Published : 12 Aug 2017 12:40 PM
Last Updated : 12 Aug 2017 12:40 PM
பொதுவாக இறைச்சியை நீர்த்த குழம்பாகச் சமைப்பதற்குப் பதிலாகக் கெட்டியான (கிரேவி) பதத்தில் உண்பதையே பலரும் விரும்புகின்றனர். உணவின் எந்த வகையும் அடர் வடிவத்தில் உள்ளே செல்கிறபோது, அதைச் செரிக்க நமது இரைப்பைக்கு நிறைய நீர் தேவைப்படும். செரிப்பதற்கான நீரை உடலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும். தாகத்தை உருவாக்கி வெளியில் இருந்தும் நீரை குடிக்கச் செய்யும்.
இது செரிமான மண்டலத்துக்கு ஒரு கூடுதல் வேலை என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்தக் கூடுதல் வேலையைச் செரிமான மண்டலம் தொடர்ந்து செய்கிறபோது தொய்வுற்று இரைப்பைப் புண், குடல் புண், உணவுக்குழாய் எரிச்சல் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகிறது. எனவே, செரிக்கக் கடினமான இறைச்சி போன்ற உணவு வகைகளை உண்கிறபோது, கூடிய மட்டிலும் நீர்த்த வடிவத்தில் உண்பதுதான் உடலுக்கு நன்மை தரும். உண்ட உணவை உடனடியாகச் செரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கவும் இணக்கமாகும்.
தோலுடன் சமைப்பதே சிறப்பு: பருப்பு வகைகளைத் தோலுடன் சமைப்பதே அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ற முறை என்று முன்னரே பார்த்துள்ளோம். அதுபோல் கோழியையும் தோலுடன் சமைப்பதே சிறந்தது. தோலுக்கும் சதைக்கும் இடையே கொழுப்புப் படலம் இருக்கும். அதைத் தவிர்ப்பதால் மிகைக் கொழுப்பு சேராமல் தவிர்க்கலாம் என்று கருதுவோர் உண்டு. கொழுப்பு குறித்த பஞ்சாயத்தைத் தனியாக வைத்துக்கொள்வோம்.
தெருவில், தோட்டக் காடுகளில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து இரைதேடி உண்ணும் நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும். இது சமைக்கும்போது தனியாகத் திரளாமல் குழம்புடன் செம்புலப் பெயல் நீராகக் கலந்துவிடும். உண்கிறபோது நாவுக்குச் சுவை கூட்டும். செரிமானத்திலும் தொல்லை தராது. செரிமானத்தில் தொல்லை தராத கொழுப்பு, உடலுக்கு நேரடியாக ஊக்கம் தருவதாகவே இருக்கும்.
மண் பாத்திரம் நல்லது: சரி, குழம்பு சமைக்கும் முறைக்கு வருவோம். இறைச்சி போன்ற கடினத் தன்மை வாய்ந்த உணவைச் சமைப்பது என்றாலே சேர்மானங்கள் கலந்து, அவற்றை குக்கரில் போட்டு அதிகாலை கூர்க்கா போல ஏழெட்டு விசிலைக் கதற விட்டுவிட்டு அக்கடாவென்று அடுத்த வேலையில் இறங்கிவிடும் விசில் வித்தகர்கள் அநேகர்!
காயைத் தடியால் அடித்துக் கனியச் செய்வது போலத்தான், உணவை மிகை அழுத்தத்தில் வேகச் செய்வதும். தொலைக்காட்சியில் ஒருநாளைக்கு நூறுமுறை விளம்பரங்கள் சலிக்காமல் ஓடி பொய்களை நம் தலையில் திணிக்கும் இக்காலத்தில், சில அடிப்படையான உண்மைகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக்கொள்வதில் தவறில்லை. மிகை அழுத்தத்தில் வேகிற உணவுப் பொருள், தனது சத்துக்களை இழந்துவிடும் என்பதை நினைவில் நிறுத்தி, கோழி இறைச்சி சமைக்க மண் பாத்திரத்தையே தெரிவுசெய்வோம்.
மண் பாண்டத்தில் சமைக்கிறபோது கூடுதலாகப் பத்து நிமிடம் ஆகலாம். அதன் சுவை மதிப்பையும் சத்து மதிப்பையும் கணக்கிடுகிறபோது, அந்தக் கூடுதல் பத்து நிமிடமானது பத்தில் ஒரு பங்கு செலவினமே ஆகும். அதுபோக மிகை அழுத்தத்துக்கு உட்படும் உணவுப் பொருளைச் செரிக்கிறபோது, நம் உடலும் மிகை அழுத்தத்துக்கு உள்ளாகும்.
மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது. எனவே, உணவுப் பொருளின் உள்ளுக்குள் புழுங்கி வெந்து இணக்கமாக இருக்கிறது.
ரத்தம் நீக்கியதே நன்மை:
இப்போது நாட்டுக் கோழியை இறகு பறித்து மஞ்சளாபிஷேகம் செய்து, வானத்தைப் போல நீல நிறத் தீயின் நாவுகள் தீண்ட எரிவாயு (மானியம் உஷ்....) அடுப்பில் வாட்டிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் சன்னமான துண்டங்களாகப் போட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். எந்த இறைச்சி ஆனாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும்.
