Last Updated : 18 Feb, 2017 10:51 AM

 

Published : 18 Feb 2017 10:51 AM
Last Updated : 18 Feb 2017 10:51 AM

உயிர் வளர்த்தேனே 23: கரம் மசாலா சாதம் தெரியுமா?

பள்ளிக்குப் போகும் நம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸைத் திறந்தால் வாக்குகளை அள்ளிக் குவிப்பது, பளீரென்று `ப்ளோரசன்ட்’ வெளிச்ச நிறத்தில் இருக்கும் எலுமிச்சை சாதமும், உருளைக் கிழங்கு வறுவலும்தான். வாரத்துக்கு எட்டு நாளென்றாலும்கூட அரை தூக்கக் கலக்கத்திலேயே எலுமிச்சை சாதத்தைக் கிண்டி டப்பிக்குள் அடைக்க நமது தாய்மார்கள் `ரோபோ’ போலத் தயாராக இருக்கிறார்கள்.

சுவையில்லாத உணவு நல்லதா?

“நாமென்ன பண்றது. அதுங்க அதைத்தானே வேணும்னு அடம் பிடிக்குதுங்க” என்று குழந்தைகளின் உணவு ரசனை மீது பழிகூறித் தப்பித்துக்கொள்கிறோம். நல்ல கலைப் படைப்புகளைத் தர வேண்டியது, சமூகத்தின் ரசனை மட்டத்தை உயர்த்த வேண்டியது எப்படி ஒரு சிறந்த கலைஞனின் பொறுப்போ, அதுபோலவே தம் குழந்தைகளைத் தேர்ந்த உணவு வகைகளை விரும்பச் செய்வது பெற்றோரின் தலையாய கடமை, பொறுப்பு.

சுவை நீக்கம் செய்யப்பட்ட உணவே உடலுக்கு நலம் தரும் உணவு என்றொரு கற்பிதம் பலரது மனங்களிலும் மிக அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கிறது. இது சுவையில் அக்கறையற்ற உடல்நலத் தீவிரவாதிகள் உருவாக்கிய படிமம். உண்மையில் சுவையும் நலனும் ஒன்றோடு ஒன்றாகக் கைகொடுத்து உதவக்கூடிய இரட்டைப் பிறவிகள். சொத்துக்குச் சண்டை போட்டு உர்ரென உறுமி முறைத்துக்கொள்கிற பகையாளிகள் அல்ல.

செயற்கையான சுவையூட்டிகள்தான் உடல்நலனுக்குத் தீமை தருபவையே தவிர, உணவின் ஆதாரமான இயற்கைச் சுவை, உடலுக்கு நன்மையையும் மனதுக்கு நிறைவையுமே தருகிறது.

மனசு கலந்த உணவு

உணவைத் தயாரிக்கும்போது அதன் மூலப்பொருட்களில் உள்ளுறைந்த சுவை வெளிப்பட்டு, புதியதொரு சுவையைப் பரிமளிக்கச் செய்கிற அற்புதக் கலையே சமையல். சமையல் என்பது கொட்டிக் கிளறி இறக்குகிற தயாரிப்புப் பண்டம் அல்ல. நாசிக்கு மணத்தையும், கண்களுக்கு ஈர்ப்பையும், நாவுக்குச் சுவையையும் நமது உடலின் செல்களுக்குப் புதுக் கிளர்ச்சியையும் தரவல்லவை. இதை உலகின் அனைத்துச் சமூகங்களும் உணர்ந்தே இருந்தன.

நம் பண்பாட்டின் பல சிறப்பம்சங்கள், உலகமயமாதல் அவசரக் கதியில் ஜேசிபிகள் கொண்டு அடித்து நிரவப்பட்டு, கார்பரேட் கலாசாரத்துக்குள் எப்படித் திணிக்கப்படுகின்றனவோ, அதுபோல உணவின் படைப்பாக்கத் திறனும் மிக வேகமாக நம்மிடமிருந்து நமக்குத் தெரியாமலேயே மிக வேகமாக அழித்தொழிக்கப்பட்டு வருகிறது.

