Published : 15 Apr 2017 12:48 PM
Last Updated : 15 Apr 2017 12:48 PM

வாசிப்பை வசப்படுத்துவோம்: மருத்துவப் பொக்கிஷம்

சில நூல்கள் படித்து முடித்த பின், நமது செயல்பாடுகளை மேம்படுத்தும். ஆனால், வெகு சில நூல்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே பார்வையையும் எண்ணத்தையும் மாற்றிவிடும். அந்த வகையில் ‘நோயில்லா நெறி’ எனப்படும் சித்த மருத்துவ நூலும் ஒன்று.

நாம் மறந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமாக வாழ்வதற்குக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய வழிமுறைகளை இந்த நூல் தெளிவு படுத்துகிறது. ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பதை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கருத்துகள் இந்நூலில் பொதிந்து கிடக்கின்றன.

அரிய பாடநூல்

ஆசாரக்கோவை, பதார்த்தகுண சிந்தாமணி, தேரையர் நூல்கள், அகத்தியர் நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், திருக்குறள் போன்ற பல நூல்களில் உள்ள முக்கிய மருத்துவக் குறிப்புகளை இந்த நூல் தொகுத்துத் தருகிறது. தேவைப்படும் இடங்களில் ஆதாரப் பாடல்களுடன் விளக்க உரைகளையும் தந்து தெளிவுபடுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு. மருத்துவர் களுக்கு மட்டுமன்றி, பாரம்பரிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற நினைப்பவர்களுக்கும், ஆராய்ச்சி மனப்பான்மையுள்ள மாணவர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு பாடத் திட்டத்தில் இந்த நூல் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பொழுதுகள் விளக்கம்

பெரும் பொழுதுகளுக்குத் தக்கபடி வாழ்க்கையை முறைப்படுத் தினால் நோயில்லாமல் வாழலாம் என்பது முன்னோர்களின் கோட்பாடு. நாம் மறந்துபோன பெரும் பொழுதுகளின் தனித்த உணவு, வாழ்க்கை முறைகளை இந்த நூல் நினைவுபடுத்துகிறது. பெரும் பொழுதுகளில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகளை நம்முடைய தட்பவெப்ப நிலைக்கேற்ப எடுத்துரைக்கிறது.

நீர் சிறப்பு இயல்

தண்ணீரின் அற்புதமான மருத்துவக் குணங்களை விரிவாகப் பேசுகிறது இந்நூல். பனி நீர், ஆலங்கட்டி நீர், மழை நீர் போன்ற இயற்கையின் கொடைகளைப் பற்றி சிலாகித்து, அவற்றின் பயன்களை முன்மொழிகிறது. தேற்றான்கொட்டை, நெல்லிக்காய்களைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும், அருவி நீர், சுனை நீர், கிணற்று நீர், ஏரி நீரின் இயல்புகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

நித்திய ஒழுக்கம்

நோய் நம்மை நெருங்காமல் இருக்க, அதிகாலை விழிப்பு முதல் இரவு உறக்கம்வரை கடைப்பிடிக்க வேண்டிய நித்திய ஒழுக்க முறைகளைத் தெளிவாக வரையறுக்கிறது. மலம், சிறுநீரை முறையாக வெளியேற்றும் உபாயங்கள், பற்களை உறுதிப்படுத்த ஆல், வேல், நாயுருவி போன்ற மூலிகைகளின் அவசியம், உடற்பயிற்சி, யோகப் பயிற்சியின் பலன்கள், குளியல் முறைகள், அதற்குத் தேவைப்படும் மூலிகை கலவைகள், எண்ணெய்க் குளியலின் அத்தியாவசியம், வெவ்வேறு நிற ஆடைகளின் குணங்களை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

முறையான உணவு

காலை, பகல், இரவு எனச் சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள், இளையோர், நடுத்தர வயதுடையோர், முதியோர் என வயதுக்குத் தகுந்த உணவு வகைகள், மிகை உணவு, குறை உணவு, காலம் தப்பிய உணவு எனச் சாப்பிடக்கூடிய உணவின் அளவு மற்றும் நேரம், விஷ உணவுகளின் அறிகுறிகள், ஆறு சுவைகளுக்குத் தத்துவ விளக்கம், தண்ணீரை அருந்த வேண்டிய நேரம், வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நற்குணங்கள், உணவு உண்ணப் பயன்படுத்த வேண்டிய கலங்கள், நீர் பருகத் தேவையான பாத்திரங்கள் என்பது போன்ற உணவு சார்ந்த முக்கிய நுணுக்கங்களை எடுத்தியம்புகிறது.

நித்திரை

உறங்க வேண்டிய கால அளவு, பகல் உறக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிற அறிவியல் நோக்கு, நித்திரை செய்ய வேண்டிய திசை, தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், உறங்குவதற்குத் தேவையான படுக்கை வகைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. ‘இரவில் மர நிழலில் உறங்கக் கூடாது’ என்பது போன்ற அறிவியல் உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது.

வழிகாட்டி

இன்றைய நவீன அறிவியல் விளக்கங்கள் பலவற்றை மரபு ரீதியாகவும், அறிவியல் பார்வையுடனும் அன்றைக்கே சுட்டிக்காட்டிய சித்த மருத்துவக் கோட்பாடுகளின் தொகுப்பே இந்த நூல். நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், புற்றுநோய் என வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள், முறை தவறிய வாழ்க்கை முறையால் சமீபகாலமாகப் பன்மடங்கு பெருகிவிட்டன. இழந்த நம்முடைய வாழ்க்கை முறைகளையும் உணவு முறைகளையும் மீட்டெடுத்து நோயில்லாமல் வாழ்வதற்கு ‘நோயில்லா நெறி’ நூல் வழிகாட்டும்.

நோயில்லா நெறி, மருத்துவர் கோ. துரைராசன்,
வெளியீடு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கம்.
கிடைக்குமிடம்: அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம்,
சென்னை / அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x