ரத்தத்தை முழுமையாக நீக்குவதற்குக் காரணங்கள் பலவுண்டு. அதில் மிக முக்கியமானது உயிர் உணவின் நீர்த்த வடிவிலான செல்கள் உடனடியாக இறந்து அழுகத் தொடங்கிவிடும் (ஹலால் செய்வதற்கான காரணமும் இதுதான்).
ஆட்டை மஞ்சள் நீர் தெளித்துப் பலியிடுவதற்கான காரணம் அதுதான். ஆட்டை வல்லடியாக இழுத்துச் சென்று வெட்டுக் களத்தில் நிறுத்துகிறபோது ஆட்டுக்கு அச்சம் உச்ச நிலையில் இருக்கும். மஞ்சள் நீர் தெளிக்கும்போது அச்ச உணர்வு திசை தடுமாறி, தெளித்த மஞ்சள் நீரை உதறச் சென்றுவிடும். அந்த உதறல் கேப்பில் ‘சதக்!’.
நம்மவர்கள் மனச் சமாதானம் செய்வதில் சமர்த்தர்கள். மஞ்சள் நீரை உதறுவதை ஆடு தன்னை வெட்டச் சம்மதிப்பதாக எடுத்துக்கொள்வதாகக் கூறுவதுண்டு.
ஆனாலும் எம்80 வாகனத்தில் நான்கைந்து ஆடுகளைப் படுக்கவைத்துக் கட்டிக்கொண்டு போகும்போது அவை ‘மே... மே...’ என்று அடிவயிற்றுக் குரலெடுத்து நம்மை உதவிக்கு அழைக்குமே, அந்தக் குரலை மறந்தால் ஒழிய ஊண் உணவை நிறைவாகச் சுவைக்க முடியாது.
நாய்க்கும் வேண்டாம் பச்சைக்கறி:
கோழிக்கறி வாங்குவதானாலும் கம்பிக் கூண்டில் பல நாட்கள் அடைத்துவைத்த கோழிக்கடையில் வாங்குவதைக் கூடிய மட்டிலும் தவிர்த்துவிடுவேன். பத்துக்குப் பத்து காற்றோட்டமான அறையில் கோழிகளுடன் கோழியாக இரை கொத்தி, நீர் குடித்து உலவ விட்டிருக்கும் கடையில் வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
அதிலும் நான் இறைச்சி உண்ணுகிற நாளைத் தீர்மானிப்பது நானோ எனது இறைச்சி விருப்பமோ வீட்டினரோ அல்ல. நான் வீட்டை விட்டு வாகனத்தைக் கிளப்புகிறபோது நான்கைந்து தெரு நாய்கள் வந்து ‘என்னய்யா எலும்பு கடிச்சி நாளாச்சே’ என்பதுபோல என்னுடைய காலுக்குப் பக்கத்தில் முணகும். அந்த நாள்... எங்கள் வீட்டில் கறி நாள்..!
கிட்டத்தட்ட நான் வாங்கும் கறியளவுக்கே கழிவுக் கறியும் இனாமாகப் பெற்று வந்து நாய்களுக்கும் பூனைகளுக்கும் தனித்தனியாகப் பரிமாறுவதுண்டு.
ஒருமுறை தெருநாய்க் குட்டிகளுக்குக் கறி பரிமாறத் தீர்மானித்து வாங்கி வந்துவிட்டேன். என் மனைவி வந்து தடுத்தாட் கொண்டார். அறச் சீற்றம் பொங்க அவரைப் பார்த்தேன். கறியைப் பறித்துக்கொண்டு போய் உப்பும் மஞ்சள் தூளும் இட்டு வேக வைத்தார். சில நேரம் அவரது இயக்க வேகமே எனது நாவைப் புரள விடாமல் தடுத்து விடும்.
கழிவுக் கால், தோல் அனைத்தும் வெந்து விட்டதா என்று பார்த்து எடுத்து ஆற வைத்து எடுத்துக்கொண்டு தெருவுக்குப் போனார். நான் பரிமாற இருந்த அதே குட்டிகளுக்குப் பரிமாறிவிட்டு, இடுப்பில் கை வைத்து என்னைப் பார்த்துச் சொன்னார்:
“நாய்க்குட்டிகளுக்கு என்றாலும் கறியைப் பச்சையாகப் போடக் கூடாது. குட்டிகள் பச்சையாகத் தின்றால் செரிக்கக் கடினம். இந்த வயதிலேயே பச்சைக் கறியைத் தின்று பழகிவிட்டால் அவை மீண்டும் மீண்டும் பச்சைக் கறிக்கு ஏங்கத் தொடங்கிவிடும். உயிர்க் கறியைக் கடிக்கவும் தயங்காது” என்று.
என்னுடைய இலக்கியப் பெருமிதங்களை எல்லாம் இல்லாள் காலடியில் வைத்துவிட்டு நகர்ந்தேன்.
வன விலங்குகளைக் காப்பது மட்டுமல்ல. நம்மை நம்பியுள்ள நாய், பூனை போன்ற உயிரினங்களைக் காப்பதும்கூட நம்முடைய கடமையே என்ற பொறுப்புணர்வுடன் கோழிக் குழம்பு வைப்பது குறித்து அடுத்த வாரம் பார்ப்போமே.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT