Published : 20 May 2017 11:20 AM
Last Updated : 20 May 2017 11:20 AM
என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. சிறுநீர் / மலம் கழிப்பதற்கு டயபர் அணிவிக்கிறேன். குழந்தையைப் பார்க்க வந்த ஒரு தோழி டயபர் அணிவிப்பது நல்லதில்லை என்று சொன்னாள். அவள் சொன்னது சரியா?
உங்கள் தோழி சொன்னது சரிதான்.
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. அதில் எந்த ஒரு அந்நியப் பொருளும் தொடர்ந்து உறுத்தினால், அது அந்தக் குழந்தையின் சருமத்தைப் பாதிக்கவே செய்யும்.
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி ஆடையை / உள்ளாடையை மாற்றத் தேவையில்லை எனும் வசதிக்காக, டயபரைப் பயன்படுத்துவது வழக்கத்துக்கு வந்துவிட்டது. அதிலும் வெளியூர் பயணத்தின்போது குழந்தைகளில் அநேகம் பேருக்கு டயபர் அணிவித்திருப்பார்கள். இதனால் கிடைக்கும் பலன்களைவிட பாதகங்கள்தான் அதிகம் என்பதைப் பெற்றோர் உணர்வதில்லை.
என்னென்ன பாதகங்கள்?
# செயற்கை நூலில் தயாரிக்கப்பட்ட டயபர்கள் குழந்தையின் சருமத்துக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணும். சரும அழற்சி, சருமம் சிவந்துபோதல், சரும வறட்சி, அரிப்பு, புண், சருமம் நிறம் மாறுதல் போன்ற பல தொல்லைகள் தொடரும்.
# இறுக்கமான டயபரை அணிவித்தால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது. ஈரம் குறையாது என்பதால் பூஞ்சைக் கிருமிகள் வளர்வதற்கான சூழல் உருவாகிறது.
# குழந்தையின் சிறுநீர் / மலம் நீண்ட நேரம் டயபரிலேயே இருப்பதால், அவற்றிலிருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைக்கு அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இது வழிவகுக்கும். இந்த எரிச்சலின் காரணமாகக் குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருக்கும்; சாப்பிட மறுக்கும்.
# டயபரில் சிறுநீரை உறிஞ்ச சோடியம் பாலி அக்ரிலேட், டயாக்சின், தாலேட் போன்ற வேதிப்பொருட்களும் நறுமணத்துக் காகப் பல வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படலாம். முக்கியமாக, தொடை இடுக்குகளில் அரிப்பு, புண் போன்றவை ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
# டயபரை 4 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஆனால் சில பெற்றோர்கள், குழந்தைகள் அதில் மலம் கழித்ததுகூடத் தெரியாமல், அப்படியே வைத்திருப்பார்கள். இதனால் குழந்தைகள் எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்தக் கிருமித்தொற்றைத் தடுக்க, சில டயபர்களில் ஆன்டிசெப்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் குழந்தைகளின் மென்மையான சருமத்தைப் பதம் பார்த்துவிடும்.
# 24 மணி நேரமும் டயபரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும், சிறுநீர் வருவதைப் பெற்றோருக்கு உணர்த்தத் தெரியாது. டயபர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது ஆகிய தவறுகளைச் செய்யத் தொடங்குவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
டயபரை எப்படிப் பயன்படுத்துவது?
டயபர் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை என்றால், கீழ்க்காணும் வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்:
# பருத்தித் துணியில் தயாரிக்கப்பட்ட டயபர்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
# ஒவ்வொரு முறை டயபரை மாற்றும்போதும், பருத்தியாலான துணியைத் தண்ணீரில் நனைத்து, முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக மிருதுவாகத் துடைத்து, தேங்காய் எண்ணெயைச் சருமத்தில் தடவி டயபர் அணிவித்தால் சுகாதாரமாக இருக்கும்; சரும அரிப்பும் குறையும்.
# டயபருக்கு ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு, தேவைப்படும்போது மட்டும் ஒவ்வாமைத் தடுப்புக் களிம்பைச் சருமத்தில் தடவிய பிறகு டயபரை அணிவிக்க வேண்டும்.
# வயதுக்கு ஏற்ற டயபரைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். மிருதுவான, மெல்லிய டயபர்கள் சிறந்தவை.
# ஒருமுறை டயபரைக் கழற்றியதும் உடனே அடுத்த டயபர் அணிவிப்பதற்குப் பதிலாகச் சிறிது நேரம் குழந்தையைக் காற்றோட்டமாக இருக்க வைப்பது நல்லது.
# தினமும் அல்லது நாள் முழுவதும் டயபர் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இரவு நேரங்களில் மட்டும் டயபரைப் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கலாம்.
# குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போதும், வெளியூர்களுக்குச் செல்லும்போதும் மட்டும் டயபர் பயன்படுத்தினால் இன்னும் நல்லது.
# டயபர் நனைந்துவிட்டால் உடனே அதைக் கழற்றிவிட வேண்டும்.
# ஒருமுறை பயன்படுத்திக் கழற்றிய டயபரைக் குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை / மலம் கழிக்கவில்லை என்பதற்காக, சிறிது நேரம் கழித்துத் திரும்பவும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
# டயபரை அப்புறப்படுத்துவதிலும் அதிகக் கவனம் தேவை. குழந்தைகள் புழங்கும் இடங்களில் கழற்றி வீசுவது, சுகாதாரமானது அல்ல. அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால், நோய்த்தொற்றுக்கு இடமிருக்காது.
# குழந்தைக்கு இரண்டு வயதுவரை மட்டும் டயபரைப் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு கழிப்பறைகளைப் பயன்படுத்தப் பழக்கப்படுத்துவது நல்லது.
(அடுத்த வாரம்: முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இயல்பா?)
கட்
டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT