Published : 11 Mar 2014 04:12 PM
Last Updated : 11 Mar 2014 04:12 PM

காபி குடித்தால்தான் வேலை ஓடுமா?

பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன்தான் விடியும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்துக் காபி அல்லது டீ. வேலை இடைவேளையின்போது பதினோரு மணிவாக்கில் இன்னும் ஒரு டீ. மாலை தேநீர் இடைவேளை என்று சொல்லிக்கொண்டு ஒரு டீ. மாலை ஆறு மணிக்கு லேசாகத் தலைவலிக்கிறது என்ற விளக்கத்துடன் ஒரு டீ அல்லது ஸ்டிராங் காபி.

ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது இந்தப் பானங்களைப் பருகாதவர்கள் குறைவு. இப்படி அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா?

நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காஃபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அளவுடன் இருந்தால்...

ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. அப்படிக் குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாகப் பல மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம்.

ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

அளவுக்கு மிஞ்சினால்

இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும்.

அளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விறைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

சிலருக்குத் தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்குச் சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.

எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அளவுக்கதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகவும் டீ அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

எச்சரிக்கை

நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் இந்தப் பானங்களை எப்படித் தவிர்ப்பது? அவற்றின் துணை இல்லாமல் ஒரு நாளை கழிக்க முடியாதே என்று பலர் கவலைப்படலாம். அதற்கு வழிகாட்டுகிறார் சென்னை காவேரி மருத்துவமனையின் பொது, நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் சிவராமக் கண்ணன்:

“காபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்துதான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில்தான் பாலைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால்தான் பலர் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது என்று சொல்கிறார்கள். இந்த நிலை உகந்தது அல்ல” என்று சொல்லும் சிவராமக் கண்ணன், அதற்கான மாற்று வழியையும் சொல்கிறார்.

“ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு அதிகப்படியாகக் காபி குடித்தே தீர வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு கப் காபிக்குப் பதில் முதலில் அரை கப், பிறகு கால் கப் என்று படிப்படியாகக் குறைக்கலாம். டீ விரும்பிகள் கிரீன் டீக்கு மாறலாம். கிரீன் டீயில் இயற்கையாகக் கிடைக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ஸ் நிறைந்திருப்பது திசுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. எதுவுமே அளவுடன் இருந்தால் வளமுடன் வாழலாம்” .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x