Published : 07 Mar 2015 12:09 PM
Last Updated : 07 Mar 2015 12:09 PM
என்னவென்று கண்டுபிடிப்பதற்கு முன்பே முற்றிய நிலைக்குச் செல்லும் பல ஆபத்தான நோய்கள் இருக்கின்றன. அதில் கண் அழுத்த நோய் அல்லது விழி இறுக்கம் எனப்படும் கிளாகோமாவும் ஒன்று. நடுத்தர வயதினர், முதியவர் களைப் பாதிக்கக்கூடிய நோய் இது.
உலக அளவில் 4.47 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 5.86 கோடியாக உயரலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அது சரி, கிளாகோமா என்றால் என்ன?
கிளாகோமா நோய்
‘கிளாகோமா’ என்பது ஒரு வகை கண் நோய். நமது கண்களில் குழாய் போன்ற அமைப்பு உள்ளது. இது கண்களின் கருவிழிப் பகுதிகள் மற்றும் லென்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு விதத் திரவத்தை எடுத்துச் செல்கிறது. இந்தத் திரவம் வரும் வழியிலோ அல்லது வெளியேறும் வழியிலோ தடை ஏற்பட்டால், கண்ணுக்குள் திரவத்தின் அழுத்தம் அதிகமாகிவிடும். அப்போது உற்பத்தியாகும் திரவத்துக்கும், வெளியேறும் அளவுக்கும் இடையே சமமற்ற தன்மை நிலவுவதால், கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாகக் கண்ணுக்குள் உள்ள நுண்ணிய ரத்தக் குழாய்கள் சரிவரச் செயல்பட முடியாமல் போகின்றன. இந்தப் பாதிப்பு அதிகரிக்கும்போது கண்களின் பக்கவாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வைத் திறன் குறைய ஆரம்பிக்கும். இதுதான் கிளாகோமா அல்லது கண் அழுத்த நோய் எனப்படுகிறது.
கிளாகோமாவில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில வகைகளில் மட்டுமே வலி இருக்கும். வலி இருக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் கண் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், வலி இல்லாத வகைகளோ முற்றிய பிறகுதான் தெரிய வரும். பலரும் பார்வையிழப்பு ஏற்படும் ஆபத்தின் விளிம்பில்தான் மருத்துவரைப் பார்ப்பார்கள் என்பதால், சிகிச்சையும் சிக்கலாவது உண்டு.
வலி இல்லாமலும், அறிகுறிகளை வெளியே காட்டாமலும் வரும் பாதிப்பை கிரானிக் கிளாகோமா என்கிறார்கள். பெரும்பாலும் இந்த வகை 'கிளாகோமா'தான் பெரும்பாலோரை அதிகம் தாக்குகிறது.
அறிகுறிகள்
இந்த நோயின் பாதிப்பு உள்ள சிலருக்கு அடிக்கடி லேசான தலைவலி, கண் வலி ஏற்படலாம். ஏற்கெனவே மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால், அதை அடிக்கடி மாற்ற நேரிடலாம். ஆனால், பெரும்பாலும் எந்த அறிகுறியும் வெளிப்படுவதில்லை.
பரிசோதனைகள் மூலம் கண் மருத்துவர்தான் இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும். அதேசமயம் நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோலக் குடும்பத்தில் யாருக்காவது ‘கிளாகோமா’ பாதிப்பு இருந்தாலும், இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
சிகிச்சை முறை
முன் அறிகுறிகளைத் தவறவிட்டால், இரண்டு கண்களிலும் பார்வை பறிபோக வாய்ப்பு உள்ளது. அறிகுறிகளை ஊகித்தவுடன் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொண்டால், குறைந்தபட்சம் ஒரு கண்ணிலாவது பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
சரியான நேரத்தில் கண் மருத்துவரைப் பார்த்துச் சோதனை செய்துகொண்டால், தொடக்க நிலையிலேயே இந்த நோயைக் கண்டுபிடித்துப் பார்வை இழப்பைத் தடுக்கலாம். இந்த நோய் வந்தவர்களுக்குக் கண் அழுத்தத்தைக் குறைப்பதுதான் பார்வையைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி.
கண் அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளக் கண் சொட்டு மருந்துகள் உள்ளன. அதை தவறாமல் பயன்படுத்தினால், கண் அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கலாம். இந்தச் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்.
சிலருக்குச் சொட்டு மருந்துகள் மட்டுமல்லாமல், மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ‘லேசர்’ சிகிச்சை மூலமும் கண் அழுத்தத்தைக் குறைக்க முடியும். கிளாகோமா நோயாளிகள் பலருக்கும் அறுவைசிகிச்சைதான் சிறந்த தீர்வாக இருக்கிறது. ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் மருந்துகளைப் பயன்படுத்துவது கஷ்டம் இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT