Published : 04 Apr 2015 03:07 PM
Last Updated : 04 Apr 2015 03:07 PM
எனக்கு உடலில் சத்தே இல்லை. அடிக்கடி சோர்வாக வருகிறது. மருத்துவரிடம் பரிசோதித்தபோது, ரத்தசோகை இருப்பதாகச் சொன்னார். மருந்து, மாத்திரைகளைக் காட்டிலும் உணவு மூலமே நல்ல பலன் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். ஆயுர்வேதத்தில் இந்நோய்க்கு என்ன மருந்து இருக்கிறது?
- பொன்னம்மாள், திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி.
ரத்தசோகை நோயை ஆங்கில மருத்துவத்தில் anemia என்றும், ஆயுர்வேதத்தில் `பாண்டு நோய்’ என்றும் அழைப்பார்கள். பொதுவாக இது இரும்புச் சத்து குறைபாட்டால் வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் தேவையான அளவு சிவப்பணுக்கள் இருக்காது. சிவப்பணுக்கள் உடலில் உள்ள தாதுக்களுக்குப் பிராண வாயுவைக் கொடுத்து உதவுகின்றன. ரத்தசோகையில் பல நுண் பிரிவுகள் உள்ளன. இரும்புச் சத்து குறைபாட்டால் வரும் சோகை நோயைப் பற்றி பார்ப்போம்.
உடலில் இரும்புச் சத்து குறைந்தால் ரத்த அணுக்கள் உருவாகாது. நடைமுறையில் நாம் அதிகமாகப் பார்க்கும் சோகை நோய், இரும்புச் சத்து குறைவதால் வருவதே.
நம்முடைய `ஊன்’ என்று சொல்லக்கூடிய எலும்பு மஜ்ஜையில் இருந்து சிவப்பணுக்கள் உருவாகின்றன. இந்தச் சிவப்பணுக்கள் உடலில் வியாபித்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு வாழ்கின்றன. பிறகு மண்ணீரல் இதை அப்புறப்படுத்துகிறது.
ரத்தசோகைக்கான காரணங்கள்
சிவப்பு அணுக்களில் இரும்புச் சத்து பெரும் பங்கு வகிக்கிறது. இரும்புச் சத்து இல்லையென்றால் ரத்தத்தால் பிராண வாயுவைக் கையாள முடியாது.
பொதுவாக உணவில் இருந்தே இரும்புச் சத்து கிடைக்கிறது. நமது உடலில் இரும்புச் சத்தின் சேமிப்பு குறைகிறபோது, ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
சிலருக்கு மூலம் போன்ற நோய்களில் ரத்தம் வெளியேறும், மாதவிடாய் காலங்களில் ரத்தம் வெளியேறும், வயிற்றில் குடல் புண் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும். ஒரு சிலரின் உடலில் இரும்புச் சத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்காது. குறிப்பாகப் பேறு காலங்களிலும் தாய்ப்பால் ஊட்டுகிற காலங்களிலும் இரும்புச் சத்து அதிகமாகத் தேவைப்படும்.
ஒரு சில நேரம் உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், சிறுகுடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், வலி நிவாரணி மாத்திரைகளான ஆஸ்பிரினை அதிகம் சாப்பிடுதல் போன்றவற்றால் ரத்தசோகை உருவாகலாம். முடக்குவாதம் போன்ற நோய்களாலும் ரத்தசோகை ஏற்படலாம். குடல்புண் உள்ளவர்கள், வயிற்றில் bypass surgery செய்தவர்கள், சைவ உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுபவர்கள், வயதானவர்களுக்கு ரத்தசோகை அதிகம் ஏற்படுகிறது.
அறிகுறிகள், பரிசோதனை
பொதுவாக ரத்தம் சற்றுக் குறைந்தவர்களிடம் அதிக அறிகுறிகள் காணப்படுவதில்லை. மற்றபடி மிகவும் அசதியாகவும், சோர்வாகவும் இருக்கும். உடற்பயிற்சி செய்தால் அசதி அதிகமாக இருக்கும். தலைவலி அதிகரிக்கும், மனதை ஒருமுகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும்.
கண்கள் வெளிறிப் போய் இருக்கும் (Pallor), நகங்களில் மாறுபாடு ஏற்படும். குழந்தைகளுக்கு மண், சாக்பீஸைச் சாப்பிடத் தோன்றும். தலை லகுவாக இருக்கும். எழுந்து நிற்கும்போது மயக்கம் ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். வாயில் புண் ஏற்படும். உடல் எடை குறையலாம்.
இதற்கு hemoglobin, hematocrit போன்ற பரிசோதனைகள் serum iron level, ferritin, iron binding capacity போன்றவற்றைச் செய்து பார்க்கலாம். அபூர்வமாக bone marrow examination, endoscopy, colonoscopy போன்றவை தேவைப்படும். இரும்புச் சத்து உள்ள உணவை அதிகம் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு சிலருக்கு இரும்புச் சத்து மிகவும் குறைந்திருந்தால் ஊசி போடச் சொல்வார்கள். பேறுக் காலங்களில் அதிக இரும்புச் சத்து தேவைப்படும். இரண்டு மாதங்களில் இதைச் சரிசெய்ய வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள் என்றால், பன்னிரெண்டு மாதங்கள்வரை சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
இரும்புச் சத்து மிக்கவை
கோழிக் கறி, பாசிப் பயறு, பீன்ஸ், மீன், இறைச்சி, சோயா பீன்ஸ், முந்திரிப் பருப்பு, கீரைகள், பேரீச்சம் பழம், வெல்லம், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் கல்லீரல், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
ரத்தசோகை நோய்க்குத் திராட்க்ஷா, ஆடாதொடை, சிற்றமிர்து குடிநீர், மண்டூர வடக மாத்திரை, அயகாந்த செந்தூரம், சோற்றுக் கற்றாழை- இரும்புச் சத்து சேர்த்துச் செய்யப்பட்ட குமாரியாஸவம், திராக்ஷாதி அரிஷ்டம், சிஞ்சாதி லேகியம் போன்றவை அதிகப் பலனை அளிக்கின்றன.
எளிய மருத்துவம்
ஒரு கப் மோரில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அயகாந்த செந்தூரம் 1 கிராம் சேர்த்துக் குடித்துவந்தால், ரத்தம் சோகை விடுபட உதவும்.
பழைய காலத்தில் இரும்புச் சட்டியில் சாரணை வேரை அரைத்துத் தேய்த்து விடுவார்கள். அது உலர்ந்த பிறகு அதைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். இதில் சமைத்து உண்டால் ரத்தத்தை அதிகரிக்கும்.
வீக்கத்தைக் குறைக்கும். இரும்புச் சத்தை உடல் ஏற்றுக் கொள்வதற்கு vitamin B12, C போன்றவை தேவை. ஆயுர்வேதத்தில் ரத்தச் சோகை நோய்க்கான சிகிச்சைக்கு மோரையே அனுபானமாக கொடுப்பது வழக்கம். இதற்கு extrinsic factor என்று பெயர்.
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ரத்தச் சோகை குறையும்.
பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்துத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் ரத்தச் சோகை முழுமையாக அகலும்.
கேரட்டைத் தோல் நீக்கி இடித்துச் சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தச் சோகை குறையும்.
செம்பருத்திப் பூவின் இதழ்களைக் காயவைத்துப் பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் உடலில் பலவீனம் குறைந்து ரத்தம் தூய்மையடையும்.
கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளதால், ரத்தச் சோகையைக் குறைக்கும். எள்ளை நன்கு காயவைத்து லேசாக வறுத்துப் பொடி செய்து, அதை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு பால், பனை வெல்லம் சேர்த்துக் காலையும் மாலையும் அருந்தி வந்தால் ரத்த சோகை குணமாகி உடல் வலுப்பெறும்.
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல்,
நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT