Last Updated : 01 Apr, 2014 11:52 AM

 

Published : 01 Apr 2014 11:52 AM
Last Updated : 01 Apr 2014 11:52 AM

ஆட்டிசம்: நோயல்ல, குறைபாடுதான்

கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறையினருக்கு ஓரளவு அறிமுகமான சொல்தான் ஆட்டிசம். பலரும் நினைப்பதுபோல, இது வியாதி இல்லை. இது ஒரு குறைபாடு, அவ்வளவே. போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதில் இருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு.

இதுதான் ஆட்டிசம் என்று வரையறுத்துச் சொல்லமுடியாது. பல குறைபாடுகளின் ஒன்றிணைவு இது. நரம்பியல் குறைபாடு காரணமாக, மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான் ஆட்டிசத்துக்கு வழி வகுக்கிறது. ஆட்டிசத்தின் முதன்மை விளைவுகளில் ஒன்று பலவீனமான சமூகத் தொடர்பு.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்

குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே, ஆட்டிசத்தை இனம் கண்டறிய முடியும்.

* ஒரு வயது வரை புலம்பி அழாமலோ, தனக்குத் தேவையானதைச் சுட்டிக்காட்டாமலோ இருப்பது.

* ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது.

* பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது.

* வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, சமூகத் திறனில் குறைபாடு இருப்பது.

* பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலையவிடுவது.

* நிறைய பொருட்களுடனும், பொம்மைகளுடனும் இருப்பது, அவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதது.

* எதற்குமே புன்னகைக்காமல் இருப்பது.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வருடங்களுக்குள்ளேயோ கண்டுபிடித்து விடலாம். அப்படியும் தவறியிருந்தால் வளர, வளர அவர்கள் செயல்பாட்டில் தென்படும் மாறுதல்களை வைத்து அடையாளம் காணலாம்.

வளர்ந்த பிறகு தோன்றும் மாறுதல்கள்

* மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடத் தயங்குவது, நண்பர்கள் இல்லாமல் இருப்பது.

* எதைப் பற்றியும் மற்றவர்களிடம் சரியான முறையில் பேசத் தெரியாமல் இருப்பது.

* மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளில் பலவீனமாக இருப்பது.

* ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது, அர்த்தம் புரியாமல் பேசுவது.

* குறிப்பிட்ட சில பொருட்களைப் பற்றியோ, விஷயத்தைப் பற்றியோ மட்டுமே எப்போதும் சிந்தனைவயப்பட்டிருப்பது.

இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அடையாளம் காணலாம். ‘நம் குழந்தைக்கு ஆட்டிசத்தின் பாதிப்பு இருப்பதை வெளியே சொன்னால், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ?’ என்ற நினைப்புக்கு இடம் தராமல், உடனே அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை அணுகுவது, குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது. பொதுவாகக் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள்ளேயே குழந்தைநல மருத்துவர்களால் ஆட்டிசம் குறித்து அனுமானித்துவிட முடியும்.

காரணம் என்ன?

ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஜீன்களில் ஏற்படுகிற மாற்றம், சுற்றுச்சூழல் காரணிகளும்கூட ஆட்டிசம் ஏற்படக் காரணமாக அமையலாம். மூளையில் செரட்டோனின் அதிகமாகச் சுரப்பதாலும், மூளைச் செல்களுக்கு இடையே ஒழுங்கற்ற தொடர்பு ஏற்படுவதாலும் ஆட்டிசம் ஏற்படலாம்.

சிகிச்சை முறைகள்

மற்றக் குறைபாடுகளுக்கெனத் தனிப்பட்ட நிபுணர்கள் இருப்பதைப் போல ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழு மூலம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.

முதலில் குழந்தையின் நரம்பியல் தொடர்பான அத்தனை விஷயங்களும் கூர்ந்து கவனிக்கப்படும். காது கேட்பதில் சிக்கலோ, பேசுவதில் தாமதமோ கொண்ட குழந்தைகளைக்கூட, ஆட்டிசம் பாதிப்பு எனத் தவறாக நினைத்துவிடலாம். அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் பல பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே சிகிச்சையைத் தொடங்குவார்கள்.

குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்கள், நடத்தை போன்றவற்றில் மாற்றத்துக்கான பயிற்சியை அளிப்பார்கள். தேவைப்பட்டால் மருந்துகளின் பரிந்துரையோடு பயிற்சியைத் தொடர்வார்கள். தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலம் குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

சென்னையில் சந்திப்பு

ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி ஏப்ரல் 5-ம் தேதி சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள டிஃபென்ஸ் ஆபிசர்ஸ் காலனி இன்ஸ்டிடியூட்டில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களின் சந்திப்பு மாலை மூன்று மணிக்கு நடக்கிறது. இதில் பெற்றோர்கள் இணைந்து இயங்கும்படியான ஒரு கூட்டமைப்பைத் தொடங்க இருக்கிறார்கள். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்கும், வழிகாட்டலுக்கும் இது வாய்ப்பாக அமையும்.

மேலும் விபரங்களுக்கு: 9176613437

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x