Published : 17 Sep 2016 12:15 PM
Last Updated : 17 Sep 2016 12:15 PM
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே, மர்மக் காய்ச்சல் பீதி எல்லோரையும் தொற்றிக்கொள்கிறது. கொசுக்களின் உற்பத்திக்கு வாசல் திறந்துவிடும் மழைக்காலத்தில் விதவிதமான வைரஸ் காய்ச்சல்களின் தாக்குதலுக்கு எல்லையே இருக்காது. அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சலை மட்டுமல்ல, மழைக் காலங்களில் ஏற்படும் இன்ன பிற காய்ச்சல்களையும் சுற்றுப்புறத் தூய்மை மூலம் தடுக்க முடியும்.
காரணம் என்ன?
# டெங்கு காய்ச்சலுக்குக் காரணம் டெங்கு வைரஸ் கிருமிகள். ‘ஏடிஸ் எஜிப்தி’ என்றழைக்கப்படும் கொசுக்களே இந்தக் காய்ச்சலைப் பரப்புகின்றன.
# இந்தக் கொசுக்கள் டெங்குக் கிருமிகளைச் சுமந்து செல்கின்றன. இந்தக் கொசுக்கள் ஒருவரைக் கடிக்கும்போது, டெங்கு காய்ச்சல் அவரைத் தொற்றிக்கொள்கிறது.
அறிகுறிகள்
# அதிகக் காய்ச்சல், பசியின்மை, கடும் தலைவலி, கண்களில் வலி, மூட்டு வலி போன்றவை டெங்கு தாக்கியிருப்ப தற்கான பொதுவான அறிகுறிகள்.
# காய்ச்சல் தீவிரமடையும்போது கை, கால் மூட்டுகளில் வலி, உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவது, வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
எச்சரிக்கை
டெங்கு வைரஸ் உடலில் உள்ள தட்டணுக்களை (பிளேட்லெட்) அழித்துவிடும் தன்மை உடையது. தட்டணுக்கள் குறைந்தால் பல், ஈறு, மூக்கு, மலம், சிறுநீர்ப் பாதைகளில் ரத்தம் வடியும். இது ஆபத்தான நிலையைக் குறிக்கும். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காதபட்சத்தில் மரணம்கூட ஏற்படலாம்.
என்ன செய்வது?
# உடல் வெப்பத்தை 39 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைத்திருக்க வேண்டும்.
# மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அலட்சியமாக இருக்கக் கூடாது. மருத்துவரை அணுகி டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
# டெங்குவுக்குத் தடுப்பூசிகள் கிடையாது. மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரைகளுடன் முழுமையான ஓய்வு அவசியம்.
# அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். நிலவேம்புக் குடிநீரைப் பருகலாம்.
எதைச் செய்யக் கூடாது?
# தொடர்ந்து காய்ச்சல் இருக்கும்போது தாமாகவே மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
# டெங்கு காய்ச்சலோ அல்லது அதற்கான அறிகுறியோ தெரிந்தால் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது. இது காய்ச்சலை அதிகப்படுத்திவிடலாம்.
தடுப்பு முறைகள்
# டெங்கு வராமல் தடுக்கக் கொசுவை அழிப்பதுதான் முதன்மை வழி.
# மழைக்காலத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. பகல் நேரங்களில் கடிக்கும் கொசு என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
# உடலை மறைக்கும் உடைகள், காலுறை, கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
# வீட்டுக்குள் கொசுக்கள் வராதபடி கொசு வலை அடிக்க வேண்டும் அல்லது மாலை நேரத்தில் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
# வீட்டுக்குள் நொச்சி, வேப்பந்தழை போன்றவற்றைக் கொண்டு கொசுக்களை விரட்டலாம்.
# டெங்கு காய்ச்சலில் இருப்பவரையும் கொசு கடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டும்.
# பாத்திரங்கள், பூந்தொட்டிகள், நீர்க் கசிவு உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரில்தான் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பெருகும்.
கொசு பெருகுவது எப்படி?
# தேங்கிய நீரில் இந்த வகைக் கொசுக்கள் தங்கியிருக்கும்.
# வீட்டில் இருக்கும் பழைய டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் தங்கி இனப்பெருக்கம் செய்யும்.
# மரத் துளைகள், கூரை வடிகால்கள், விழுந்த இலைகள், பழைய தகடுகள், ஏ.சி.யிலிருந்து வடியும் நீர், பள்ளத்தில் உள்ள நீர், பயன்படுத்தப்படாத பொருட்கள், தூக்கியெறியப்படும் பேப்பர் - பிளாஸ்டிக் கோப்பைகள் ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் தங்கி இனப்பெருக்கம் செய்து பெருகிவிடும்.
பெருகுவதைத் தடுக்க
# கொசு வராமல் தடுக்க வீடுகளில் நொச்சித் தாவரத்தை வளர்க்கலாம்.
# பயன்படுத்தும் எல்லாப் பாத்திரங்களையும் நன்றாகக் கழுவி, கவிழ்த்து வைக்கவும்.
# நீர் சேமிப்புத் தொட்டிகளில் சிறிய மீன்களை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
# வீட்டின் அருகே தேவையில்லாமல் கிடக்கும் பொருட்களையும், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT