Last Updated : 06 Jul, 2019 09:08 AM

 

Published : 06 Jul 2019 09:08 AM
Last Updated : 06 Jul 2019 09:08 AM

காயமே இது மெய்யடா 40: தூங்கு நிம்மதியாகத் தூங்கு...

நமது உடலின் சுரப்புகள் அனைத்துக்கும் மூலாதாரமாக இருப்பவை சிறுநீரகமும் கல்லீரலும். கல்லீரலின் செயல்பாட்டுக்கு உந்தாற்றலாக இருப்பதும் சிறுநீரகமே. இச்சுரப்பிகள் ஒவ்வொன்றும் தன் போக்கில் இயங்குபவை அல்ல.

நம்முடைய அன்றாடச் செயல்பாடுகள், மன உணர்வுகள், தூக்கம், உணவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. உடலின் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் காரணியான பிட்யூட்ரி சுரப்பினை நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவன் என்பார்கள். அதாவது இது மற்ற பல சுரப்புகளைக் கட்டுப்படுத்தவும், செயலூக்கம் தரவும் செய்கிறது.

பிட்யூட்ரி முறையாகச் செயல்பட மேற்சொன்ன தூக்கம், உணவு, மன உணர்வு ஆகியவை முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நெற்றியின் கீழ்ப் பகுதியுடன் மூக்கின் மேல் பகுதி இணையும் இடத்துக்கு நேர் பின்பக்கத்தில் அமைந்துள்ள பட்டாணி அளவுக்கு மட்டுமே உள்ள இச்சுரப்பி உடலின் மற்ற எந்தப் பகுதியையும்விட ரத்தத்தைக் கூடுதலாகப் பெறுகிறது. மனதின் உணர்வுகளை எண்ணங்களை ஒருமுகப்படுத்த முயலும்போது பிட்யூட்ரி தனது மற்ற வேலைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு நமது அப்போதைய விருப்பத்தை நிறைவேற்றத் துணைபுரியும்.

இரவில் சுரக்கும் சுரப்பி

நமது உள்ளுறுப்புகள் 24 மணிநேரமும் எப்படி ஓய்வின்றி இயங்குகின்றனவோ அதுபோல சுரப்புகளும் உள்ளியக்கங்களைப் பொறுத்தும், புற இயக்கங்களைப் பொறுத்தும் சதா எந்த நேரமும் சுரப்பதற்குச் சித்தமாகவே இருக்கின்றன.

ஆனால், இன்றைக்குத் தேவையற்றவற்றை ஒதுக்கிவிட்டு, நாளைக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கான ஆற்றலைப் பெற உள்ளுறுப்புகளை இயக்குவதற்குத் தேவையான பணிகளைச் செய்யும் மெலட்டோனின் போன்ற சுரப்புகள் நம்முடைய ஆழ்ந்த தூக்கத்தில்தான் முழு வீச்சுடன் இயங்குகின்றன.

குறிப்பாக, இரவு பதினோரு மணிக்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்தால் மட்டுமே மெலட்டோனின் போன்ற சுரப்புகளால் நம்முடைய அனைத்து உடல் இயக்கங்களையும் முறைப்படுத்த முடியும். அன்றாடம் இரவு பதினோரு மணிக்கு ஒத்தி வைத்த தூக்கத்தினால் சுரக்க மறுத்த சுரப்பிகள் நாம் சமன்படுத்தத் தூங்கும் தூக்கத்தின் வழியாக ஈடு செய்யப்படாது.

தூக்கம் உடலின் இயல்புணர்வு

தூக்கம் எனும் உடலின் இயல்புணர்வு ஏதோ சோம்பல் என்ற குணவியல்பு என்ற கற்பிதம் அறிவியலுக்கு முரணாக நமக்குள் திணிக்கப்படுகிறது. இரவு பத்து மணிக்குப் பின்னர் நாம் செய்யும் வேலைகள், முதலில் சுரப்புகளைப் பாதிக்கும். சுரப்புகளின் பற்றாக்குறை நாளடைவில் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை முடக்கி, திடீரென ஒருநாளில் சிஸ்டம் ஹேங்அப் ஆவது போல நிலைதடுமாறச் செய்துவிடும்.

