Published : 11 Apr 2015 03:51 PM
Last Updated : 11 Apr 2015 03:51 PM

கொழுப்பு அதிகமாகிப் போச்சா?

‘உனக்குக் கொழுப்பு அதிகமா போச்சு!’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால் கோபம் வரும். ஆனால் அதையே மருத்துவர் சொன்னால் பயம் வரும், கவலை வரும்; அப்படித்தான் வர வேண்டும்.

நோயாளியின் உடலமைப்பைப் பார்த்தே பல விஷயங்களை மருத்துவர்கள் ஊகித்துவிடுவார்கள். மறைந்த டாக்டர் ரங்காச்சாரி இந்தத் திறமையை அதிகம் பெற்றிருந்தார் என்று சொல்வார்கள். நோயாளி தன்னை நோக்கி நடந்துவருகிற தினுசைப் பார்த்தே, அவருக்கு என்ன கோளாறுகள் என்று கண்டுபிடித்துவிடுவாராம். சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் அவருக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.

எனது மருத்துவ நண்பருக்கு நோயாளியின் இடுப்பிலும் பிட்டத்திலும் கவனம் அதிகமாகப் பதியும். பெரிய தொப்பையும் மெலிந்த கால்களும் கொண்டவர்களை அவர் ‘பம்பரம்’ என்று குறிப்பிடுவார். இடுப்புவரை மெலிந்தும் அதற்குக் கீழே பிட்டங்களும் தொடைகளும் பெருத்திருப்பவர்களை ‘சுரைக்காய்’ என்று அழைப்பார்.

வயது, உயரம், எடை, உடல்நலம் போன்றவையெல்லாம் சமமாக உள்ளவர்களில், சுரைக்காய் மனிதர்களைவிட பம்பர வடிவ மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

நல்லதும் கெட்டதும்

பொதுவாக ஆண்களுக்கே பம்பர வடிவம் அதிகமாக அமைகிறது. பெரும்பாலான பெண்கள் சுரைக்காய் வடிவத்தில் இருக்கிறார்கள். ஆகவே, சராசரியாக ஆண்களைவிடப் பெண்கள் குறைவான உடல்நலக் குறைகளுடன் இருக்கிறார்கள்.

உடலில் கொழுப்புச்சத்து உபரியாகிறபோது, அது ஆண்களுக்குத் தொப்புளைச் சுற்றித் திரளும். இது மிகவும் ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களின் உடலில் உபரியாக உருவாகும் கொழுப்பு பிட்டங்களிலும் தொடைகளிலும் போய்ச் சேருகிறது.

இதயக் கோளாறுகள், ரத்தக் குழாய் அடைப்பு, நீரிழிவு போன்றவை தாக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய ஓர் எளிய உத்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேராக நின்றுகொண்டு தொப்புள் மட்டத்தில் இடுப்புச் சுற்றளவையும், பிட்டங்கள் பெருத்திருக்கிற இடத்தின் சுற்றளவையும் அளக்க வேண்டும்.

இடுப்புச் சுற்றளவைப் பிட்டச் சுற்றளவால் வகுத்தால் இடுப்பு-பிட்டத் தகவு என்ற எண் கிடைக்கும். ஆண்களுக்கு இது அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது. உச்சவரம்பை மீறினால் உபத்திரவம்தான்.

கொழுப்பு ஆபத்து

ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பிட்டத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது. சில பேருக்குக் கால்களில் ரத்தக் குழாய்கள் பெருத்து முண்டும் முடிச்சுமாகத் தெரியலாம். மற்றவர்கள் அதைக் கவனிக்கும்போது கூச்சமாயிருக்கும். அதை எளிதாகச் சரி செய்துவிடலாம்.

பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் தொப்பையில் கொழுப்பு அடி வயிற்றுப் புழையிலும் சிறுகுடல் பகுதியிலும் திரளும். தோலின் அடியில் திரளும் கொழுப்பு கொஞ்சம்தான். தொப்புளுக்கு அருகில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பயன்படுத்திக் கிள்ளிப் பார்க்கிறபோது ஒரு அங்குலத் தடிமனுக்கு மேல் சதை சிக்கினால் கொழுப்பு ஏறிவிட்டதாக அர்த்தம்.

வயிறு முழுக்க பெண்களுக்கு இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு சேர்ந்தாலும் அதேநேரம் பிட்டத்திலும் சேர்ந்து பிட்டம் பெருத்துவிடுவதால் இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாகாது. பெண்களின் தோலுக்கும் தசைச் சுவருக்கும் இடையில்தான் கொழுப்பு அதிகமாகச் சேரும்.

கிள்ளினால் மடிப்பு தடிமனாக இருக்கும். கொழுப்பு அடிவயிற்றுப் புழைக்கு வெளியில்தான் சேர்ந்திருக்கும். ஆண்களுக்கோ கொழுப்பு தசைச் சுவர்களுக்கு உள்ளேயும் பரவி, அடிவயிற்றுப் புழையில் குடல்களையும் மற்ற உறுப்புகளையும் மூடியிருக்கும்.

அவ்வாறானவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நேரும் மருத்துவர்களுக்கு எரிச்சலாக வரும். வயிற்றைத் திறந்து பார்க்கிறபோது எல்லா உள்ளுறுப்புகளையும் மஞ்சள் நிறத்தில் கொழுப்புப் படலம் பாளம் பாளமாக மூடியிருக்கும். குடல் வாலையோ, பிற பகுதிகளையோ தொட்டுப் பார்க்க முடியாமல் இடைஞ்சல் செய்யும். அதை அறுப்பதும் கடினம், தைப்பதும் கடினம்.

இதய நோய்

குடல்களை மூடியவாறு பெரிடோனியம் என்ற சவ்வு உறை உள்ளது. அதில் பிரிஅடிபோசைட்டுகள் எனும் செல்கள் உள்ளன. அடிவயிற்றில் கொழுப்பு சேரும்போது அவற்றில் டிரைகிளிசரைடுகள் என்ற கொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும் நிறைந்து பெரிடோனியம் ஆங்காங்கே வீங்கித் தடித்துவிடும். இவ்வாறு கொழுப்பேறிவிட்ட பின், அந்தச் செல்களின் சுறுசுறுப்பும் வீரியமும் அதிகமாகிவிடும். அவை கல்லீரலுக்குச் செல்கிற ரத்தக் குழாய்களுக்குள் புகுந்தால் ஆபத்து ஆரம்பமாகிறது.

கல்லீரலுக்குள் கூடுதலாகக் கொழுப்பு அமிலங்கள் வந்து சேரும்போது, அது குறைந்த அடர்த்தியுள்ள லிப்போ புரதங்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் அனுப்பும். லிப்போ புரதங்களில் ஒரு பகுதி கெட்ட கொலஸ்ட்ராலாக மாறி ரத்தக் குழாய்களின் உட்பரப்பில் படியும். அதன் காரணமாக ரத்தக் குழாய்கள் சேதமடைந்து இதய நோய்களுக்கு வழிகோலும்.

இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாயிருப்பவர்களுக்கு இவ்வாறான கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். உடல் எடையைக் குறைத்தால் அவை குறையும்.

தேவை கவனம்

பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும் தொடைகளும் இளைக்காது. அவ்விடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும். சிசுக்களின் பாதுகாப்புக்காக இயற்கை, இம்மாதிரி ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.

எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற பேராசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x