Last Updated : 24 Jun, 2017 12:19 PM

 

Published : 24 Jun 2017 12:19 PM
Last Updated : 24 Jun 2017 12:19 PM

உயிர் வளர்த்தேனே 41: உடலில் காற்று தங்கலாமா?

நான் குடியிருக்கும் வளாகத்தில் கீழ் வீட்டில் ஒரு நண்பர் இருக்கிறார். கட்டுப்பாடு மிகுந்த மனிதர். அநாவசியமாக வெளியில் சாப்பிட மாட்டார். இரண்டு மணி நேர பயணத் தொலைவில் அவருக்குப் பணி. இரவு எட்டு மணி சுமாருக்கு வீட்டுக்கு வருவார். காலை நேரத்தில் உண்ட அவசர உணவையும், மதிய டப்பி உணவையும் பழித்துக்கொண்டே இரவில் ஒன்பது மணிக்கு உண்பார். சுமார் பத்து மணிவரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார். அதற்குப் பின்னர் அவரது நாற்காலி அவரை உட்கார அனுமதிக்காது. எழுந்து போகச் சொல்லி துரத்திவிடும்.

தெருவில் இறங்கி நடப்பார். நடக்க நடக்க பத்தடிக்கு ஒருமுறை ‘பர்… பர்… பர்…’என்று காற்று, முன்னும் பின்னுமாக வெளியேறி, அவருக்குத் தற்காலிக விடுதலை கொடுக்கும். ஆனாலும் உடலில் தேங்கியிருக்கும் மிச்ச சொச்ச வாயுக் கழிவுகள் உட்கார்ந்த இடத்தில், நிற்கிற இடத்தில் அவரை ‘வைச்சு செய்யும்’. வெள்ளைக்காரன் விடுதலை கொடுத்துவிட்டாலும் நம் நிலத்தில் ஆழப் பதித்துவிட்டுப் போன கலாசார, நிதி முதலீடு இன்றுவரை நம்மை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறதே அதுபோல.

ஆக, உள்ளுக்குள் போகும் தீயகாற்றை எச்சரிக்கையாக வெளியேற்றி விட்டாலே, உடலின் வேலை மிச்சம். அது மட்டுமில்லாது அவஸ்தைகளும் தொடர் நோய்களும் இருக்காது. இன்று மக்களிடையே பெருகிவரும் நோய்களுக்கான பல்வேறு காரணிகளில் குக்கருக்கு முக்கிய இடம் உண்டு. வாழ்க்கையை எளிமைப்படுத்துவதாகக் கற்பிதம் செய்துகொண்டு, உடலைச் சிக்கலுக்குள்ளாக்கிக் கொள்கிறோம்.

உடல் சிக்கலுக்கு உள்ளானால் அனைத்துமே சிக்கலாகிவிடும் என்ற எளிய உண்மையை உணரக்கூட இப்போது நமக்கு நேரமில்லை. கண்ணுக்குத் தெரியாத எவரோ சொடுக்கும் சாட்டைக்குப் பணிந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தருணம் இது.

குக்கர் உணவும் வாயுத் தொல்லையும்

நம் மக்கள் நீரின் பண்பை அளப்பதற்கு முன்பு ஒரு அளவீட்டு முறை வைத்திருந்தனர். அது என்னவென்றால் துவரம்பருப்பு எளிதில் வேகக்கூடிய நீர் - மென்னீர் என்றும், நேரம் எடுத்துக்கொள்ளும் நீர் - கடினநீர் என்றும் வகை பிரித்து வைத்திருந்தனர்.

மென்னீரின் உச்சம் மழைநீர். மழைநீரில் சமைத்தால் சோறு, பருப்பு அத்தனையும் தனிச்சிறப்புடன் சுவைக்கும். கொதிக்கும் மழைநீரில் பருப்பைப் போட்டால் அடுத்த நொடியில் காதலன் தொட்ட காதலி பூரித்து மலர்வாளே, அதுபோல் பருப்பு மலர்ந்து இளகிச் சிரிக்கும்.