`காக்கா முட்டை’ படத்தில் கதையின் இரட்டை நாயகர்களான சிறுவர்கள், பீட்ஸாவை மெல்லும்போது, “நம்ம ஆயா சுட்ட தோசை இதைவிட நல்லாருந்துச்சுடா” என்று கூறுவது வெறும் வேடிக்கை வசனமல்ல, ஒவ்வொரு நேர உணவையும் ஒரு கலைப் படைப்பாக உருவாக்கித் தரும் உயிர்க் கரங்களுக்கு அளிக்கும் விருது!

ஒரு உணவின் சிறப்பம்சம் அதிலுள்ள மூலப்பொருட்கள் என்ன விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதிலோ, எந்த வெப்பத்தில் தயாரிக்கப்பட்டது என்பதிலோ இல்லை. அதைச் சமைத்தவரின் மனசும் ஈடுபாடும் எந்த அளவுக்கு அப்பதார்த்தத்தில் கரைக்கப்பட்டுள்ளது என்பதில்தான் உணவின் சிறப்பு இருக்கிறது.

உணவு தண்டனையா?

சமையல் என்பது தாயின் பொறுப்பு என்று நான் சுருக்க விரும்பவில்லை. குடும்பத்தின் வருமானச் சுமை பெண்களின் தோள் மீதும் இறங்கிக்கொண்டிருக்கிற தற்காலத்தில், குடும்பத்துக்கான உணவுத் தயாரிப்பில் ஆண்களுக்கும் சமப் பொறுப்பு இருக்கிறது. பல பெற்றோர் தம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸுக்கான உணவுத் தயாரிப்பைப் பெரும் தண்டனையாகக் கருதுகிறார்கள். அதைப்போலவே குழந்தைகளும் தமது லஞ்ச் பாக்ஸைத் தண்டனையாகவே நினைக்கிறார்கள்.

பல குழந்தைகள் ‘ஞாபக மறதியாக’ லஞ்ச் பாக்ஸை வீட்டில் விட்டு விட்டுப் போவதை மிகுந்த சிரத்தையுடன் செய்வதைக் காணலாம்.

அவர்கள் நம் குழந்தைகள், வளரும் குழந்தைகள், ஆறு முதல் எட்டு மணி நேரம் கவனம் ஊன்றிப் படிக்க வேண்டிய குழந்தைகள். எனவே, மிகுந்த ஆற்றல் தரும் உணவு வேண்டும் என்பதற்காக இல்லாவிட்டாலும், நாம் சொன்னதற்காக அன்றாடம் பத்துப் பன்னிரண்டு கிலோ எடையுள்ள புத்தக மூட்டையை எலும்பு முதிராத தங்கள் முதுகில் ஏற்றி, பள்ளியில் இரண்டு மூன்று மாடிகளுக்கு ஏற்றி இறக்குகிறார்கள். நம் குழந்தைகள் மீது நம்ம ஊர் கல்வி நிகழ்த்தும் வன்கொடுமை இது.

சமைப்பதில் படைப்பூக்கம் வேண்டாமா?

புத்தக மூட்டையைச் சுமப்பதால் இழக்கும் ஆற்றலை ஈடுசெய்வதற் காகவாவது குழந்தைகளுக்குச் சுவையும் சத்தும் நிரம்பிய உணவை அளிப்பது பெற்றோரின் கடமை. ஒவ்வொரு நாள் லஞ்ச் பாக்ஸும் வியப்பு-ஆர்வத்துடன் திறக்கக்கூடிய ஒன்றாக மிகவும் படைப்பூக்கத்துடன் தயாரிக்கப்பட வேண்டும்.

அடுத்த வேளைக்குக் கட்டும் பொட்டலச் சாதம் என்றாலே, அது புளிப்பு கலந்த எலுமிச்சை அல்லது புளி சாதமாகத்தான் இருக்க வேண்டும். புளிப்பேறி இருந்தால்தான் அது கெடாது என்றொரு கற்பிதம் இருக்கிறது. உண்மையில் உலர்தன்மையுடன் தயாரித்து ஆற வைத்த பின் பேக் செய்த சாத வகைகள் ஆறிலிருந்து எட்டு மணி நேரம்வரை தாராளமாகத் தாக்குப் பிடிக்கும்.

உடல்நலன் என்ன விலை?

இன்றைக்கு அரிசியைச் சோறாக்கிய பின் அதிலுள்ள ரசாயனக் கூறு மிக விரைவாக அதைக் கெடுத்து விடும் என்ற உண்மையை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உண்ணத் தகுதியான அரிசி எது என்ற நுழைவுத் தேர்வில் நாம் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாக வேண்டும். உடல்நலன் என்பது காசு கொடுத்து வாங்குகிற பண்டம் அல்ல. அது நம்முடைய ஒவ்வொரு சிறு நகர்வுடனும் தொடர்புடையது.

தாளிப்பில் வேர்க்கடலை, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுப் பத்துத் துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு மஞ்சளை நுணுக்கிப் போட்டுத் தயாரிக்கிற சாதம் சர்வ நிச்சயமாகக் குழந்தைகள் உடலுக்கு நலம் தரும்தான். ஆனால், அன்றாடம் அதையே தொடர்ந்து உண்கிறபோது எலுமிச்சை சாதத்தில் உள்ள சத்துகளை ஏற்கும் திறன் உடலில் நிறைவு பெற்றுவிடும். அல்லது எலுமிச்சை சாதத்தைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாத நிலைக்கு உடல் தள்ளப்பட்டு விடும். எனவே, ஒவ்வொரு நாளும் புதுப்புது உணவுப் பண்டத்தைக் கொண்டு லஞ்ச் பாக்ஸை நிரப்புவது குறித்துப் பார்க்கப் போகிறோம். இந்த வாரம் சத்தும் சாரமும் நிறைந்த கரம் மசாலா சாதம் குறித்துப் பார்க்கலாம்.

தயாரிக்கும் முறை

தரமான புழுங்கலரிசிச் சாதத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரை அங்குலப் பட்டை, நான்கு கிராம்பு, மூன்று மிளகு, இரண்டு அன்னாசிப்பூ ஆகியவற்றை இளஞ்சூட்டில் புரட்டி மிக்ஸி சின்ன ஜாரில் இட்டுத் தூளாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாறு இஞ்சி துருவல், நசுக்கிய பூண்டு ஒரு பல் வைத்துக்கொள்ள வேண்டும்.

தாளிக்கும்போது வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் நெய் விட்டுச் சூடேற்ற வேண்டும். நெய் உருகியதும் அதில் ஐந்தாறு துளசி இலைகளும், ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி இலை இரண்டைப் போட்டு மிதமான சூட்டில் வதக்கி வாசம் கிளம்பி வரும்போது அதில் இஞ்சி, பூண்டையும் சேர்த்துப் புரட்ட வேண்டும். பின்னர் பட்டை கிராம்புப் பொடியைப் போட்டு ஒரு சுற்று சுற்றி, உதிரியாக உள்ள சாதத்தைச் சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆறவிட்டு லஞ்ச் பாக்ஸில் ஒரு செல்லப் பிராணியை வைப்பது போல லாவகமாக அமர்த்த வேண்டும்.

அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளின் தொண்டையில் இதமாக இறங்கும் இந்தக் கரம் மசாலா சாதம். இதில் உள்ள மூலிகைப் பண்புள்ள காரம் குழந்தைகளின் உடலுக்குக் காற்று ஆற்றலையும், மண் தன்மை மிகுந்த பட்டை, கிராம்பு ஆகியவை தாது ஆற்றலையும் வழங்குகின்றன. இந்த ஆற்றல்களின் வீரியத்தன்மை நெய்யில் மட்டுப்பட்டிருப்பதால் நாவுக்கு இதமான சுவையை வழங்கும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளின் நாவுக்கும் உடலுக்கும் ஏற்ற உணவு இந்தக் கரம் மசாலா சாதம்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x