Published : 13 Jul 2019 11:58 AM
Last Updated : 13 Jul 2019 11:58 AM
சில ஆண்டுகளுக்கு முன்னர் கோடையின் உச்ச காலத்தில், ஏதோ ஒரு வேலையாக வந்த சுமார் எண்பது வயதுப் பெரியவருக்குச் சாலையில் அதற்கு மேல் நடக்க இயலவில்லை. பக்கத்திலிருந்த ஏடிஎம் உள்ளே புகுந்துவிட்டார். அங்கே ஆசுவாசப்படுத்திக் கொண்டோ குளிர் தாங்காமலோ வெளியில் வந்தார். வெளியேறிய நேரம் அவரை நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தேன்.
அவரது தள்ளாட்டத்தைக் கவனித்துவிட்டேன். வண்டியை நிறுத்தி அவரை நெருங்க மிகச் சரியாக என் கைகளில் சரிந்தார். அக்கம்பக்கத்தில் ஆட்கள் கூடிவிட்டனர். அப்படியே ஆட்டோவில் ஏற்றி 300 மீட்டர் தொலைவில் இருக்கும் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே சேர்த்த ஒரு மணி நேரத்தில் பெரியவர் இறந்துவிட்டார்.
ஹைப்போதாலமஸ்
இச்சம்பவத்தின் வாயிலாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய உடலியல் அம்சம் இதுதான். நான் அதே வெயிலில் சுமார் 10 கி.மீ. தொலைவு வண்டியில் வந்துகொண்டிருந்தேன். அவர் சரிந்த நேரத்தில் கூடியவர்களும் அதே சாலையில் நடந்துகொண்டிருந்தார்கள். எங்களைத் தாக்கிய வெப்பம் தான் பெரியவரையும் தாக்கி இருக்கும்.
ஆனால், எங்களுக்கு வராத நிலைக்குலைவு பெரியவருக்கு ஏற்படக் காரணம். ஹைப்போதாலமஸின் செயல் திறன் குறைவு. ஹைப்போதாலமஸும் பிட்யூட்ரியும் இரட்டைப் பிறவிகள். பிட்யூட்ரியின் சுரப்புகள் ஏழு, ஹைப்போ தாலமஸினுடையது ஒன்பது.
உடலின் வெப்ப – குளிர்ச்சி சமநிலையைத் தக்கவைப்பதும் கட்டுப்படுத்துவதும் ஹைப்போதாலமஸின் பொறுப்பாகும். புறச்சூழலில் அதீத வெப்பம் நிலவுமானால் ஹைப்போதாலமஸ், தோலின் வியர்வைச் சுரப்பிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து உடலின் மேற்பரப்பில் ஒரு நீர்க் கவசத்தை உருவாக்க, வியர்வையைச் சுரக்கவைக்கிறது.
வியர்வையை உருவாக்க உத்தரவைப் பிறப்பித்த நொடியிலேயே நீரைச் (அதாவது வியர்வையை) சுரக்கக்கூடிய அளவுக்கு வியர்வைச் சுரப்புகள் தயார் நிலையிலிருந்தாக வேண்டும். தோலின் கீழ்ப் பகுதிக்கு நீரை அனுப்பச் சிறுநீரகம் தயாராக இருக்க வேண்டும்.
சிறுநீரகம் அவசர வேலையைச் செய்யும்போது அதற்கு உதவும் அளவுக்கு நுரையீரல் சேமிப்பு ஆற்றலைக் (ரிசர்வ் எனர்ஜி) கொண்டிருக்க வேண்டும். இப்படி அடுத்தடுத்த வேலைகள் நம்முடைய இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப் படாமலே நடந்தேற வேண்டும் என்றால், அந்த உறுப்புகள் எப்போதும் போதிய ஆற்றலுடன் சீரான இயக்கத்திலிருந்தாக வேண்டும்.
