Last Updated : 01 Feb, 2014 01:39 PM

 

Published : 01 Feb 2014 01:39 PM
Last Updated : 01 Feb 2014 01:39 PM

அலோபதியுடன் அக்குபஞ்சர் இணைந்தால் சிறந்த பலன் அளிக்கும்: டாக்டர் கோபால கிருஷ்ணன்

இன்றைய வாழ்க்கை சூழலில் நோய்கள் பெருகி வரும் அளவிற்கு அவை குறித்த மருத்துவ விழிப்புணர்வும் வளர்ந்துவருவது ஆறுதலான விஷயம். நோய்களுக்கு பஞ்சமில்லாத நம் நாட்டில் அதற்கு தீர்வு காண அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பல்வேறு மருத்துவ முறைகளை மக்கள் நாடிச் செல்கின்றனர்.. ஆனால், இந்த மருத்துவ முறைகளில் சரிசெய்ய முடியாத நோய்களைக் கூட அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்கிறார் சென்னை தி.நகரைச் சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் கோபால கிருஷ்ணன்.

கடந்த 10 வருடங்களாக அக்குபஞ்சர் சிகிச்சை அளித்துவரும் இவர், இந்த சிகிச்சை முறை பற்றி எடுத்துரைக்கிறார். "இந்த மருத்துவமுறையை நமது ஞான சித்தர்கள் கண்டுப்பிடித்தனர். இங்கு வந்த சீனர்கள் இந்த கலையைக் கற்றுக்கொண்டு, சீனாவில் இதனை மருந்தவ முறையாக நெறிப்படுத்தி பரப்பினர்.

உலகத்தில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் இருப்பதுபோல் நம் உடலிலும் உள்ளது. இதில் குறைபாடு ஏற்படும்போது, நோய் ஏற்படுகிறது. நம் உடலில் இருக்கும் பஞ்சபூத சக்திகளில் எதில் குறைபாடு என்று கண்டறிந்து, இதனை சம நிலை செய்வதுதான் அக்குபஞ்சர் முறை." என்று இவர் விளக்குகிறார்.

ஓரு நீரழிவு நோயாளி தனது கால் பாதிக்கப்பட்டு, அதனை எடுக்க வேண்டிய நிலையில் இவரை அணுகி இருக்கிறார். அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் அவரது காலில் இருக்கும் உயிர்ப்புள்ளிகளில் அக்குபஞ்சர் ஊசிகளை சொருகி சிகிச்சை அளித்து புதிய செல்களை உருவாக்கி குணப்படுத்தியதாக கூறுகிறார் கோபால கிருஷ்ணன்.

இந்த சிகிச்சை முறையில் உடல் சம்பந்தமான நோய்கள் மட்டுமல்லாமல் மன ரீதியான நோய்களையும் தீர்க்க முடியும் என்கிறார் இவர் . "இன்று பலரும் மன அழுத்தம், தூக்கமின்மை, போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக நம் மனதில் எண்ண ஓட்டங்களின் எண்ணிக்கையும், எதிர்மறையான எண்ணங்களும் அதிகமாகும் போது இது போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் வரும்.

இதற்கு அக்குபஞ்சர் மூலம் பஞ்சபுதங்களை சமநிலைக்கு கொண்டு வருவதால் நேர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டு எண்ண அலை ஓட்டங்கள் கட்டுப்பட்டு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ முடியும்" என்று தெரிவிக்கிறார் இந்த அக்குபஞ்சர் நிபுணர்.

அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு காண முடியுமா என்று கேட்டால், "விபத்தில் காயம், எலும்பு முறிவு , பிறவியில் உடலில் ஏற்ப்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இதில் உடனடி மருத்துவம் கிடையாது. ஆனால், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அலோபதியுடன் இந்த மருத்துவ முறை இணைந்தால் சிறந்த பலன் அளிக்கும்." என்று நம்பிக்கை அளிக்கிறார்.

மாற்று மருத்துவம் அல்லது இணை மருத்துவம் என்று சொல்லக்கூடிய அக்குபஞ்சர் போன்ற மருத்துவமுறைகள் இன்று மக்களின் நம்பிக்கையை பெற்றுவருகின்றன. இந்த மருத்துவமுறைகள் நம்பிக்கைக்கு உரியதாக மட்டும் அல்லாமல் மக்களின் பொருளாதார சக்திக்கும் உரிய நேர்மையான மருத்துவ முறைகளாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x