இந்த ஹேங்அப் என்பது மூளைப் பாதிப்பையும் உருவாக்கலாம். உடலின் நரம்பியக்கத்தையும் பாதிக்கலாம். அல்லது ஒட்டுமொத்தமாக அனைத்துச் செயல்பாடுகளையும் முடக்கிப் போடும் பக்கவாதம் தொடங்கி கோமா நிலை வரையும் கொண்டுபோகக் கூடும். திடீரென மரணமும் நிகழ வாய்ப்பிருக்கிறது.

ஒருநாளைக்கு ஓரிரு மணி நேரம் மட்டுமே தூங்கி காபி போன்ற பானங்களை மட்டுமே அருந்தித் திரைப்படத் தொகுப்புப் பணியை மேற்கொண்டு வந்த இளம் தொகுப்பாளர் 29-ம் வயதில் மூளை நரம்புகள் தெறித்து மூக்கில் ரத்தம் வழிய இறந்த செய்தியை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்போம்.

மூளை நரம்புகள் தெறிக்கும் முன் அது அவருக்குப் பல அறிவிப்புகளைச் செய்திருக்கும். மாதக்கணக்கான, ஆண்டுக்கணக்கான தலைவலி இன்றி மூளை நரம்பு தெறிக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அத்தலைவலியைப் பொருட் படுத்தாமல் முன்னால் போகிற வண்டியின் இண்டிகேட்டரைக் கண்டுகொள்ளாமல், சாலை விதிகளைப் பொருட்படுத்தாமல் வலி நிவாரணி மாத்திரைகள் போட்டு உடலைக் கசக்கிப் பிழிந்தால் உடல் தன்னியல்பில் முறிப்பை ஏற்படுத்து வதைத் தவிர வேறு வழியே இல்லை.

உதிரப்போக்கை முறைப்படுத்துங்கள்

கடந்த பகுதியில் பார்த்தது போலப் படுக்கையில் சிறுநீர் கசிவது தொடங்கி மாதாந்திர உதிரப்போக்கு சீரின்மை, தலைமுடி உதிர்தல், கர்ப்பப் பைக் கட்டி இவையாவும் ஒரு பெண்ணுக்கு உடல்நலப் பிரச்சினையாக மட்டும் இல்லை.

மாறாகப் பிற்காலத்தில் பிள்ளைப் பேற்றில் பிரச்சினையாக மாறி விடுமோ என்ற மனப் பதற்றத்தையும் வெகுவாக அதிகரித்து, அதுவே உடல்நலப் பிரச்சினையை மேலும் மோசமாக்கி விடுகிறது. மாதாந்திர உதிரப் போக்குக்கும், கர்ப்பப் பைக்கும், கருவுறுதலுக்கும் தொடர்புண்டு. ஆனால், உதிரப் போக்கின் சீரின்மைக்கும், கர்ப்பப் பைக் கட்டிகளுக்கும், மகப் பேற்றுக்கும் தொடர்பில்லை.

உதிரப் போக்கை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பெண்ணுக்கு உண்டு. ஆனால், அது குறித்த அச்சம் தேவையில்லை. அதேபோல் உதிரப் போக்கு சீரற்ற நிலையில் இருக்கும்போது தைராய்டு போன்ற சுரப்புகளும் சராசரி அளவுக்குள் இருப்பது சாத்தியமில்லை. எனவே, அது குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை.

முதலில் ‘பின் தூங்கி முன்னெழுபவள் பெண்’ எனும் பழமொழியைத் தூக்கிப் பரணில் போட்டுவிட்டுப் பத்து மணிக்கு மேல் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் தனது பெண்மையையும் தனது பெண்ணாளுமையையும் உடலையும் சிதைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். முன் தூங்கி, தேவைக்கு ஏற்ப எழுபவளாக மாற வேண்டும்.

தூக்கத்தின் வழியாக முறைப்படுத்திக்கொள்ள வேண்டிய சுரப்புகளை மாத்திரைகள் போட்டு முறைப்படுத்த முயன்றால் தற்காலிகப் பலனை அளிப்பது போலத் தோன்றினாலும் பிற்காலத்தில் அது அனைத்து வகைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மன உணர்வுகளுக்கும் சுரப்புகளுக்கும் உள்ள தொடர்பு குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x