Published : 16 Dec 2013 09:43 PM
Last Updated : 16 Dec 2013 09:43 PM
பாஸ்ட்புட் மோகத்தால் நோய்கள் புற்றீசல் போன்று பெருகி வருவதாக நாகர்கோவிலில் நடந்த மூலிகை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்ட வேளாண்மை, தோட்டக்கலை சமூகம் மற்றும் உள்நாட்டு மூலிகைகள் சங்கம் சார்பில், ‘தற்காலத்தில் மூலிகை பயன்பாடுகள்’ பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவர் நாகராஜ பிள்ளை வரவேற்றார். நாகர்கோவில் டி.எஸ்.பி. ரத்தினவேலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாகர்கோவில் மண்டல மேலாளர் பத்மராகம், தோட்டக்கலைத் துறை அதிகாரி ரிச்சர்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பக்க விளைவு இல்லை
மூலிகை மருத்துவ நிபுணர் ஜான் கிறிஸ்டோபர் பேசியதாவது:
நாகரீகம் என்ற பெயரில் இன்றைக்கு பலரும் பாஸ்ட் புட் பக்கம் திரும்பி விட்டனர். இதனால், நோய்கள் புற்றீசல் போன்று புறப்பட்டுவிட்டன. ஆங்கில மருத்துவம் தலை தூக்கி நின்றாலும், பாரம்பரிய மருத்துவ முறைகள் தான் பக்க விளைவுகள் இல்லாதவை. தமிழகத்தை வாட்டி வதைத்த டெங்கு காய்ச்சலுக்கு கூட நிலவேம்பு கசாயம் தான் கைகொடுத்தது. கால்நடைகளை மிரட்டும் கோமாரி நோய்க்கும் மூலிகை மருத்துவம் தான் கைகொடுத்து வருகிறது.
விழிப்புணர்வு தேவை
தற்போது, இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. உள்நாட்டு மூலிகைகள் சங்கத்தில் 560 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்கண்காட்சியில், 50-க்கும் மேற்பட்ட மூலிகைகளை வைத்துள்ளோம். அதில் பெரும்பாலானவை அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. ஆனால், அவை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என்றார்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை சங்க செயற்குழு உறுப்பினர் நல்லபெருமாள் பேசுகையில், ‘தமிழகத்திலேயே இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டமாக கன்னியாகுமரி விளங்குகிறது. தற்போது, தெருவுக்கு தெரு மருத்துவமனைகள் பெருகி விட்டன. மனித உடலானது, நோய்களின் கூடாரமாகிவிட்டது. இதையெல்லாம் கட்டுப்படுத்த மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.
கருத்தரங்கில் ‘தி இந்து’
கருத்தரங்கில் பேசிய, ஹீல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலுவை ஒஸ்தியான், ‘அண்மையில் ‘தி இந்து’ நாளேட்டில், குமரி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் தோட்டம் அமைத்திருப்பது பற்றிய செய்தி வெளியானது. பரபரப்புகளுக்கு மத்தியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, புருவம் உயர்த்திப் பார்க்க வைத்துள்ள எஸ்.பி.யைப் போன்று ஒவ்வொருவரும் வீட்டில் குறைந்த பரப்பிலாவது தோட்டம் அமைக்க வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment