Published : 27 May 2017 01:00 PM
Last Updated : 27 May 2017 01:00 PM
எனக்கு வயது 60. சமீபத்தில் பணி ஓய்வு பெற்றேன். எனக்கு ரத்த அழுத்தம் 160/90 என்று உள்ளது. இதை நான் வீட்டிலேயே சோதித்துக்கொண்டேன். இதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெறவில்லை. தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். இந்த வயதில் ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்புதான் என்கின்றனர், என் வாக்கிங் நண்பர்கள். இது சரியா?
உங்கள் நண்பர்கள் சொன்னது சரிதான். முதுமையில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், அதற்கு நீங்கள் சிகிச்சை எடுக்காமல் இருப்பது சரியில்லை.
ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல ரத்தமானது ரத்தக் குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது மற்றொரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்துடன் ரத்தமானது ரத்தக் குழாய்ச் சுவர்களை மோதும்போது ஏற்படுகிற அழுத்தத்தை ‘ரத்த அழுத்தம்’ என்கிறோம்.
பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்குரி என்று இருந்தால், அது நார்மல். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது இதயம் சுருங்கி, ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து, உடலில் இருந்து வருகிற ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படுகிற ரத்த அழுத்தம்.
முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம், ஆனால், இது எல்லோருக்குமே சொல்லிவைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் உடல், எடை, உயரம் போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதைப்போல, ரத்த அழுத்தம் சற்று வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலகச் சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்' என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.
முதுமையில் ரத்த அழுத்தம்
பொதுவாக, வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 160-க்கு அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 80-லிருந்து 90-க்குள்ளும் இருக்கும். இதற்கு ‘தனித்த சிஸ்டாலிக் உயர் ரத்தஅழுத்தம்’ (Isolated systolic hypertension) என்று பெயர். காரணம், வயதாக ஆக ரத்தக் குழாய்கள் கடினமாகி, தடிமனாகின்றன. ரத்த ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப அவை விரிந்து சுருங்கச் சிரமப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாயின் உள் அளவு குறைந்துவிடுகிறது. இப்படிக் குறைந்த இடைவெளி வழியாக ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு, இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்கிறது. இதனால், சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரிக்கிறது.
எல்லா வயதினருக்கும் 140 என்பதுதான் சிஸ்டாலிக் அழுத்தத்தின் எல்லை. ஏற்கெனவே இதயப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்றவை உள்ளவர்களுக்குச் சிஸ்டாலிக் அழுத்தம் 130 என்பதுதான் அதிகபட்ச அளவு. இந்த எல்லையைத் தாண்டினால் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்க வேண்டும்.
இப்படியே அழுத்தத்துடன் அது துடித்துக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் இதயச் சுவர் பலவீனம் அடைந்து, வீங்கிவிடும். அப்போது உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயத்தால் உட்செலுத்த முடியாது. முக்கியமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, கிறுகிறுப்பு, மயக்கம், நினைவு இழத்தல், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இந்த நிலைமை தொடர்ந்தால், இதயம் செயலிழக்கத் தொடங்கிவிடும். மாரடைப்பும் வரலாம். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். இந்த ஆபத்துகளைத் தவிர்க்கத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
கவனம் அவசியம்
அடுத்து, முதுமையில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வயது மட்டுமே காரணம் என்று அலட்சியமாக இருக்க முடியாது. உடல் பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், அதிக ரத்தக்கொழுப்பு, புகைப்பழக்கம், மதுப் பழக்கம், மன அழுத்தம், உறக்கமின்மை, போதிய ஓய்வின்மை போன்ற வேறு காரணங்களும் சேர்ந்து இருக்கலாம். அப்போது அவற்றுக்கும் சிகிச்சை தேவைப்படும். ஆகவே, உங்கள் வயதுக்கு ஏற்ப உடல் பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ளுங்கள். உங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்கு அடிப்படைக் காரணம் அறிந்து சிகிச்சை எடுங்கள்.
ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை, மருந்து மட்டுமே சிகிச்சை இல்லை. உப்பு மற்றும் எண்ணெய் குறைந்த ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி. நடைப்பயிற்சி, மன மகிழ்ச்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவைப்படும். இதற்கு உங்களுக்கு உரிய ஆலோசனைகளை மருத்துவரிடம் கேட்டுப் பின்பற்றுங்கள்.
கட்
டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT