Published : 29 Jul 2017 12:13 PM
Last Updated : 29 Jul 2017 12:13 PM
க
டந்த வாரம் பார்த்த முளைகட்டிய பயறுகள், அரிசி சேர்த்து அரைத்த கலவையைக் கொண்டு தயாரிக்கும் கஞ்சிக்கு ‘பஞ்ச முஷ்டிக் கஞ்சி’ என்று பெயர். இந்தக் கஞ்சியைச் சிறு வயது முதலே வாரத்தில் ஓரிரு முறை குடிக்கப் பழகிக்கொண்டால் உடலின் உயிராற்றல் பெருகும்.
உயிராற்றல் உள்ள உடலுக்குள் நோய் புக முடியாது. உடலின் நோய் எதிர்ப்பாற்றல் என்பது இயல்பாகவே உள்ளுக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒன்று. நோய் எதிர்ப்பாற்றலின் மீது நம்பிக்கை இல்லாமல், முன்னெச்சரிக்கையாக மருந்துகளின் வாயிலாகத் தடுக்க நினைத்தால் அவை உயிரின் மூலப் பண்பையே சிதைத்துவிடும். இன்று புதிது புதிதாக நோய்கள் பரவலாகி வருவதற்குக் காரணம், உடலின் இயல்பான எதிர்ப்பாற்றல் மருந்துகள் வாயிலாக முடக்கப்பட்டு விடுவதுதான்.
பிரபஞ்சத்தின் பேரழகு
பயறு வகைகளை முளைகட்டிப் பாவிக்குமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதற்குக் காரணம், பயறு முளை விடும்போது வெளிப்படும் அதன் உயிர்ப்பண்பு.
மண்ணுக்குள் புதைத்த ஒரு பயறு, வித்து, கொட்டை அல்லது தானியம், மண் ஏட்டைப் பிளந்து வெளிவருவதை நீங்கள் பார்த்ததுண்டா? பிரபஞ்சத்தின் பேரழகு மிகுந்த அந்தக் காட்சியை, ஒரு மண் தொட்டியிலேனும் உருவாக்கி நம் குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும்.
தொட்டால் நசுங்கிவிடும் அளவுக்கு மென்மையான அந்த முளை எவ்வளவு அழகாகத் தன்னை வளைத்து அரையங்குலக் கனமுடைய மண்ணை முண்டிக்கொண்டு வெளிப்படுகிறது. ஒளிர்வும் மென்மையும் மிகுந்த அதன் துளிர்… அந்தத் துளிரின் பால் மனத்துடன் ஒன்றிக் காதைக் குவித்தால் ‘குவா குவா’ என்ற உயிரின் மென்னிசையை நம்மால் கேட்டுவிட முடியும். ஒரு பயறு முளை கட்டும்போது உயிரின் ஆற்றல் முழுமையும் வெளிப்படும்.
நார்த்தன்மையைச் சேமிப்போம்
பயறின் உள்கூறாகிய பருப்பு, மாவுத்தன்மை மிக்கது. மாவுக் கட்டமைப்பை உடைய உணவுப் பண்டங்கள் அமிலச் சுவையை அளிக்கும். அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள் அனைத்துமே இறுதியில் மாவாக்கப்பட்ட பின்னரே செரிமானச் செயல்பாடுகள் தொடங்கும்.
பருப்பின் மேல்கூடாகிய தோல் நார்ப்பண்பு மிகுந்தது. ஒரு பண்டத்தின் இறுதிக்கூறு நார்க் கட்டமைப்பைக் கொண்டிருந்தால், அது நம் உடலுக்குக் காரச் சுவையை அளிக்கும். அமிலச் சுவை சதைக் கட்டமைப்பை வளர்க்கவும், பராமரிக்கவும் உதவியாக இருக்கும். காரச் சுவை, அமிலத்தின் தீவிரத்தைத் தணிப்பதோடு உடலின் அடிக்கட்டுமானமாகிய எலும்புக்கு உறுதியை அளிக்கும், உயிராற்றலைப் பெருக்கும்.
இன்றுள்ள உடலுழைப்பு இல்லாத சோம்பல் பண்பு மிகுந்த வாழ்க்கை முறையில், பற்களுக்கு மெல்லும் வேலையளிக்காத மாவுத் தன்மை உடைய உணவுப் பண்டங்களையே தொடர்ந்து உண்டுவருகிறோம். மாவின் அமிலத் தன்மையைத் தணிக்கும் நார்த்தன்மையுள்ள உணவு, நம் உணவில் அறவே இல்லை என்று கூறலாம்.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர்வரை வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுகிற பழக்கம் பரவலாக இருந்தது. இயற்கை வழங்கும் உயிராற்றல் குறைகிற பருவத்தில் (ஆண்களுக்கு 32, பெண்களுக்கு 28) அதாவது நடுத்தர வயதில் உயிராற்றலைச் செயற்கையாகத் தற்காலிகமாக மீட்டுக்கொள்ள காரச் சுவை மிகுந்த வெற்றிலை, பாக்குப் போடுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தனர்.
நான் இங்கே சொல்ல வருவது மீண்டும் எல்லோரும் வெற்றிலையைக் குதப்பிக் கொள்ளுங்கள் என்பதல்ல. நம் உணவில் முடிந்த மட்டிலும் நார்த்தன்மை உள்ளவற்றைச் சேர்த்துக்கொண்டால், அது உடலில் மிகுந்திருக்கும் அமிலத் தன்மையைத் தணிக்கும்.
வயிற்றைக் காக்கும் பயறு
நாம் அடிக்கடி பாவிக்கிற துவரை, உளுந்து, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவை தோல் நீக்கிய வடிவத்தில்தான் இன்றைய இயந்திர யுகத்தில் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு காராமணி, மொச்சை, முழுக் கொண்டைக்கடலை ஆகியவற்றை வாரத்தில் ஓரிரு முறையேனும் பயன்படுத்துவதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
பயறுகளின் நார்ப் பண்பு உயிராற்றலை வழங்குவதோடு வயிற்றையும் ‘ஸ்வச் பாரத்’ செய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால் உடலில் தொல்லைகளுக்கு இடமில்லை.
“மொச்சையோ காராமணியோ உண்டால் எனக்கு வாயுத் தொல்லை உருவாகும்” என்று சிலர் சொல்லக் கூடும். உண்மையில் அதற்கு முன்னரே வாயுக் கலனாக இருக்கிறது நம் உடல். அதனால்தான் அப்பயறுகளை உண்டதும் கிளர்ச்சியுற்று காற்று வெளிப்படுகிறது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் சேர்ந்திருக்கும் தீய காற்றை நீக்குவதுதானே தவிர, வாயுப் பண்டங்கள் என்று அபாண்டப் பழி சுமத்தப்பட்டவற்றைத் தவிர்ப்பது அல்ல.
அவ்வாறு தவிர்த்துக்கொண்டே போவதன் மூலமாக உடல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுதான் போகுமே தவிர, அதன் நலன் மேம்படாது. உடலில் தேங்கியுள்ள தீய காற்றை நீக்குவது தொடர்பாகப் பின்னால் பார்ப்போம்.
இளைக்க வைக்கும் கொள்ளு
இப்போது பயறு புராணத்தின் முக்கியமான ஒன்றைக் கடைசியாகப் பார்த்துவிடுவோம். துவர்ப்புச் சுவையும் நார்த்தன்மையும் மிகுந்த பயறு, பொதுவாக நம் உணவுப் பட்டியலில் இடம்பெறாத ஒன்று. அது விலையிலும் மலிவு, சமைப்பதும் எளிது…… அது என்ன பயறு?
கொள்ளு. ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்பது நம்முடைய நாட்டுப்புற வழக்கு.
ஆடிப்பருவத்தில் போதிய மழையின்றி விதைப்பு தவறிப் போனால் புரட்டாசி, ஐப்பசியில் கொள்ளை மேல் தூவலாகத் தூவிவிட்டால் கார்த்திகை, மார்கழிப் பனியில் காய் பற்றி, தை மாதத்தில் விவசாயிகளின் கைக்குத் துணையாக வீடு வந்து சேரும் எளிய பயிர் கொள்ளு. ஆனால், அதன் சத்துப் பலனோ அளப்பரியது.
தற்கால வாழ்க்கை முறையால் உடல் பருமன் மிகப் பரவலான ஒன்றாகி விட்டது. உடல் பருமனைக் கரைக்க உலகெங்கும் எளிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பலவீனமடையாமல் உடல் இளைப்பதற்கான சிறந்த வழி உணவில் கொள்ளைச் சேர்த்துக்கொள்வதே!
குளிருக்குக் கொள்ளு
கொள்ளு கஞ்சி மிக்ஸ், இப்போது பரவலாகச் சந்தைக்கு வந்துவிட்டது. அது பற்றி நாம் அதிகம் பேச வேண்டியதில்லை. எதிர்வரும் மாரிக் குளிருக்கு இதமாகக் கொள்ளுக் கடையல் செய்வது குறித்துப் பார்க்கலாம்.
தேவையான அளவு கொள்ளு எடுத்து மண்சட்டியில் போட்டு அவிக்க வேண்டும். மறுபுறம் மூன்று காய்ந்த மிளகாய், ஒரு குழிக்கரண்டி மல்லிவிதை, இரண்டு தக்காளி, இரண்டு பெரிய வெங்காயம் ஆகியவற்றை அரிந்து போட்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கிளற விட வேண்டும். இந்தக் கலவை ஆறிய பின், வெந்து ஆறிய கொள்ளுப் பயற்றை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிரைண்டரில் விட்டு ஆட்ட வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு புளி சேர்த்துக்கொள்ளலாம்.
கொரகொரப்பாக ஆட்டிய கலவையை எடுத்து கடுகு, சீரகம் தாளிதத்தில் கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து சற்றே குழைந்த புழுங்கல் சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் வயிறு ‘கொண்டு வா, கொண்டு வா’ என்று கேட்டு வாங்கிக்கொள்ளும்.
கொள்ளுப் பயற்றை வறுத்து வழக்கமான தேங்காய்ச் சட்னியும் செய்யலாம். அரிசி, சிறிதளவு உளுந்து, மூன்றில் ஒருபாகம் கொள்ளு சேர்த்து ஆட்டி அடையாகவும் சுடலாம்.
தொடர் சளித் தொல்லை, ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் கொள்ளு சாப்பிட்டுப் பழகிவிட்டால் மிக எளிதாக அவற்றிலிருந்து மீண்டு விடுவார்கள்.
அடுத்து புரதச் சத்தும் உயிர்ச் சத்தும் மிகுந்த இறைச்சி வகைகள் குறித்துப் பார்ப்போம்.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT