Last Updated : 11 Apr, 2015 04:00 PM

 

Published : 11 Apr 2015 04:00 PM
Last Updated : 11 Apr 2015 04:00 PM

உறவில் திருமணத்தால் வரும் ரத்தம் உறையாமை

உலக ஹீமோபீலியா நாள்- ஏப்ரல் 17

சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் அழுதபோதெல்லாம் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. ரத்தம் வடிந்தது. அந்தச் சிறுவனுக்கு ஹீமோபீலியா பாதிப்பு என்று மருத்துவ உலகம் கூறியது. ரத்தம் உறையாமை நோய் (hemophilia) எனப்படும் ஹீமோபீலியா, அரிய வகை நோய்களில் ஒன்று.

அதென்ன ரத்தம் உறையாமை நோய்? கையில் சின்ன காயம் ஏற்படுகிறது. உடனே ரத்தம் வழிகிறது. சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடுகிறது அல்லவா? அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால்? அதுதான் ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும்.

மரபியல் கோளாறு

இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்களும் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, இதைப் பரம்பரை நோய் என்கிறார்கள். ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்கூட ரத்தக் கசிவு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சிகிச்சை

இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது? பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிறத் தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம் உறையாமை நோய் இருக்கலாம்.

இந்நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

மேலும் அறிய: >www.hemophilia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x