மெய்யாகவே பருப்பின் புறவிளிம்பு பூப்போல விரிந்து இருப்பதை நம்மால் காண முடியும். இந்த முறையில் பருப்பு மலர்ந்து உயிருக்கு ஆற்றல் வழங்கும்.

முன்னரே சொன்னதுபோல குக்கரில் அவிக்கும் பருப்பு, விருப்பமற்ற தீண்டலுக்கு உள்ளான பெண்போல, இறுகி விரைத்துக்கொள்ளும். குக்கரில் வேக வைக்கும்போது பருப்பில் உறைந்திருக்கும் காற்று ஆற்றல், பிரிந்து வெளியேறுவதில்லை. உள்ளுக்குள்ளேயே அறைந்து திணிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை நாம் உண்ணும்போதும் காற்றுச் சத்து உடலில் உயர்கிறது. அடுத்த வேளை உண்கிறபோது முன்னர் உண்ட உணவு முழுமையாகச் செரித்திருந்தால், அதாவது வாயு வடிவிலான கழிவு முழுமையாக உடலில் இருந்து நீங்கியிருந்தால், காற்றுக் கழிவின் தேக்கம் இருக்காது.

இப்படி உண்பதற்கான அடிப்படை விதியை மீறிக்கொண்டே இருப்பதால்தான் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பின்னர் பருப்பு, கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற சத்து மிகுந்த உணவை உண்டதும், வயிறு உப்பிப் பொருமுகிறது. தொடர்ந்து வாயுப்பிடிப்பு உடல் முழுதும் சுற்றிச் சுழன்று அடிக்கிறது.

விசித்திர முரண்

தற்காலத்தில் பலரும் அடிக்கடி வெளியுணவை உண்ண வேண்டியிருக்கிறது. பல உணவகங்கள் தங்கள் உணவை ‘வீட்டு முறைப்படி சமைக்கப்பட்டது’ என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் வீட்டிலோ உணவகச் சுவையில் வீட்டு உணவைச் சமைக்குமாறு குழந்தைகள் கேட்கிறார்கள். இத்தகைய விசித்திர முரண் எங்கிருந்து எழுகிறது?

வெளியுணவு அனைத்தும் செயற்கையான ரசாயனக் கலப்பில் தயாரிக்கப்படுபவை. அவற்றின் அதீதச் சுவை நாவின் சுவை மொட்டுக்களை ஆழச் சுரண்டிவிடுகின்றன. மென்னுணர்வை இழந்த அந்த நாக்கால் மெய்யான வீட்டுச் சமையலைச் சுவைக்கும்போது நிறைவுகொள்ள முடிவதில்லை. அதுபோக புற உணவு மிகை வெப்பத்தில் சமைக்கப்படுவதும் ஒரு காரணம்.

மிகை அழுத்தத்தில் சமைப்பதைவிட, மிகை வெப்பத்தில் சமைப்பது சற்றுத் தேவலாம். கடந்த வாரம் பருப்பின் இயற்கைச் சுவை கெடாமல் எப்படிச் சாம்பார் வைப்பது என்று எழுதியிருந்தோம். பலர் சமைத்துப் பார்த்து அதன் தனித்துவமான சுவையை மின்னஞ்சலில் பகிர்ந்து நன்றி பாராட்டியுள்ளனர்.

உயிர்ப் பண்பு நிறைந்த சாம்பார் வைப்பது எப்படி?

இங்கே நாம் பார்க்க இருப்பது மிகை வெப்ப சாம்பார். பளபளப்பு ஏற்றப்படாத துவரம் பருப்பை ஒரு மண் பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு அடுப்பில் வேக வைக்கவும். பருப்பு பொங்கி நுரைத்து வழியாமல் இருக்க, முன்போலவே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எண்ணெய் விட்டுக்கொள்ளவும்.

மறுபுறம் அடுப்பில் கனமான இரும்பு வாணலியை ஏற்றி, அதில் மூன்று ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றிச் சூடேறியதும் ஒரு ஸ்பூன் கடுகு (பருத்துத் திரண்ட சாம்பல் நிறக் கடுகு வேண்டாம். பொடிக் கடுகுதான் இதயத்துக்கு ஆற்றல் வழங்கும் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும்), இரண்டு சிட்டிகை வெந்தயம் போட வேண்டும்.

பலர் உணவில் வெந்தயத்தை உரிய அளவு சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், நோய்த் தொல்லைக்காக இளம்பெண்கள் உட்பட பெரியவர்கள்வரை அடிக்கடி வெந்தயத்தை நேரடியாகச் சாப்பிடுவதைப் பார்க்கிறோம், இல்லையா? வெந்தயம் மருத்துவப் பண்புடையது என்றாலும் அளவு மிகுதியாக நேரடியாக உண்பது, தவறான விளைவையே ஏற்படுத்தும். சரி அடுப்பைப் பாருங்கள். கடுகும் வெந்தயமும் வெடிக்கத் தொடங்கிவிட்டன. பத்து இணுக்கு கறிவேப்பிலைத் தழையைப் போட வேண்டும்.

இதற்கிடையில் மூன்று தக்காளிகளை வேகிற பருப்புடன் பிசைந்துவிட்டு மூடிவிட வேண்டும். அரைத் தேக்கரண்டி சீரகத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் திருகி எண்ணெயில் போட வேண்டும். கூடவே மூன்று மிளகையும் உடைத்துப் போடுங்கள். ஒரே ஒரு கிராம்பையும் துவரம் பருப்பு அளவுக்கு ஏற்பப் பட்டையையும் சேருங்கள்.

சரி. உரித்து வைத்த சின்ன வெங்காயம் பத்து, சதுரமாக வெட்டி வைத்த நடுத்தர அளவிலான முள்ளங்கி மூன்று ஆகியவற்றை மொத்தமாகத் தாளிப்பில் போட்டு ஒரு புரட்டு புரட்டி வாணலியை மூடி விடுங்கள். மேற்படி தாளிப்புக் கலவை நிதானமாக வேக, சூட்டைத் தணித்து வையுங்கள். மிக்ஸியின் சின்ன ஜாரில் அரைக் குழிக் கரண்டியளவு மல்லிவிதையைப் போட்டு ஓட விடுங்கள். அது நைஸாக அரைபடாமல், திப்பித்திப்பியாக அரைபட்டதும் அதில் மூன்று காய்ந்த மிளகாயைப் போட்டு ஒன்றிரண்டாக சுற்றி, இக்கலவையைத் தாளிப்புடன் சேர்த்துக் கிண்டி மீண்டும் மூடிவிடுங்கள்.

இப்பொழுது பருப்பு வெந்து தக்காளியும் மசிந்து இருக்கும். அதை இறக்கி, மத்து போட்டு நான்கு சுற்று சுற்றினால் கரைந்த குழம்பு, கலவையாகிவிடும். இதை எடுத்து தாளிப்பு வாணலியில் ஊற்றி, தேவையான அளவு கல்உப்பு சேர்த்து, மூடிபோட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். கமகமவென்று வாசம் உங்களை அழைக்கும். அவசியமானால் இரண்டு கொட்டைப் பாக்களவு புளியெடுத்துப் பொடியாகக் கிள்ளி சாம்பார் மீது தூவி விடவும். நாம் சாதத்துடன் பிசையும் முன்பாகவே புளி கரைந்துவிடும். சுமார் எட்டு மணி நேரம் கெட்டுப் போகாத இந்த சாம்பாரை இரண்டு வேளைக்கும்கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சாம்பாரின் சிறப்பம்சம் என்னவென்று அடுத்த வாரம் பார்க்கலாமே.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x