென்றே ஒரு பொருளைக் கீழே கொட்டினால், அதை அந்தக் குழந்தையையே திரும்ப அள்ளச் சொல்லலாம்.

சர்க்கஸில் டால்பின் பந்து விளையாடுவதை டிவியில் பார்த்திருப்போம். ஆனால், நன்றாகப் பந்தைக் கையாண்டுவிட்டுத் தண்ணீருக்குள் மூழ்குவதற்கு முன் ஒவ்வொரு முறைக்கும் இடைப்பட்ட நொடிப் பொழுதில் பயிற்சியாளர் வீசும் மீன் துண்டை, அது சுவைப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதில்தான் இந்த நடத்தைப் பயிற்சியின் சூட்சுமமே இருக்கிறது. ஒரு விலங்கையே பயிற்சியின் மூலம் மாற்ற முடியும் என்றால், நிச்சயமாகக் குழந்தை வளர்ப்பிலும் இது நல்ல பலனைத் தரும். என்ன, கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.

பிஹேவியரிசம் என்ற கொள்கையை முன் வைத்த ஜான் வாட்சன் என்ற அறிஞர் 1926-ல் ஒரு சவால் விடுத்தார். "வேறுபட்ட திறமைகளைக் கொண்ட ஒரு டஜன் குழந்தைகளை என்னிடம் கொடுங்கள். ஒவ்வொருவரையும் நான் விரும்பியபடி மாற்றி காட்டுகிறேன்; டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக, தொழிலதிபராக; ஏன் திருடனாக, பிச்சைக்காரனாகக்கூட" என்று கூறினார். அதனால் நினைத்தபடி குழந்தைகளை நல்ல முறையில் மாற்ற, இதை முயற்சித்துத்தான் பாருங்களேன்!

-கட்டுரையாளர்,

மனநல மருத்துவர்.

(தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com) 

குழந்தை வளர்ப்பு: எளிய வழிகள்

அவசிய வழிகாட்டி

ஆர்வமுள்ள நல்ல விஷயங்களை ஊக்குவிக்க வேண்டும், தகுதி, வயதுக்கு மீறிய விஷயங்களைத் தடை செய்ய வேண்டும்.

குழந்தைகளின் தேவையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது விருப்பங்களைக் குழந்தைகளிடம் ஓர் அளவுக்கு மேல் திணிக்கக்கூடாது.

பெற்றோரின் மனநிலை, கோபம், மனஸ்தாபங்களைக் குழந்தைகளிடம் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற விஷயங்களில் கண்டிப்பைத் தளர்த்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அடிக்கிறது அல்லது கடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர் அதைக் கண்டிப்பார்கள். சில நேரம் "பேரன், பேத்தி அடிப்பது சுகமாக இருக்கிறது" எனத் தாத்தா, பாட்டி அதை ஊக்குவிப்பதுண்டு. இதனால் குழந்தைகள் எது சரி என்று புரியாமல் குழப்பமடைவார்கள்.

குழந்தைகள் சில விஷயங்களில் அடம்பிடித்துத் தொந்தரவு செய்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக அதை நிறைவேற்றக் கூடாது. கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில நாட்களில் தீவிரம் குறைந்துவிடும். குழந்தைகளின் மிரட்டலுக்குப் பெற்றோர் அடிபணியக் கூடாது.

அழுது அடம்பிடித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றப் போராடுவதைவிட, வேறு விஷயத்தில் குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்புவது எளிது.

ஒரு விஷயத்தைச் செய்யாதே எனத் திரும்பத் திரும்பச் சொல்வதைவிட, வேறொன்றைச் செய் என்று வழிகாட்டுவது பலனளிக்கும்.

டிவி பார்க்கும் நேரத்தை வரைமுறைப்படுத்தி, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.

மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

உற்சாகப்படுத்துங்கள்

நல்ல பழக்க வழக்கங்களைச் செய்யும்போதோ அல்லது ஒரு விரும்பத்தக்க பழக்கத்துக்கு மாறும்போதோ உடனடியாக உற்சாகப்படுத்துங்கள். உங்கள் ஊக்குவிப்பு சாதாரணப் பாராட்டு, தட்டிக்கொடுத்தலில் இருந்து சிறிய பரிசு பொருட்கள், சாக்லேட்டாகக்கூட இருக்கலாம்

நீங்கள் நினைத்த குறிக்கோளைக் குழந்தைகள் அடைந்தால் மட்டுமே வாக்குறுதி கொடுத்த பரிசையோ, பொருட்களையோ கொடுங்கள்.

பாராட்டும்போதோ, பரிசு கொடுக்கும்போதோ ‘நீ இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய் அல்லது இந்தக் கெட்ட பழக்கத்தைக் கைவிட்டிருக்கிறாய், அதற்காகத்தான் இந்தப் பரிசு’ என நினைவுபடுத்திக் கொடுங்கள்.

தண்டனை தேவையா?

குழந்தைகளுக்குத் தண்டனைகள் தேவைதான், ஆனால் அதைக் கொடுக்கும் விதம் மிகவும் முக்கியம்.

தவறான செயல்களை, அவற்றின் தீவிரத்துக்கு ஏற்ப உடனடியாகத் தண்டிக்க வேண்டும். காலம் தாழ்த்துவது எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.

தண்டனைகள் வயதுக்கு ஏற்றவையாக இருப்பது அவசியம். ஆத்திரப்படுதலைத் தவிப்பது நலம்.

குழந்தைகளுக்குத் தாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பது கண்டிப்பாகப் புரிந்திருக்க வேண்டும்.

அறியாமல் செய்த தவறுகளுக்குத் தண்டிக்கக் கூடாது. உதாரணமாகக் கையில் உள்ள டம்ளர் தவறி விழுவதால் தண்ணீரைக் கொட்டுவது 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான். இது மாதிரியான விஷயங்களுக்கு அவசரப்பட்டுத் தண்டிக்கக் கூடாது.

ஒரு குழந்தை விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டால், அக்குழந்தைக்கு மிகவும் பிடித்தமானவற்றைக் கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம். உதாரணமாக 5-10 நிமிடங்கள் சுவர்ப்புறமாகத் திரும்பி உட்காரவைப்பது, அன்றைக்கு விளையாடும் அல்லது டிவி பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, சிறிது நேரம் பேச மறுப்பது போன்றவை பலன் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x