அகத் தேவைகளின் சமிக்ஞைகள்
அக இயக்கம் தனது தேவைக்கு ஏற்ற சமிக்ஞைகளைக் கொடுக்கும்போது அவற்றைப் புறக்கணித்துவிட்டு புறத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. அகத் தேவைகளின் சமிக்ஞைகள் என்ன? பசி, தாகம், ஓய்வு, தூக்கம். இந்த நான்கு சமிக்ஞைகள் முக்கியமானவை. அவை போக மேலும் பல நுட்பமான சமிக்ஞைகளை உடல் அறிவித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இந்த சமிக்ஞைகளின் தொடர் மறுப்பும் உடல் உபாதைகளாகவே மாறும் என்ற உண்மை நமக்கு ஒருபோதும் உரைப்பதே இல்லை. உடலின் நுட்பமான தேவைகளை ஈடுசெய்வது குறித்த அக்கறை நமக்கு அறவே இல்லை. குறிப்பாகப் பெண்களுக்கான பாலியல் தேவைகள் குறித்துப் பேசுவது குற்றம் என்றே தன்னளவிலும், வீட்டளவிலும், சமூக அளவிலும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
குழந்தையை ஏற்கும் வயது
பதின்மத்தின் தொடக்கத்தில் இருபாலருக்குமே பாலியல் பற்றிய அறிதல் நாட்டம் மட்டுமே தலைதூக்கத் தொடங்கும். ஆனால், பாலுறவுக்கான சாத்தியங்கள் ஏற்படுமானால் உடல்ரீதியாக அதனைத் துய்க்கும் துணிவு ஏற்படாது. பதின்மத்தின் முடிவில் பாலுறவு ஆர்வம் ஏற்படும்.
ஆனால், அதன் தொடர்விளைவான குழந்தையை ஏற்கும் மன – உடல் பக்குவம் இராது. பெண்ணுக்குத் திருமண வயது 21 என வரம்பு நிர்ணயிப்பதற்கான காரணமே பெண்ணுடல் கர்ப்பம் தரிக்கவும் தரித்த கர்ப்பத்தைச் சுமக்கும் பக்குவத்தை அடைந்திடாது என்பதால்தான்.
இன்று குழந்தை இறப்பு குறைந்திருப்பதற்குக் காரணம் அறிவியல் முன்னேற்றம் மட்டுமல்ல. முந்தைய காலங்கள் போலல்லாமல் காலந்தாழ்த்தி, அதாவது குழந்தைப் பேற்றைத் தாங்கும் வயதாகிய
21-க்குப் பிறகு திருமணம் முடித்தலும் முக்கியமானதாகும். அதேபோல உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிப்பும் உணவு விநியோகமும் முக்கியமான காரணிகள் ஆகும். கல்வியறிவும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் குழந்தை இறப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மறுக்கப்படும் ஆசைகள்
பாலுறவுக்குரிய வயதில் அதற்கான சாத்தியங்கள் மறுக்கப்பட்டுச் சுரப்புகள் நெருக்கடிக்குள்ளாக, மறுபுறம் பாலுணர்வைத் தூண்டும் காரணிகள் அதிகரித்து வருவதையும் இக்காலத்தில் பார்க்கிறோம். இன்று பாலுணர்வுத் தூண்டலற்ற ஊடகப் பரப்பே இல்லை எனும் அளவுக்குப் பரவலாகிவிட்டது. காட்சி ஊடகங்கள் பாலுணர்வுத் தூண்டலை அதிகரிக்க இதற்கு நேர்மாறாகப் பாலுறவை அதற்கு உரிய வயதில் மறுக்கும் சமூகச் சூழலே இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது.
பரவலான வெள்ளைப்படுதல்
உடலின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய தூக்கக் கேடுகளும் நமது உடலின் வெப்பக் குளிர்ச்சிச் சமநிலையைக் குலைத்து உடல் தொல்லைகள் பெருகுகின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு 15 வயது தொடங்கி 48 வரை பெரும் போக்கு எனும் வெள்ளைப்படுதலும் பரவலான ஒன்றாகிவிட்டது.
தற்காலத்தில் அன்றாடம் வீட்டுக்கு வெளியே போகும் பெண்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தேக்கரண்டி அளவிலிருந்து நான்கு லிட்டர் வரை வெள்ளைப் போவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
வெள்ளைப் போக்குக்கும் குழந்தைப் பிறப்புக்குமான நேரடியான தொடர்புகள் என்ன? உதிரப் போக்குக்கும் தைராய்டு சுரப்பின் ஏற்ற இறக்கங்களுக்குமான காரணம் என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்...)
கட்டுரையாளர்,
உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT